மோகன்லால்-பிரியதர்ஷன் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் 28வது படம் என்கிற எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ஒப்பம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியிருக்கிறதா..?..
கிராமத்தை சேர்ந்த கண் பார்வை தெரியாத மோகன்லால் நகரத்தில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வேலை பார்க்கிறார். அந்த அபார்ட்மென்ட்டில் இருக்கும் ரிட்டையர்டு ஜட்ஜான நெடுமுடி வேணு மோகன்லாலிடம் பிரியம் காட்டுகிறார். வெகுதூரத்தில் உள்ள கான்வென்ட்டில் தனக்கிருக்கும் ஒரே ஆதரவான தனது பேத்தியை படிக்க வைக்கும் நெடுமுடி வேணு, அது பற்றிய விவரங்களை மோகன்லாலிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வதோடு அந்த குழந்தைக்கு அவரையே கார்டியனாகவும் ஆக்குகிறார்..
நெடுமுடி வேணு பல வருடங்களுக்கு முன் ஒரு கொலைவழக்கில் வாசு (சமுத்திரக்கனி) என்கிற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையால் அவமானத்தில் அவரது குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். பல வருடங்கள் கழிந்த நிலையில், சமுத்திரக்கனி தண்டனை முடிந்து கிளம்பிச்சென்ற விபரம் நெடுமுடி வேணுவுக்கு தெரிய வருகிறது. அவர் ரிலீஸான சில நாட்களில் இருந்து, சீரான இடைவெளிகளில் அவருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர்கள் அனைவரும் குடும்பத்தில் ஒருவர் கூட பாக்கியில்லாமல் விதவிதமாக மரணத்தை தழுவுகின்றனர்...
இதற்கு காரணம் சமுத்திரக்கனி தான் என்பதையும் கடைசியாக தானும் சமுத்திரக்கனியின் குறியில் இருந்து தப்பமுடியாது என்பதையும் உணர்ந்த நெடுமுடி வேணு, மோகன்லாலிடம் இந்த விபரத்தை கூறி, தனது பேத்தி பற்றிய விபரம் சமுத்திரக்கனிக்கு தெரியவே கூடாது என்கிறார். மேலும் பேத்தியின் எதிர்காலத்திற்காக மிகப்பெரிய தொகை ஒன்றை மோகன்லாலிடம் கொடுத்து அதை அவள் பெயரில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.. இது நடந்த அன்றிரவே சமுத்திரக்கனியால் கொலை செய்யப்படுகிறார் நெடுமுடிவேணு..
கொலைசெய்துவிட்டு தப்பி ஓட முயற்சிக்கும் சமுத்திரக்கனியை மோகன்லால் தடுக்க, அவரை தாக்கிவிட்டு தப்புகிறார் சமுத்திரக்கனி.. போலீசாரின் விசாரணையில் பணத்திற்காக மோகன்லால் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. தனது தங்கையின் திருமணத்திற்காக மோகன்லால் ஒரு பெரிய தொகையை கொடுத்தனுப்பியதும் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்தநிலையில் ஒரு பக்கம் போலீஸாரின் சந்தேகப்பார்வைக்கும், சித்தரவதைக்கும் ஆளாகும் மோகன்லால், இன்னொரு பக்கம் குழந்தையை கண்டுபிடித்து கொல்லத்துடிக்கும் சமுத்திரக்கனியால் பின் தொடரப்படுகிறார்.. தான் பின் தொடரப்படுவதை உணர்ந்து, தனக்கு வேண்டிய போலீஸ் அதிகாரியான அனுஸ்ரீயின் உதவியை நாடுகிறார் மோகன்லால். ஒருகட்டத்தில் குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து, சமுத்திரக்கனி அங்கேயே வந்துவிட, குழந்தையின் கதி என்ன ஆனது, பார்வை தெரியாத மோகன்லாலால் சமுத்திரக்கனியிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு விறுவிறு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
எந்தவித பில்டப்பும் இல்லாமல் கிராமத்து ஜெயராமனாக, பார்வையற்ற மனிதராக படம் முழுதும் வாழ்ந்திருக்கிறார் மோகன்லால். கொலையாளி அருகில் இருப்பதை வாசனையை வைத்தே உணர்வதும், குழந்தையின் இருப்பிடத்தை சமுத்திரக்கனி கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக ட்ரிக்கான முறையில் சமுத்திரக்கனியை குழப்புவதும் சபாஷ் ஐடியா.
