3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - யாஷ்ராஜ் பிலிம்ஸ்
இயக்கம் - சித்தார்த் ஆனந்த்
இசை - விஷால் ஷேகர்
நடிப்பு - ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்
வெளியான தேதி - 25 ஜனவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா, அஷுதோஷ் ராணா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம் 'பதான்'. இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இருக்கிறது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தீபிகாவின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையைக் கிளப்பி படத்திற்கு ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது. அதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது. ஆனால், ஒரு தேசபக்தி படத்தைக் கொடுத்து படக்குழுவினர் ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

தன் உயிரையும் துச்சமென மதித்து நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைக்கும் ஒரு மாவீரனின் கதைதான் இந்த 'பதான்'.

ஜேஓசிஆர் (JOCR), அதாவது கூட்டு செயல்பாடு மற்றும் ரகசிய ஆராய்ச்சி என்ற இந்திய அரசு சார்ந்த ஒரு குழுவின் முக்கிய வீரர் ஷாரூக்கான். ராணுவ மோதல்களில் சிறு காயமடைந்தவர்களை ஒன்றாக இணைத்து தனி குழுவாக செயல்படுகிறார். இந்திய அரசு விஞ்ஞானி ஒருவரை ஜான் ஆபிரகாம் தலைமையிலான ஒரு குழு கடத்துகிறது. இந்தியாவின் ரா பிரிவில் உளவாளியாக வேலை பார்த்தவர்தான் ஜான் ஆபிரகாம். ஆனால், தற்போது நாட்டுக்கு எதிராக வேலை செய்யும் சர்வதேச குற்றவாளியாக இருக்கிறார். அவர் 'ரத்த வித்து' என்ற ஒரு ஆபரஷனை செய்யப் போவதாகத் தகவல் கிடைக்கிறது. அதன் மூலம் சின்னம்மை நோயை மீண்டும் இந்தியாவில் பரப்ப அவர் திட்டமிடுகிறார். அதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் துணையாக இருக்கிறார். ஜான் ஆபிரகாமின் சதித்திட்டத்தை ஷாரூக்கான் எப்படி முறியடித்து நாட்டு மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கான் நடித்து வந்துள்ள ஹிந்திப் படம். அந்தக் காத்திருப்பு சரிதான் என ரசிகர்களுக்கு உணர்த்துகிறார். எனர்ஜடிக்கான ஒரு ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் காட்சிக்குக் காட்சி அசத்துகிறார். அதிலும் அவருடைய சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் சூப்பர் மேன் செய்வது போல அமைந்துள்ளது. வெறும் ஆக்ஷனுடன் மட்டுமல்லாமல் கொஞ்சம் சோகம், கொஞ்சம் காதல் என அவற்றிலும் அசத்துகிறார் ஷாரூக்.

படத்தில் நாயகன் ஷாரூக்கிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரமான ஜிம் கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். அதில் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கிறார். முன்னாள் ரா அதிகாரியாக இருந்து கடற் கொள்ளையர்களிடம் சிக்கி தனது கர்ப்பிணி மனைவியை இழக்கிறார். அந்த ஆத்திரத்தில் நாட்டிற்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். சர்வதேச டான் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை கண்முன் நிறுத்துகிறார் ஜான்.

படத்தின் மொத்த கிளாமரையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் தீபிகா படுகோனே. அவருடைய ஆடை வடிவமைப்பாளருக்குத்தான் அதற்கு நன்றி சொல்ல வேண்டும். விதவிதமான ஆடைகளில் அவர் நடந்து வருவதை தியேட்டரே 'ஆ'வென்று வாயைப் பிளந்து பார்க்கிறது. பேஷனில் மட்டுமல்லாது ஆக்ஷனிலும் அசத்துகிறார் தீபிகா. படத்தில் அவர் சாதாரண ஹீரோயின் அல்ல, ஆக்ஷன் ஹீரோயின்.

ஜேஓசிஆர் அமைப்பின் தலைவியாக டிம்பிள் கபாடியா, கர்னல் ஆக அஷுதோஷ் ராணா நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பின்பு சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் வந்து ஷாரூக்குடன் இணைந்து சண்டை செய்கிறார். கிளைமாக்சில் இருவரும் தங்களது போட்டியாளர்களைப் பற்றி 'வதந்தி' பேசி தங்களைப் சுயபெருமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

படத்தில் ஹாலிவுட் படங்களைப் போல பல ஆக்ஷன் காட்சிகளை நம்ப முடியாத அளவிற்கு அமைத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு சண்டை போடுவது, ஓடும் ரயில் மீது சண்டை, ஒரு ஹெலிகாப்டரிலிருந்து மற்றொரு ஹெலிகாப்டருக்குத் தாவுவது, பறக்கும் இயந்திரத்தை போட்டுப் பறப்பது என என்னென்னமோ செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அவற்றை ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரசிக்கிறார்கள்.

தமிழ் வசனங்களும் குறிப்பிடும்படி அமைந்துள்ளது. படத்தில் பாடல்களுக்கும் அதிக இடமில்லை. அந்த ஒரு சர்ச்சைப் பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் உடை அப்படியேதான் உள்ளது. சென்சார் அதைக் கண்டு கொள்ளாதது ஏனோ ?. முதல் பாதி கொஞ்சம் ஸ்லோதான், இடைவேளைக்குப் பிறகுதான் வேகமாக நகர்கிறது.

ஹிந்தித் திரையுலகத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அதிரடி ஆக்ஷன் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் வந்துள்ளது.

பதான் - தேச பக்தன்

 

பதான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பதான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