நடிகர்கள் : நிவின்பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன்
இயக்கம் : அல்போன்ஸ் புத்திரன்
பள்ளிப்பருவத்தில் பெரும்பாலான மாணவர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அனுபமாவை அந்த இளம்பருவத்துக்கே உண்டான பரவசத்துடன் காதாலாய் துரத்துகிறார் நிவின்பாலி. அவரிடம் காதலை சொல்ல முற்படும் வேளையில், அவரோ தனது முறைப்பையன் ஒருவருடனான காதலுக்கு உதவச்சொல்லி இவரிடம் வந்து நிற்கிறார். அத்துடன் அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி விழுகிறது.
சில வருடங்கள் கழித்து முரட்டு வாலிபனாக மாறி, கல்லூரி செல்லும் மாணவரான நிவின்பாலிக்கு, அவருக்கு பாடம் எடுக்க வரும் கெஸ்ட் லெக்சரரான சாய் பல்லவி மேல் ஒருவிதமான காதல் தோன்றுகிறது.. சாய் பல்லவியும் நிவின்பாலியின் பால் ஈர்க்கப்பட்டு அவரை நெருங்கி வருகிறார். அந்த வேளையில் விபத்தில் சிக்கிய சாய் பல்லவிக்கு, நிவின் பாலியும் அவரது காதலும் நினைவுகளை விட்டு மறைந்து போக இந்த காதலும் கைகூடாமல் போகிறது.
இன்னும் சில வருடங்கள் கழிந்த நிலையில் மிகப்பெரிய பேக்கரி ஒன்றின் முதலாளியாக மாறும் நிவின்பாலிக்கு அவரே எதிர்பாராத திசையில் இருந்து மடோனா செபாஸ்டினிடமிருந்து காதல் சிக்னல் கிடைக்கிறது.. அவர் வேறு யாருமல்ல.. சிறுவயதில் துரத்தி காதலித்த பள்ளி மாணவியான அனுபமாவின் தங்கை தான். ஆனால் அதுவும் ஒருகட்டத்தில் கை நழுவி போகுமோ என நினைக்கும் வேளையில் தான் அந்த அதிசயம் நிகழ்கிறது. அது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை!
ஒரு இளைஞனின் மூன்றுவிதமான காலகட்டத்தில் ஏற்படும் காதலை மிகவும் கலைநயத்துடன், இளமைக்குறும்புகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.. ஜார்ஜ் என்கிற மிகச்சரியான கதாபாத்திரத்தில் தனது மூன்றுவிதமான பருவங்களையும் தனது கெட்டப்புகளாலும் வித்தியாசமான மேனரிசங்களாலும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் நிவின்பாலி.
படத்திற்கு காமெடியன் என யாரும் தேவைப்படாமல், படத்தின் கதாநாயகன் நிவின்பாலி முதற்கொண்டு, கதாநாயகிகள், மற்ற அனைவரும் கலகலபபாக படத்தை நகர்த்த உதவியிருக்கிறார்கள்.. மூன்று ஹீரோயின்களும் மூன்று விதத்தில் அழகு. திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இறுதிக்காட்சிகளில் வரும் மடோனா செபாஸ்டினிடம் வருங்காலத்தில் இன்னொரு நஸ்ரியாவாக உருவெடுக்கும் அழகும் நடிப்பும் தெரிகிறது. தமிழ் ஆசிரியையாக வந்து, பார்வையாலேயே நம்மை கிறங்க வைக்கும் சாய் பல்லவி, நிவின்பாலி அன் கோவிற்கு நடனம் சொல்லித்தரும் காட்சி எதிர்பாராத சர்ப்ரைஸ்.. அரங்கம் அதிர்கிறது கைதட்டலால்..
நிவின்பாலியின் நண்பர்களாக வரும் கிருஷ்ணன்(கோயா) மற்றும் சபரீஷ்(சம்பு) இருவருமே படம் முழுவதும் அவரது கூட்டாளிகளாக வருவதுடன் படத்தின் கலகலப்புக்கும் காரணமாக இருக்கிறார்கள்.. காதலை நாம் வெவ்வேறு நபர்களிடம் தேடிச்செல்லும்போது, அது நம்மை எதிர்பாராத ரூபத்தில் தேடிவரும் என இரண்டரை மணி நேரத்தில் அழகாக கதை சொல்லி மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
பிரமேம் - இளமை ததும்பும் காதல் கொண்டாட்டம்.