ராக்கி,Rocky

ராக்கி - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரா ஸ்டுடியோஸ்
இயக்கம் - அருண் மாதேஸ்வரன்
இசை - தர்புகா சிவா
நடிப்பு - வசந்த் ரவி, பாரதிராஜா
வெளியான தேதி - 23 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொடூரமாகக் கொலை செய்யும் காட்சிகளைக் கொண்ட இப்படிப்பட்ட ஒரு வன்முறைப் படம் இதுவரை வந்ததில்லை. எதற்காக இப்படி திரையில் வன்முறையாட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

படம் பார்த்து முடித்த பின் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தனிமையைத் தேடவேண்டியதாகி விட்டது. ஏற்கெனவே இங்கு சில இயக்குனர்கள் யதார்த்தமாக படம் எடுக்கிறோம் என வன்முறைக்கு ஆதரவாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களின் வரிசையில் இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரனும் இணைந்துள்ளார்.

வட சென்னையில் பெரும் ரவுடியான பாரதிராஜாவுக்கும், வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை. சிறைதண்டனை முடிந்து தன் அம்மா, தங்கையைப் பார்க்க வருகிறார் வசந்த் ரவி. அவரது அம்மா பாரதிராஜாவால் கொல்லப்பட்ட உண்மை தெரிகிறது. தங்கை ரவீணா எங்கு போனார் என்றே தெரியவில்லை. எப்படியோ தங்கையைக் கண்டுபிடித்து போகிறார். அங்கு வந்து ரவீணாவைக் கொல்கிறார்கள் பாரதிராஜா ஆட்கள். பழிக்குப் பழி வாங்க பாரதிராஜாவைத் தேடிப்போகிறார் வசந்த் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாரதிராஜா, வசந்த் ரவி இடையிலான உறவு என்ன, பகை என்ன என்பதை சாமானிய ரசிகனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு படத்தைக் கொடுக்கவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், நிகழ்கால காட்சிகளை வண்ணத்திலும் காட்டுகிறார்கள். சில பல ஆங்கில கேங்ஸ்டர் படங்களின் சாயலில் படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் முயற்சித்திருக்கிறார்.

வசந்த் ரவிக்கு கொல்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. எப்படியும் ஒரு 100, 150 பேரைக் கொன்றிருப்பார். முகத்தில் ஒரு வெறுமை, ஏக்கத்துடன் இருக்கும் கதாபாத்திரம். ஒவ்வொருவரையும் சுத்தியால் பல முறை அடித்துக் கொலை செய்யும் போது ஏதோ நம் மண்டை மீதே அடி விழுவது போல இருக்கிறது.

பாரதிராஜா தான் வில்லன். உட்கார்ந்து கொண்டு பேசியே வில்லத்தனத்தைக் காட்டுகிறார். இவ்வளவு வயதான வில்லன், அவருக்கு இரண்டு வயதான அடியாட்கள், அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமேனாலும் கொல்வார்கள் என நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

ரோகிணி, ரவீணா ரவி ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள். படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் என நான்கைந்து கதாபாத்திரங்கள் மட்டுமே.

ஒரே காட்சி, எதற்காக அத்தனை நீளமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் வசந்த் ரவி நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். 'பாரதி கண்ணம்மா' சீரியலின் கண்ணம்மா நடந்ததை விட அதிக தூரம் நடந்திருப்பார் போலிருக்கிறது. அதன்பின் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார், செல்கிறார், சென்று கொண்டேயிருக்கிறார்.

வித்தியாசம் என்ற பெயரில் முழு படத்தையும் இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் பிரேம்கள் ரசிக்க வைக்கின்றன. தர்புகா சிவா பின்னணி இசையில் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

இந்தப் படத்தை எதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா வாங்கி வெளியிடுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான். இம்மாதிரியான வன்முறை சினிமாக்கள் இன்றைய இளைஞர்களிடம் தவறான எண்ணங்களுக்கு விதை விதைக்கும். 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள படம், குடும்பத்துடன் சென்றால் பாதியிலேயே பதறி ஓடி வந்து விடுவீர்கள்.

ராக்கி - ரத்தம் தோய்ந்த ராக்கி

 

ராக்கி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ராக்கி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