Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மாயாண்டி குடும்பத்தார்

மாயாண்டி குடும்பத்தார்,
  • மாயாண்டி குடும்பத்தார்
  • தருண் கோபி
  • அஞ்சுஷா
  • இயக்குனர்: ராசு மதுரவன்
18 ஜூன், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாயாண்டி குடும்பத்தார்

தினமலர் விமர்சனம்

பங்காளிகளுக்கு இடையேயான பகையும் பாசமும்தான் மாயாண்டி குடும்பத்தார் படம்! முதன் முறையாக பத்து இயக்குனர்கள் பாத்திரங்களாக நடித்திருக்கும்... இல்லை இல்லை... வாழ்ந்திருக்கும் படம்!

ஜி.எம்.குமாரும், மணிவண்ணனும் அண்ணன் - தம்பிகள். மணிவண்ணனின் மகன்கள் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி, ஜி.எம்.குமாரின் மகன்கள் ரவிமரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி, மணிவண்ணனின் மருமகன் ராஜ்கபூர். இவர்களுக்கு இடையேயான கோபமும், பாசமும்தான் படத்தின் மொத்த கதையும்.

தங்களுக்கு ஒத்து வராத அத்தைக்கு சொத்தை பிரித்து கொடுத்த விஷயத்தில் தம்பி மணிவண்ணன் குடும்பத்தின் மீது தீரா பகையுடன் இருக்கிறது அண்ணன் ஜி.எம்.குமாரின் குடும்பம். சித்தப்பா குடும்பத்தில் ஒருத்தன் தலையாவது உருள வேண்டும் என்பதில் இருக்கும் பெரியப்பா பிள்ளைகளிடம் பாசத்தையும், நேசத்தையும் எதிர்பார்க்கிறது மணிவண்ணன் குடும்பம். தலை உருண்டதா? பாசம் வென்றதா? என்பது மாயாண்டி குடும்பத்தாரின் மீதிக் கதை!. இதனூடே மணிவண்ணன் குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசுகள் ஜெகன்னாத்தின் காதல் கல்யாணம், தருண்கோபியின் காதல் சோகம், இத்யாதி... இத்யாதிகளையும் சொல்லி சீனுக்கு சீன் படம் பார்க்கும் ரசிகர்களை பாசத்தை வைத்து உருக வைத்து கண்ணீரால் கரைய வைத்து விடுகிறார் இயக்குனர் இராசு மதுரவன்!

கிராமம், கூட்டுக்குடும்பம், பங்காளி, பாகஸ்தன், தகராறு, அண்ணிகளின் கொடுமை, அண்ணன்களின் அரவணைப்பு, கறிசோறு சாப்பாடு என காட்சிக்கு காட்சி கண்களை குளமாக்கி விடுகிறார் இயக்குனர். பிரசாந்த் நடித்த பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அதே மதுரவன்தானா இதன் இயக்குனர்? என கேட்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அப்படி பாசமும், கோபமும் கொப்பளிக்கிறது என்றால் பாருங்களேன்!

"காது குத்தி" பத்திகையில் தன் பெயர் போடாமல் அவமானப்படுத்தும் அக்கா வீட்டுக்காரர். அங்கு கறிசோறு சாப்பிட வந்து விட்டதாக வம்பிழுக்கும் அக்கா புருஷனின் மூக்கை உடைக்கும்படியாக படிப்பு செலவிற்காக வைத்திருந்த ஐம்பதாயிரம் பணத்தை மொய்யாக எழுதிவிட்டு திரும்பும் தம்பி தருண்கோபி உள்ளிட்ட எல்லோருமே மெய்யாலுமே நன்றாக நடித்துள்ளனர். இதுமாதிரி கணமான பாசமும், கோபமும் கொப்பளிக்கும் காட்சிகளின் முன் தம்பி தருண்கோபி - பூங்கொடி காதலும் சோகமும், அண்ணன் ஜெகன்நாத்- ஹேமாவின் காதல் - கல்யாண காட்சிகள் அளவிற்கு கூட எடுபடாமல் போவது குறை! இதை எல்லாம் மீறி சீமானின் புரட்சி பாடலும் உரிமை போராட்டமும் கூட நம் மனதில் நச்சென்று பதிந்து உச் கொட்ட வைக்கிறது. பேஷ்... பேஷ்..! மொத்தத்தில் பத்து இயக்குனர்களும், அவர்களுக்கு பக்க துணையாக வரும் நடிகைகள் மற்றும் மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் பாத்திரத்திற்கு ஏற்ற பக்கா தேர்வு! பளீச் நடிப்பு!

