அஸ்வின்ஸ்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா
இயக்கம் - தருண் தேஜா
இசை - விஜய் சித்தார்த்
நடிப்பு - வசந்த் ரவி, விமலா ராமன்
வெளியான தேதி - 23 ஜுன் 2023
நேரம் - 1 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
இந்த டிஜிட்டல் யுகத்தில், 'நியூ ஏஜ்' சினிமா என தாங்கள் நினைப்பதை மட்டுமே படமாக எடுக்க வேண்டும் என சில இளம் இயக்குனர்கள் நினைக்கிறார்கள். ரசிகர்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நாம் எதைக் கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்ற மனோபாவம் அதிகமாக இருக்கிறது. ரசிகர்களுக்குப் புரியும் விதத்தில் ஒரு படத்தைக் கொடுப்பதுதான் கலைத்திறமை.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் வெறும் விஷுவல்களாலும், விதவிதமான ஓசைகளாலும் படத்தைக் கொடுத்தால் ரசிகர்கள் ரசித்துவிடுவார்கள் என்ற மனோபாவமே மிஞ்சி நிற்கிறது. புதிய கோணத்தில் திரைக்கதை என சாமானிய ரசிகன் ரசித்துவிடாதபடி குழப்பியடித்திருக்கிறார்கள்.
சரித்திரப் புகழ் பெற்ற இடங்களில் நடைபெற்ற மோசமான சம்பவங்களைப் பற்றிய இடங்களுக்குச் செல்வது 'பிளாக் டூரிசம்' என அழைக்கப்படுகிறது. அப்படி ஒரு இடத்திற்குச் செல்லும் யு டியூப் சேனல் குழுவினருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. வெறுமனே இதை மட்டும் கதையாகக் கொடுத்தால் கொஞ்சம் போரடித்துவிடும் என ஒரு காலத்தில் நடைபெற்ற கதை என ஒரு பிளாஷ் பேக்கைச் சொல்லி, அந்தக் கதையையும் இந்தக் கதையையும் இணைத்திருக்கிறார்கள்.
யு டியூப் சேனல் ஒன்றை நடத்தும் வசந்த் ரவி மற்றும் அவரது குழுவினர் சிலர், ஒருவர் கேட்டுக் கொண்டதற்காக லண்டனில் உள்ள ஒரு பழங்கால மேன்ஷனுக்குச் செல்கிறார்கள். அங்கு அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதாகவும், அதை வீடியோவாக படமெடுக்கவும் செல்லும் அந்தக் குழுவினருக்கு மர்மமான விஷயங்கள் நடக்கிறது. வசந்த் ரவி தவிர மற்றவர்கள் கொல்லப்பட அவர் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் தருண் தேஜா நிறைய ஹாலிவுட் படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்த்து ரசித்த ரசிகராக இருப்பார் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போதே தெரிகிறது. கதை நடக்கும் இடமும், லைட்டிங் அமைப்பு, சவுண்ட் மிக்சிங் ஆகியவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தியிருப்பதில் இருந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.
'தரமணி, ராக்கி' என இரண்டு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த வசந்த் ரவி, இந்தப் படமும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்து நடிக்க சம்மதித்திருக்கிறார். பேய்ப் படங்களைப் பொறுத்தவரையில் கதாநாயகனை விடவும் அதில் வரும் பேய்கள், கதாநாயகனுக்கான முக்கியத்துவத்தை ஓவர் டேக் செய்துவிடும். இரண்டு படங்களில் நடித்த ஒருவர் அதற்குள்ளாக பேய்ப் படங்கள் பக்கம் வந்திருக்கக் கூடாது. நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் எல்லாம் அப்படங்களில் இருக்காது. ஒன்று பயப்பட வேண்டும், அல்லது பயத்தை மீறி அந்தப் பேயை எதிர்க்க வேண்டும். இவை இரண்டு மட்டும்தான் இருக்கும்.
வசந்த் ரவி தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் நமக்குத் தெரிந்த முகமாக உதயபிரதீப் மற்றும் விமலா ராமன் இருக்கிறார்கள். மற்றவர்களின் முகங்கள் மனதில் கூடப் பதியவில்லை. அவர்களின் கதாபாத்திரங்களுக்கும் படத்தில் அந்த அளவிற்கு அழுத்தமில்லை.
வழக்கமான பேய்ப் படங்களில் பார்ப்பதை விட இந்தப் படத்தில் டெக்னிக்கல் விஷயங்கள் மட்டும் மாறுபட்டு இருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் எட்வின் சாக்கே, இசையமைப்பாளர் விஜய் சித்தார்த், சவுண்ட் டிசைன் செய்த சச்சின் சுதாகரன், ஹரிஹரன், சவுண்ட் மிக்ஸ் செய்த ஹரிஷ் ஆகியோர் ஒரு சவாலாக இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு தங்களைப் பற்றிப் பேசவும், குறிப்பிடவும் வைத்திருக்கிறார்கள்.
வழக்கமான பேய்ப் படங்களைப் பார்த்து போரடித்துவிட்டது, கொஞ்சம் வித்தியாசமான பேய்ப் படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் இந்த 'அஸ்வின்ஸ்' பிடிக்கலாம்.
அஸ்வின்ஸ் - டெக்னிக்கலாக கொஞ்சம் அசத்தல்…