போலீசாரிடம் அடிவாங்கும் காட்சியில் இந்த வயதிலும் ஜட்டியுடன் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவரை ஏன் தி கம்ப்ளீட் ஆக்டர் என்று சொல்கிறார்கள் என்பது புரிகிறது.. அதேசமயம் பூட்டிய அறையில் தான் பார்வையற்றவர் என்றாலும் அந்த லாஜிக்கை மீறாமல் போலீஸ் அதிகாரிகளை புரட்டி எடுக்கிறார் பாருங்கள்.. தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆகிறது. இறுதியில் சமுத்திரக்கனியுடன் மோதும் காட்சிகள் திக் திக் ரகம்..
படத்தின் இன்னொரு முக்கிய தூணாக, சைக்கோ வில்லனாக சமுத்திரக்கனி செம பிட்.. பார்வையில் குரூரம் காட்டுவதும், மோகன்லாலை பின் தொடர்ந்து மானசீகமாக டார்ச்சர் செய்வதும், ஒருகட்டத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் அவரை தள்ளிவிட்டு கொல்ல முயற்சிப்பதும், தனக்கு உதவி செய்த ஆட்டோ ட்ரைவர் அஜூ வர்கீஸை கொன்றுவிட்டு அந்தப்பழியை மோகன்லால் மீது விழச்செய்வதுமாக எந்த இடத்திலும் சோடை பாக்காத வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.
கணவனை வெறுத்து தனியாக வாழும் விமலா ராமன், மோகன்லால் மீது காதலாவதும், பின்னர் போலீஸில் சிக்கிய தன் தம்பியை காப்பாற்றுவதற்காக மோகன்லால் தான் கொலைசெய்தார் என மாற்றிச்சொல்வதுமாக சரசாரி பெண்ணாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். மோகன்லாலுக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் அனுஸ்ரீ நடிப்பில் மிடுக்கு காட்டுகிறார்.
மோகன்லாலை சந்தேகத்தின் பேரில் உள்ளே தள்ள துடிக்கும் போலீஸ் அதிகாரியான செம்பான் வினோத்தும், இன்னொரு அதிகாரியான கலாபவன் சாஜனும் விசாரணை என்கிற பெயரில் மோகன்லாலை பிரித்து மேயும் காட்சிகளில் மோகன்லால் ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். அதேசமயம் அவ்வப்போது வசனங்களால் சிரிக்கவும் வைக்கிறார்கள். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே கீழதிகாரிகள் பேச்சுக்கு தலையாட்டும் உயரதிகாரியாக வரும் ரெஞ்சி பணிகரும் சிரிக்க வைக்கிறார்.
பக்குவாமான நடிப்பை வெளிப்படுத்தும் நெடுமுடி வேணு, நட்புக்காக சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் இன்னொசன்ட், அஜு வர்கீஸ், சித்திக் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பாகவே இருக்கிறது.. காமெடி நடிகரான அஜூவர்கீஸை சீரியஸாக பயன்படுத்தியதுதான் சற்றே ஏமாற்றம் தருகிறது. நந்தினியாக நடித்திருக்கும் பேபி மீனாட்சி செம க்யூட்.
ஒரு சைக்கோ த்ரில்லர் படத்துக்குண்டான அத்தனை தகுதிகளும் இந்தப்படத்திற்கு இருக்கிறது.. நெடுமுடி வேணு கொலை செய்யப்படுவதில் இருந்து சூடுபிடிக்கும் படத்தை, கடைசிவரை சூடு குறையாமல் விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். குறிப்பாக சமுத்திரக்கனிக்கும் மோகன்லாலுக்குமான பூனை-எலி துரத்தலில் ரொம்பவே சுவாரஸ்யம் காட்டியுள்ளார் பிரியதர்ஷன். அதிலும் அந்த குழந்தை பற்றிய ரகசியம் உடையும் இடம் உண்மையிலேயே ட்விஸ்ட் தான். ஒரு அருமையான சைக்கோ க்ரைம் திரில்லர் தந்ததற்காக இயக்குனர் பிரியதர்ஷனுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்..
ஒப்பம் - த்ரில்லர் பட பிரியர்களுக்கு சரியான ஓணம் விருந்து!