இப்பொழுது சந்‌தேகம் இல்லாமல் ஒத்துக் கொள்ளலாம் இயக்குனர்கள்தான் நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள் என்பதை!

புதியதொரு கலரில், சினிமா வார்த்தையில் சொல்வதென்றால் வித்தியாசமான டோனில் வேறொரு கோணத்தில் படம் பிடித்திருக்கும் பாலபரணியின் கேமிரா மாதிரியே, சபேஷ் முரளியின் இசை, எம்.பிரபாகரின் கலை, சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சி, சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு என எல்லாமும் படத்திற்கு பெரிய பலம்!

இராசு மதுரவனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் மாயாண்டி குடும்பத்தார் படம், தமிழக கிராமங்களிலும் கூட தற்போது மாயமாகி வரும் கூட்டுக்குடும்பங்களை பற்றியும், அவை தழைத்தோங்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கும் வாழ்க்கை பாடம்.

மாயாண்டி குடும்பத்தார் : குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குடும்பத்தார்!


------------------------------------

குமுதம் விமர்சனம்


"மாயாண்டி குடும்பத்தார்'' என்ற தலைப்பும், பத்து இயக்குனர்கள்தான் கதையின் நாயகர்கள் என்ற புதுமையும் ஆரம்பத்தில் நம்மை  உற்சாகப்படுத்தி கதைக்குள் ஒன்ற வைக்கிறது.

ஆனால், கதை? குச்சி ஐஸை கடித்துக் கொண்டே குழந்தைகள்கூட மனப்பாடமாய் ஒப்பிக்கும் அரதப்பழசான கிராமத்து கதை. பெரிய வீடு. கூட்டுக் குடும்பம். அப்பா மணிவண்ணன் அணைப்பில் நான்கு பாசக்கார மகன்கள் என காட்சிக்கு காட்சி பாசத்தையும், சோகத்தையும் பிழிய விடுவது... யப்பா மெகா சீரியல் அறுவை. தருண்கோபியை ப்ளஸ் டூ மாணவனாக காட்ட டைரக்டருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ...? அதுவும் ஸ்கூல் யூனிஃபார்மில் அவர் ரொமான்ஸ் செய்வது... கொடுமைடா சாமி.

பொன்வண்ணனுக்கு அதிக வேலையெல்லாம் இல்லை. வம்பளக்கும் "வாயாடி'' மனைவியை ரெண்டு சாத்து சாத்தி விட்டு அமைதியாக ஒதுங்கிப் போகிறார். விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் "தோழராக' சீமான். முஷ்டியை மடக்கிக் கொண்டு புரட்சிப் பாடல் பாடுகிறார்.  வெள்ளை வேட்டியில் மண் படாமல் வேகமாக நடக்கிறார். அவ்வளவேதான். இயக்குனர் ஜெகந்நாத்திற்கு மட்டும் நடிப்பு எட்டிப் பார்க்கிறது. சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தும் வாலிபராக யதார்த்தம் மீறாமல் செய்திருக்கிறார். சரி... இந்த பாசக்கார சகோதரர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? ஒன்று கறிசோறு சாப்பிடுகின்றனர். பங்காளி ரவிமரியா கோஷ்டியிடம் சண்டைக்கு போகின்றனர். மீதி நேரத்தில் "தம்பி அழக்கூடாது'' என ஒப்பாரி வைத்து பதிலுக்கு நம்மையும் அழ வைக்கின்றனர். முடியலை!!

மணிவண்ணனின் இறப்பு, பாகப் பிரிவினை என இடைவேளைக்கு அப்புறமாய்... ம்... இன்னொரு அழுகாச்சி காவியம். அதற்கப்புறம் டைரக்டர் காட்டுவதெல்லாம் ஒரே தருண்கோபி புராணம்தான்.

சிங்கம்புலியின் லூஸுத்தனமான காமெடிதான் படத்தின் மிகப்பெரிய ஆறுதல். அழகான கிராமத்துப் பெண் கேரக்டரில் புதுமுகம் பூங்கொடி பாஸ்மார்க் வாங்குகிறார். கிராமத்து காதலியென்றால் தன் காதலனை சந்து முனையில் திரும்பி திரும்பி பார்ப்பாள் என்பதை எத்தனை படங்களில்தான் காட்டுவார்களோ?

