சாணிக் காயிதம்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - அருண் மாதேஸ்வரன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - கீர்த்தி சுரேஷ், செல்வராகவன்
வெளியான தேதி - 6 மே 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமாவில் 'வித்தியாசம்' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் புது விளக்கம் தருவார்கள். சில படங்களை எதற்காக வித்தியாசமான படங்கள் என்று சொல்ல வேண்டும் என்பதற்கான வரையறை கூட கிடையாது.
இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை ஒரு கூட்டம் 'ஆஹா, வித்தியாசமான படம் தரும் வித்தியாசமான இயக்குனர்' என பாராட்டி மகிழ்கிறது. ஒருவரைக் கொலை செய்யும் காட்சியை சினிமாவில் கத்தியால் குத்துவது போலவும், குத்துபட்டவர் கதறுவதும் தான் வழக்கமான சினிமா. ஆனால், அருண் மாதேஸ்வரனுக்கு கத்தியால் குத்துவது என்பதற்கு எண்ணிக்கை கிடையாது, குத்து, குத்து, குத்து என குத்திக் கொண்டே இருப்பார். ரத்தம் அப்படியே பீச்சியடிக்கும். கொலை செய்பவர் முகத்தில் தெறிக்கும். இதைத்தான் ஒரு கூட்டம் 'வித்தியாசம்' என கூவிக் கொண்டிருக்கிறது.
அவர் இயக்கிய முதல் படமான 'ராக்கி' படம் பார்த்துவிட்டு வந்த போதே நம் மீது ரத்தக் கறை படிந்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது. இந்தப் படம் ஓடிடியில் வெளியானாதால் நம் வீட்டுக்குள்ளும் ரத்தம் தெறித்தது போன்ற ஒரு உணர்வு.
கடலும், கடற்கரையும் இயக்குனர் அருணின் பேவரிட் கதைக்களங்கள் போல. 'ராக்கி' படத்தையும் அப்படித்தான் அத்துவான கடற்கரைப் பகுதிகளில் படமாக்கினார். இந்த 'சாணிக் காயிதம்' படத்தையும் அது போன்றே படமாக்கியிருக்கிறார். எங்கோ ஒரு வீடு, யாருமே வராத இடத்தில் ஒரு டீக்கடை என யதார்த்தத்தை மீறிய காட்சியமைப்புகள் படம் முழுவதும் நிரம்பி இருக்கின்றன.
1989ல் நடக்கும் கதை. பெண் போலீசாக வேலை பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ். அவரது கணவர் ஒரு ரைஸ் மில்லில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள். அரசியலில் ஈடுபாடு கொண்டு கீர்த்தியின் கணவருக்கு அவரது ரைஸ் மில் முதலாளியுடன் சண்டை வருகிறது. அதனால், ஆத்திரமடையும் ரைஸ் மில் முதலாளி, தன்னை விட தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் அவமானப்படுத்திய ஆத்திரத்தில் கீர்த்தியின் கணவர், மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டை தீ வைத்து அவர்களைக் கொலை செய்து விடுகிறார். அது மட்டுமல்ல கீர்த்தி சுரேஷையும் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழிக்கிறார் முதலாளி. தன் கற்பையும், கணவன், குழந்தையையும் பறி கொடுத்த கீர்த்தி, அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதுமே கீர்த்தி சுரேஷை மையப்படுத்திதான் நகர்கிறது. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கத் துணிந்த கீர்த்தியை பாராட்டித்தான் ஆக வேண்டும். பொதுவாக கீர்த்தி கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்ற பேச்சு உண்டு. ஆனால், இந்தப் படத்தில் பொன்னி கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆவேசமாய் நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் மிகையான நடிப்பு வரவேயில்லை. அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, பழி வாங்கும் உணர்ச்சி என காட்சிக்குக் காட்சி மிரள வைக்கிறார். அவரைப் பார்த்தாலே பயம் வரும் அளவிற்கான ஒரு நடிப்பு.
கீர்த்தியின் அண்ணன் சங்கையாவாக செல்வராகவன். எப்போதும் பீடி பிடித்துக் கொண்டே இருக்கிறார். தலையை சாய்த்து வித்தியாசமாகப் பேசுகிறார். அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள்தான் கீர்த்தி என்று தெரிந்தும் கீர்த்தி மீதும், அவரது மகள் மீதும் பாசமாக இருக்கிறார். தான் ஆசையாகப் பழகும் அந்தக் குழந்தை கொடூரமாக இறந்த சோகத்தில், தங்கை கீர்த்தியுடன் சேர்ந்து பழி வாங்கலில் இறங்குகிறார்.
படத்தில் முக்கிய வில்லனாக ஜெய் கிருஷ்ணா. விஜய் சேதுபதி நடித்த 'வன்மம்' படத்தை இயக்கியவர். சாதித் திமிரை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். அவருடன் கூட்டாளிகளாக இருப்பவர்களும் அவ்வளவு திமிர் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
சாம் சிஎஸ் பின்னணி இசை, யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு, நாகூரான் படத் தொகுப்பு படத்தை தொழில்நுட்ப ரீதியாக மாறுபட்டு காட்டுகிறது.
தன் வாழ்க்கையை சீரழித்தவர்களை ஒருவர் அல்ல இருவர் இவ்வளவு கொலை வெறியோடு பழி வாங்குவதைப் பார்க்க தனி மன தைரியம் வேண்டும். அப்படி இருப்பவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம். எதற்கும் வீட்டில் கூடவே குழந்தைகள் பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாணிக் காயிதம் - ரத்தத்தில் தோய்ந்த…