கல்கி 2898 ஏடி
விமர்சனம்
தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ்
இயக்கம் - நாக் அஸ்வின்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, கமல்ஹாசன்
வெளியான தேதி - 27 ஜுன் 2024
நேரம் - 3 மணிநேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
இந்தியத் திரையுலகத்தில் இதுவரை வந்த பேன்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படங்களின் உருவாக்கத்தை மிஞ்சும் விதத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மகாபாரதப் போரில் ஆரம்பமாகும் கதை அடுத்து 6000 வருடங்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரங்களுடன் 2898ம் ஆண்டு நடப்பதாகக் காட்டுவதுதான் இந்தப் படத்தின் கதை.
கி.பி.2898ம் ஆண்டு உலகின் கடைசி நகரமான காசியில் நடக்கிறது. அங்கு நிலத்திற்கு மேல் 'காம்ப்ளக்ஸ்' என்ற ஒரு பெரும் இடத்தை உருவாக்கி அதன் சுப்ரீம் பவர் ஆக இருப்பவர் கமல்ஹாசன். கர்ப்பிணிப் பெண்களின் கருவிலிருந்து சீரம் ஒன்றை எடுத்து அதை தன் உடலுக்குள் செலுத்தும் 'புராஜக்ட் கே' என்ற ஒரு ஆராய்ச்சியை நடத்தி வருகிறார். அந்த ஆராய்ச்சியில் கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பவர் தீபிகா படுகோனே. எப்படியாவது அங்கிருந்து தப்பித்து குழந்தையைப் பெற்றெடுக்க ஆசைப்படுகிறார். அங்கிருந்து தப்பிப்பவரை அதிசய சக்தி கொண்ட அமிதாப்பச்சன் ஒரு சிறுமியின் உதவியால் ஷம்பலா என்ற வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். கடவுள் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் ஷம்பலா மக்கள். தீபிகாவை மீட்டு வர, அந்த 'காம்ப்ளக்ஸ்' கமாண்டர் சஸ்வதா சாட்டர்ஜி, பணம் கொடுத்தால் எதையும் செய்து முடிக்கும் பிரபாஸை அனுப்புகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கொஞ்சம் மகாபாரதம், கொஞ்சம் ராமாணயம், கொஞ்சம் அவெஞ்சர்ஸ் இன்ன பிற சில ஹாலிவுட் படங்கள், அம்புலிமாமா கதைகள் என கலந்து மூன்று மணி நேரமும் திரையில் வித்தை மேல் வித்தை செய்து ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார்கள். இப்படியான கற்பனைக் கதையை எழுதுவதும் பெரிய விஷயம்தான். ஆனால், அதைக் குழப்பமில்லாமல் திரையில் பிரம்மாண்டத்துடன் காட்டுவதற்கு தனித் திறமை வேண்டும். அது இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் அவரது உற்ற துணையாக இருந்த குழுவினர் அனைவருக்குமே இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் மகாபாரதக் கதையான துரோணாச்சாரியார் மகன் அஸ்வாத்தமன், கிருஷ்ணரின் சாபத்தால் மரணமில்லாத சிரஞ்சீவி தன்மையை அடைகிறார். அந்த அஸ்வாத்தமன் கதாபாத்திரம்தான், அப்போது கிருஷ்ணர் சொன்னபடி, இந்தப் படத்தில் மீண்டும் வந்து தீபிகாவைக் காப்பாற்றப் போராடும் கதாபாத்திரமாக நடிக்கிறது. அஸ்வாத்தமனாக அமிதாப்பச்சன். பிரபாஸுக்குப் போட்டியாக அவரை விட உயர்ந்த உருவத்தில் அதிரடியாக சண்டையிடுகிறார். சில சமயங்களில் படத்தின் கதாநாயகன் இவர்தானோ என்று கூட எண்ண வைக்கிறார்.
படம் ஆரம்பமாகி இருபது நிமிடங்கள் போன பிறகுதான் பிரபாஸ் வருகிறார். பைரவா என்ற கதாபாத்திரம். ராட்சத கார் 'புஜ்ஜி' உடன் சாகசங்கள் செய்யும் ஒரு கதாபாத்திரம். ஒரு குறிப்பிட்ட 'யூனிட்' பெற்றால் மட்டுமே 'காம்ப்ளெக்ஸ்' இடத்திற்குள் நுழைய முடியும். அந்த யூனிட்களைப் பெற்று எப்படியாவது அங்கே போக வேண்டும் என்பதுதான் அவரது ஒரே லட்சியம். சூப்பர்மேன் செய்யும் சாகசங்கள் பலவற்றையும் செய்கிறார். முதல் பாகக் கிளைமாக்சில் அவருடைய கதாபாத்திரத்தை மகாபாரதக் கதாபாத்திரத்துடன் இணைத்து வைக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் அக் கதாபாத்திரம் என்ன செய்யப் போகிறது என்ற ஆர்வம் இப்போதே எழுகிறது.
உலகின் கடைசி நகரமான காசியில் உள்ள 'காம்ப்ளெக்ஸ்' இடத்தின் சூப்பர் பவர் ஆக கமல்ஹாசன். வித்தியாசமான மிக வயதான தோற்றத்தில் அந்தரத்தில் தியானம் செய்து கொண்டிருக்கிறார். இந்த முதல் பாகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். கிளைமாக்சில் அந்த வயதான தோற்றம் மாறி அடுத்து பாகத்திற்கு ஆரம்பப் புள்ளியாய் அமைகிறது.
கர்ப்பிணிப் பெண்ணாக தீபிகா படுகோனே. காம்ப்ளெக்ஸ் இடத்தில் சிறை வைக்கப்பட்ட ஒரு பெண். ஷம்பாலா இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரால் காப்பாற்றப்பட்டு தப்பிக்க வைக்கப்படுகிறார். சென்டிமென்ட்டிற்கு இவரது கதாபாத்திரம் பயன்பட்டுள்ளது.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார் திஷா பதானி. அப்புறம் காணவேயில்லை. ஷம்பலா இடத்தின் தாய் ஆக ஷோபனா, வீரன் ஆக பசுபதி, காம்ப்ளெக்ஸ் கமாண்டர் சாஸ்வதா சாட்டர்ஜி குறிப்பிட வேண்டியவர்கள். பிரபாஸ் கார் 'புஜ்ஜி'க்குப் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தெலுங்கு இயக்குனர்களான ராம்கோபால் வர்மா, ராஜமவுலி, அனுதீப் நடிகை மிர்ணாள் தாகூர், விஜய் தேவரகொன்டா, துல்கல் சல்மான் 'கேமியோ' கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள்.
படத்திற்கான தரத்தில் தனது இசையும் பேசப்பட வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஜோர்ட்ஜே ஸ்டோஜில்ஜ்கோவிக் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளது. விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் செய்த குழுவுக்கு பெரும் பாராட்டுக்கள்.
இடைவேளைக்கு முன்பு வரை படம் மெதுவாக நகர்கிறது. இரண்டு முக்கிய சண்டைக் காட்சிகளின் நீளம் அதிகம். பிரபாஸ், திஷா பதானி காதல் திடீரென வந்து உடனே காணாமல் போகிறது. படத்துடன் நம்மை கனெக்ட் செய்து கொள்ள முடியாதது திரைக்கதையின் மைனஸ்.
கல்கி 2898 ஏடி - கற்பனா... யுகம்