பின்னணியில் அவ்வபோது ஒலிக்கும் கிராமிய பறை கொட்டுகளும், "முதல் மழை'' பாடலும் சபேஷ் முரளிக்கு கைத்தட்டல் போட வைக்கின்றன.

மாயாண்டி குடும்பத்தார் : பூச்சாண்டிகளின் ஃபேமிலி ஆல்பம். குமுதம் ரேட்டிங் : சுமார்.

-----------------------------------

விகடன் விமர்சனம்


ஆயிரம் பிரச்னைகள் அலைக்கழித்தாலும், பிரியாமல் பாசம்வைத்துப் பாலம் கட்டுபவர்களே மாயாண்டி குடும்பத்தார்.

மணிவண்ணன் (மாயாண்டி), ஜி.எம்.குமார் இடையே சொத்துத் தகராறு. ஜி.எம்.குமாரின் மகன்கள் ரவிமரியா, நந்தா பெரியசாமி இருவரும் சண்டைக்கோழிகள் என்றால், மணிவண்ணனின் மகன்கள் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி ஆகியோர் பாசப் புறாக்கள். மணிவண்ணன் மரணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனத்துக்கு மல்லுக்கட்டும் மருமகள்களால் சில்லுச் சில்லாகச் சிதறுகிறது. மாயாண்டி குடும்பம். கல்யாணமாகாத கடைசித் தம்பி தருண்கோபி ஆதரவற்று திரிகிறார். பங்காளிப் பிரச்னை, பாகப் பிரிவினைக்கு நடுவே மாயாண்டி குடும்பத்தார் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

பத்திரிகையில் பெயர் போடாததற்காக சிலுப்புவது, இழவு வீட்டில் ஈரம் காய்வதற்கு முன்பாக சொத்துப் பிரச்னையை கிளப்புவது என்று கிராமத்தின் அசல் முகத்தை வைத்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராசு மதுரவன். 10 இயக்குநர்களை இணைத்திருப்பது வெறுமனே வித்தியாச முயற்சியாகத் தொக்கி நிற்காமல், கதாபாத்திரங்களோடு ஒன்ற வைத்திருப்பதை ரசிக்கலாம்!

தத்தமது மனைவியின் தலையீட்டை தடுக்க முடியாதவர்களாக, தம்பியை இழக்க முடியாதவர்களாக தவிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் பொன்வண்ணனும், சீமானும் இயல்பாக ஈர்க்கிறார்கள். மாயாண்டி மகன்களில் அதிகம் கவர்பவர் ஜெகன்நாத், காதுகேளாத புரோட்டா கடைப் பெண்ணைக் காதல் பாடல்கள் போட்டு கரெக்ட் பண்ண நினைப்பதும், புது மாப்பிள்ளை பூரிப்பில் திரிவதுமாக கலகலக்க வைக்கிறார். சந்தடி சாக்கில் கிடைத்ததை சுருட்ட நினைக்கும் ராஜ்கபூர் சின்னச் சின்ன கேப்பில் கூட சிக்ஸர் அடிக்கிறார். அந்தக் குடும்பத்தின் சோப்ளாங்கி பிள்ளை தருண் கோபிதான். காதல், மோதல், சோகம், பாசம் எல்லாவற்றுக்கும் தருண்கோபியிடம் ஒரே மாதிரி உஷ்ண உணர்ச்சிகள்தான்.

அங்காளி, பங்காளிகளாக வரும்  ரவிமரியா, நந்தா பெரியசாமி இருவருக்கும் தொடை, தட்டித் துள்ளிக் குதிப்பதோடு வேலை ஓவர். சீரியஸாக நகரும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு வெடி கொளுத்துவது சிங்கம்புலி. ஜி.எம்.குமாரின் மனநிலை பாதிக்கப்பட்ட மகனாக, வளர்த்த குழந்தையாக வந்து அப்பா நீ செத்துட்டா இந்த பீடி எனக்குத்தானே என்று வெறுப்பேற்றிக் கலகலக்க வைக்கிறார்.

கள்ளக் காதலைக்கூட வெளிப்படையா செய்யிற காலத்துல கூடப்பிறந்தவர்களுக்கு ரகசியமாத்தான் உதவ வேண்டியிருக்கு என்று ஆங்காங்கே வசனங்களில் கூர்மை. சபேஷ் முரளியின் இசையில் களவாணியே, வந்தனமுங்க பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பால பரணியின் ஒளிப்பதிவில் வந்தனமுங்க... பாடல் கிராமத்து திருழாவை லைவ் செய்கிறது.

