தள்ளிப் போகாதே
விமர்சனம்
தயாரிப்பு - மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷனஸ்
இயக்கம் - கண்ணன்
இசை - கோபி சுந்தர்
நடிப்பு - அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான்
வெளியான தேதி - 24 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த 'நின்னுக்கோரி' என்ற வெற்றிப் படத்தின் அபத்தமான ரீமேக்தான் இந்த 'தள்ளிப் போகாதே'.
ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை அதன் சுவாரசியம் குறையாமல் அப்படியோ ரீமேக் செய்யும் போதுதான் அப்படம் வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தில் என்ன இப்படி ரீமேக் செய்துள்ளார்களே என்றுதான் அதிர்ச்சியடைய வைக்கிறது. இயக்குனர் கண்ணன் இந்தப் படத்தை ஏன் இப்படி ரீமேக் செய்தார் என்பதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
இந்தப் படம் இன்று வெளியாகிறது என்பது கூட பலருக்குத் தெரியாது. எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் இல்லாமல், ஒரு இசை வெளியீடு, டீசர் வெளியீடு நிகழ்ச்சி கூட நடத்தாமல் ஒரு படத்தை வெளியிடுவதெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.
அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் காதலர்கள். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என அதர்வாவைக் கட்டாயப்படுத்துகிறார். தன்னுடைய பி.ஹெச்டி படிப்பு முக்கியம் என அதற்கு மறுத்துவிட்டு டில்லி சென்றுவிடுகிறார். அதற்குள் அனுபமாவுக்கு, அமிதாஷ் பிரதானை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டில் இருக்கும் அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அனுபமா கணவருடன் மகிழ்ச்சியா இல்லை என அதர்வா சொல்ல அதை மறுக்கிறார் அனுபமா. அதனால் நடக்கும் விவாதத்தில் அனுபமா வீட்டிற்கு வந்து அதர்வா 10 நாட்கள் தங்குவதென முடிவாகிறது. அதற்கு அனுபமா கணவர் அமிதாஷும் சம்மதிக்கிறார். தன் மீதான காதலை மறக்க முடியாமல் அனுபமா இருக்கிறார் எனத் தெரிந்தால் தன்னுடன் வர வேண்டும் என அதர்வா சவால் விடுக்கிறார். அதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தக் கதையே நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவராத ஒரு கதை. இதை ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற எந்த சந்தேகமும் இல்லாமல் ரீமேக் உரிமை வாங்கி தமிழில் எடுத்திருப்பது தேவையற்றது. எப்படியும் 'அந்த 7 நாட்கள்' பட பாணியில் தாலி கட்டியவன் தான் கணவன் என்றுதான் முடிக்கப் போகிறார்கள் என அனுபமா வீட்டிற்கு அதர்வா செல்லும் போதே நம்மாய் யூகிக்க முடிகிறது.
வழக்கமான தமிழ் சினிமா காதலனாக அதர்வா. காதலிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. முன்னாள் காதலியுடன் அவரது வீட்டிலேயே தங்கியிருந்து காதலியையும், அவரது கணவரையும் வெறுப்பேற்றுவதெல்லாம் தாங்க முடியவில்லை.
அதர்வாவைக் காதலிக்கும் போது ரசிக்க வைக்கிறார் அனுபமா. பின்னர் முன்னாள் காதலனா, கணவனா என இருவருக்கும் இடையில் கொஞ்சம் தவிக்கிறார். இதற்காக எமோஷனலான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே. அனுபமாவின் கணவராக அமிதாஷ் பிரதான். ஒயிட் காலர் கதாபாத்திரம்.
படத்தில் நகைச்சுவைக்கென தனியாக யாரையும் போடவில்லை. அனுபமாவின் அப்பா ஆடுகளம் நரேன், மாமா காளி வெங்கட் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் கூட இல்லை. பின்னணி இசை என வாசித்துத் தள்ளுகிறார். இடைவேளைக்குப் பின் வெளிநாட்டில் நடக்கும் கதை. பெயருக்கு சில தெருக்களை மட்டும் காட்டி, வெளிநாடு என்கிறார்கள். மீதி காட்சிகள் வீட்டுக்குள்தான் நடக்கின்றன.
உணர்வுபூர்வமாக கடந்து போக வேண்டிய கதை, ஏனோ தானோவென, எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் நகர்கிறது.
தள்ளிப் போகாதே - இரண்டு மணி நேரத் தவிப்பு