பட்டத்து அரசன்
விமர்சனம்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சற்குணம்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத்
வெளியான தேதி - 25 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதை என்றால் தற்போது இரண்டே இரண்டு கதைகளைச் சுற்றியே வருகிறார்கள். ஒன்று கபடி, மற்றொன்று ஜல்லிக்கட்டு. கதைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை சுவாரசியமாக பரபரப்பாக புதுவிதமான காட்சிகளுடன் நகர்த்தினால் ரசிகர்களைக் கவரலாம். ஆனால், அப்படி யோசிக்காமல் ரசிகர்களே எளிதில் யூகிக்கும்படியான காட்சிகளைக் கொடுத்தால் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள். அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம்தான் இந்த 'பட்டத்து அரசன்'.
இயக்குனர் சற்குணம் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையுடன் வந்திருக்கிறார். குடும்பப் பிரச்சினை, ஊர் பிரச்சினை, கபடி விளையாட்டு, கொஞ்சம் காதல் ஆகியவற்றுடன் நகர்கிறது படம். தாத்தா ராஜ்கிரண் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் பேரன் அதர்வா. ஆனாலும், இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை கிடையாது, அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு ஊரில் பெரிய மரியாதை இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரது சக நண்பரே, ராஜ்கிரணின் மற்றொரு பேரனின் தற்கொலைக்குக் காரணமாகிறார். இறந்து போன பேரன் மீது வீண் பழி சுமத்தி, ராஜ்கிரண் குடும்பத்தை ஊரைவிட்டு பிரித்தும் வைக்கிறார்கள். தன் தம்பி குற்றமற்றவன் என நிரூபிக்க ஊரை எதிர்த்து தங்களது குடும்பத்தினர் கபடிப் போட்டி ஆட முடிவாகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. போகப் போக திரைக்கதையை எங்கெங்கோ கொண்டு சென்று சுற்றி வந்து படத்தை முடிக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் கபடி போட்டி மட்டுமே படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சென்டிமென்ட் காட்சிகள் பல இருந்தும் நம்மை நெகிழ வைக்கவில்லை.
பார்க்க இயல்பான கிராமத்து இளைஞராக கதாபாத்திரத்தில் பொருத்தமாகத் தெரிகிறார் அதர்வா. ஆனால், நடிக்க ஆரம்பித்தால் ஓவராக நடித்துவிடுகிறார். கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும். தனி ஹீரோவாக அவருக்கான முக்கியத்துவம் படத்தில் குறைவுதான். தாத்தா கதாபாத்திரமாக இருந்தாலும் ராஜ்கிரண் கதாபாத்திரம் மீதும் ஹீரோயிசத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் ராஜ்கிரணுக்கு ஒரு பிளாஷ் பேக் வேறு இருக்கிறது. ராஜ்கிரணின் தோற்றத்தை ஏன் மாற்ற வேண்டும், முந்தைய படங்களில் இருப்பதைப் போலவே வைத்திருக்கலாமே.
அதர்வா மீது ஆரம்பத்திலிருந்தே கோபத்துடன் இருக்கும் பெரியப்பாவாக ஜெயப்பிரகாஷ். ராஜ்கிரணின் மூத்த மகனாய் நடித்திருக்கிறார். அந்தக் குடும்பத்தில் ராஜ்கிரணுக்குப் பிறகு அதிக வசனங்களைப் பேசி நடித்திருப்பவர் அவர் மட்டும்தான். அந்தக் குடும்பத்து மாப்பிள்ளையாக சிங்கம் புலி. இடைவேளைக்குப் பின்னர்தான் அவர் இருப்பதே படத்தில் தெரிகிறது. ராஜ்கிரண் குடும்பத்துப் பெண் கதாபாத்திரங்களில் அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு மட்டும் சில காட்சிகளில் வசனங்களை வைத்திருக்கிறார்கள். குடும்பத்து வாரிசுக்கு ஒன்று என்றால் ரத்த சொந்தம் ஓடி வந்து நிற்கும் என ராதிகா பேசும் வசனம் மட்டும் உண்மையாக உறைக்கிறது.
கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்துக்கு காதலிக்கும் வேலையைக் கூடக் கொடுக்கவில்லை இயக்குனர். கதாநாயகி ஆயிற்றே என ஒரு டூயட் பாடலை மட்டும் வைத்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகமாகவாவது இருந்திருக்கலாம். சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் பின்னணி இசைக்கு அவருக்கு வேலை இருக்கிறது.
'காரி' படத்தையும், இந்த 'பட்டத்து வீரன்' படத்தையும் அடுத்தடுத்து பார்ப்பவர்கள் சற்றே குழம்பிப் போவார்கள். 'காரி'யில் ஜல்லிக்கட்டு, 'பட்டத்து அரசன்' படத்தில் கபடிப் போட்டி. முதல் படத்தில் பக்கத்து ஊருடன் போட்டி, இந்தப் படத்தில் ஊருக்குள்ளேயே போட்டி.
பட்டத்து அரசன் - பாசத்துக்குக் கட்டுப்பட்டவன்