படத்தில் பலவீனமே வழுக்கிவிடும் அளவுக்கு பூத்து நிற்கும் பாசக் காட்சிகள்தான். அம்புட்டுப் பாசம் பேசும் அண்ணன்கள் திடீரென்று காணாமல் போய் தருண்கோபி தேடி வரும்போது மட்டும் திகட்டத் திகட்டப் பாச பாயசம் காய்ச்சுகிறார்கள்.

நாடகத்தனமான காட்சிகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டு இருக்காவிட்டால் மாயாண்டி குடும்பத்தாரின்  விருந்தை ரசித்தே ருசித்து இருக்கலாம்!


விகடன் மார்க் : 39/100


-------------------------------
கல்கி விமர்சனம்


மாயாண்டி மற்றும் விருமாண்டி இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையேயான மோதல்களே படத்தின் மையக் கதை என்றாலும் அதையெல்லாம் தாண்டி குடும்ப உறவுகளுக்கிடையே சுணையாமல் கிடக்கும் தீராப்பகைகளையும், குரோதத்தையும் அன்பையும், விட்டுக் கொடுத்தலையும், நேசிப்பையும் ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் இயக்குநர் இராசு மதுரவனுக்கு துணிச்சல் அதிகம்!

படத்தின் வெற்றிக்குத் துணையாக நின்று நடித்திருக்கும் இயக்குநர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

இப்படி யாரு கேட்டாலும் பிஸ்கட் கொடுக்காத.... வண்டியிலே ஏறுறியா டபுள்ஸ் போகலாம் என வெள்ளந்தியான கதாபாத்திரத்தில் வந்து, நடிப்பில் மொத்த மதிப்பெண்களையும் அள்ளி செல்கிறார் சிங்கம் புலி. தங்கம், வைரம், வைடூரியம் எல்லாம் மண்ணுக்கள்ள கிடைக்குதுன்னு சொல்வாங்க. ஆனா இதெல்லாம் ஒண்ணா சேர்ந்த என் தகப்பனை இந்த மண்ணுக்குள்ளே போட்டுப் புதைச்சிட்டேனே.... எனக் கூறி முகத்தில் அடித்துக் கொண்டு தருண்கோபி கதறி அழும்போது நம் கண்களிலிருந்து வரும் கண்ணீரைக் கூட துடைத்தெறிய முடிவதில்லை. இனி இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பதை முழு நேரமாகக் கொள்ளலாம். முற்போக்குவாதியாக, விவசாயிகளுக்கும் குரல்கொடுக்கும் தோழனாக சீமான், பேசாம பேசாம... என ஒரு பாடலை எழுதிப் பாடியிருக்கிறார்.

இரண்டு குடும்பங்களிலும் (மாயாண்டி குடும்பத்தில் விருமாண்டி பெயர், விருமாண்டி குடும்பத்தில் மாயாண்டி) பகை இருந்தபோதும் ஒருவருக்கொருவர் அன்பு உண்டு என்பதை ரகசியமாக சொல்லியிருப்பதும், பரமன், வாழ்வில் கடந்து போன துயரங்களை  தலைமுழுகிவிட்டு வெளியே வருவது மூலமான காட்சி மாற்றங்கள் என திரைக்கதையில் மெனக்கெட்டிருப்பது, இயக்குநருக்கு வெற்றிவாகை சூட கைகோந்திருக்கிறது.

படத்தின் பின்னணி இசைப்பாடலாக வரும் முத்துக்கு முத்தாக... மற்ற அத்தனை பாடல்களையும் ஓரங்கட்டி விடுவது ஆச்சர்யம் கலந்த அழகு. படம் முழுக்க கேமிராவை எந்த இடத்திலும் வைத்துவிடாமல் தன் தோளிலேயே வைத்துப் படம்பிடித்திருக்கும் பாலபரணி, கிராமிய மனத்தைப் படம் முழுக்க பின்னணி இசையாகத் தூவியிருக்கும் சபேஷ் முரளி, தொகுத்திருக்கும் சுரேஷ் அர்ல் என அத்தனை கரங்களுக்கும் முடிந்தால் தயாரிப்பாளர் தங்க மோதிரம் பரிசளிக்கலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மாயாண்டி குடும்பத்தார் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
இதையும் பாருங்க !

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in