சைரன்,Siren

சைரன் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - ஆண்டனி பாக்யராஜ்
இசை - ஜிவி பிரகாஷ்குமார், சாம் சிஎஸ்
நடிப்பு - ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு
வெளியான தேதி - 16 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 3/5

செய்யாத கொலையை செய்ததாக பொய்ப் பழி சுமத்தி தன்னை சிறையில் தள்ளியவர்களை பரோலில் வந்து நாயகன் பழி வாங்குவதுதான் படத்தின் கதை. அப்பா, மகள் சென்டிமென்ட்டுடன் எந்தத் தொய்வும் இல்லாத திரைக்கதை, சில அருமையான வசனங்கள் மூலம் தன் முதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயம் ரவி. ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். கொலையே செய்யாத அவர் கொலைக் கைதி. பரோலில் தனது அப்பாவைப் பார்க்க ஊருக்குச் செல்கிறார். மனைவியை இழந்த ஜெயம் ரவி மீது அவரது 12 வயது மகள் கோபத்தில் இருக்கிறார். அப்பாவைப் பார்க்கவும் மறுக்கிறார். இதனிடையே, ஊரில் அடுத்தடுத்து சில சாதிக் கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகளைப் பற்றிய விசாரணையை பெண் இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ் நடத்த ஆரம்பிக்கிறார். பரோலில் வந்தாலும் போலீஸ் பாதுகாப்பிலேயே இருக்கும் ஜெயம் ரவி மீது கீர்த்தி சுரேஷுக்கு சந்தேகம் வருகிறது. கீர்த்தி நினைப்பது போல அந்தக் கொலைகளை ஜெயம் ரவிதான் செய்தாரா ? அவரது மகள் அவருடன் பேசினாரா, செய்யாத கொலைக்காக ஜெயம் ரவி ஏன் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு படத்தில் ஏதோ ஒரு சென்டிமென்ட் அழுத்தமாக சொல்லப்பட்டால் அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துவிடும். அப்பா, சிறுமியாக இருக்கும் மகள் பற்றிய பாசக் கதை என்பது இந்தப் படத்தில் கதையின் மையமாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் 'விஸ்வாசம்' படத்தின் எழுத்தாளர்களில் ஒருவர் என்பதால் அப்படத்தில் பார்த்த அஜித், அனைகாவின் அப்பா, மகள் பாசத்தைப் போன்றே இந்தப் படத்திலும் அப்படி ஒரு பாசத்தை வைத்திருக்கிறார். அந்த சென்டிமென்ட் இந்தப் படத்திலும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதைக்குள் நேரடியாக சென்றுவிடுகிறார் இயக்குனர். ஜெயம் ரவி பரோலில் வெளிவந்ததிலிருந்து பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் செல்வது வரை அடுத்து, அடுத்து என காட்சிகளை பரபரப்புடன் நகர்த்தியதுதான் இந்தப் படத்தின் திரைக்கதையில் குறிப்பிட வேண்டிய ஒன்று.

நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. பிளாஷ்பேக் காட்சிகளைத் தவிர படம் முழுவதும் அப்பா கதாபாத்திரம்தான் என இயக்குனர் கதை சொன்ன போது ஜெயம் ரவி கூட நடிக்கத் தயங்கியிருக்கலாம். ஆனால், அவரது அப்பாவித்தனமான முகம் இந்தப் படத்தின் திலகன் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது. இவ்வளவு அமைதியாக இருப்பவரா பழி வாங்குவதற்காகக் கொலைகளைச் செய்ய முடியும் என மற்றவர்களை யோசிக்க வைக்கும் ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் ஜெயம் ரவி. மகள் தன்னிடம் வந்து பேச மாட்டாளா என்ற ஏக்கத்திலும், கீர்த்தியின் விசாரணையை 'டீல்' செய்யும் விதத்திலும் அவரது நடிப்பு படத்தில் அழுத்தமாய் பதிந்துள்ளது.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷா என டீசர் வந்த போது யோசித்தவர்கள் படம் பார்த்த பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். அவரது ஒல்லியான தேகத்தை மீறி அக்கதாபாத்திரத்திற்குரிய மிடுக்கு, உடல் மொழி, அதட்டலான பேச்சு என நன்றாக சமாளித்து நடித்துள்ளார். தனது முக்கியமான தமிழ்ப் படக் கதாபாத்திரங்களில் இப்படத்தையும் கீர்த்தி சேர்த்துக் கொள்ளலாம். அதற்குக் காரணம் அவரது முயற்சி.

யோகி பாபுவை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சில பல ஒன் லைன்களில் சீரியசான கதையில் ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார். சாதி அரசியல்வாதிகளாக அழகம் பெருமாள், அஜய், அதே சாதியைச் சேர்ந்த டிஎஸ்பி ஆக சமுத்திரக்கனி ஆகியோர்தான் வில்லன்கள். தமிழ் சினிமா இதற்கு முன்பு பார்த்த அதே வில்லன் கதாபாத்திரங்கள்தான்.

பிளாஷ்பேக்கில் ஜெயம் ரவியைக் காதலித்து மணந்து கொள்ளும் நர்ஸ் ஆக அனுபமா பரமேஷ்வரன். வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு கதாபாத்திரம். மற்றுமொரு சென்டிமென்ட் கதாபாத்திரம். இவரது காதலையும், பிரிவையும் இன்னும் அழுத்தமாய் காட்டியிருக்கலாம். டக்கென வந்து சீக்கிரம் முடிந்துவிடுகிறது.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் சுமார் ரகமே. இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார். அவரிடம் யாராவது சத்தம் என்பது மட்டுமே பின்னணி இசை அல்ல என சொல்லிப் புரிய வையுங்கள். சில இடங்களில் காது கிழிந்துவிடுமோ என்ற அளவிற்கு வாசித்துத் தள்ளியிருக்கிறார். எஸ்கே செல்வகுமார் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு இயக்குனரின் தேவையைப் புரிந்து கொண்டு செய்தது போல சரியாக உள்ளது.

கொஞ்சம் பழைய பார்முலா கதை, பழைய பார்முலா வில்லன்கள் என்பது மைனஸ். ஜோடியாக இல்லாத கதாநாயகன், கதாநாயகி இந்தக் காலப் படங்களில் பார்ப்பது அபூர்வம். சில சமூகக் குறியீடுகள் படத்தில் உள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியான படம்.

சைரன் - ஸ்ட்ராங்காய்…

 

சைரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சைரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமர்சனம் ↓