ஜான் ஆபிரஹாம் நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் படமாக, போர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள படம் தான் ‛போர்ஸ்-2.
கதைப்படி, அசிஸ்டன்ட் கமிஷனரான ஹர்ஷவர்தன் எனும் ஜான் ஆபிரஹாம், மிகவும் கண்ணியமான, எதிரிகளுக்கு ஆபத்தான நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒருநாள் இந்திய உளவு அதிகாரிகள் ஏராளமானபேர் கொல்லப்படும் செய்தி ஜானுக்கு வருகிறது. அதில் அவரது பாலிய நண்பர் ஒருவரும் கொல்லப்பட இதுப்பற்றிய விசாரணையில் களம் இறங்குகிறார் ஜான். அவருக்கு துணையாக மற்றொரு பெண் உளவு அதிகாரியான கே கே எனும் சோனாக்ஷியும் களம் இறங்குகிறார்கள். இருவரும் புதாபெஸ்ட் செல்கிறார்கள். அங்கு நமது உளவு அதிகாரிகளை கொல்ல காரணமாவனர்களை ஜானும், சோனாக்ஷியும் கண்டுபிடித்தார்களா...?, அல்லது எதிரிகள் கையில் சிக்கி இவர்கள் பலியானார்களா...? என்பது போர்ஸ் 2 படத்தின் பரபர ஆக்ஷ்ன் கதை.
ஜான் ஆபிரஹாம் - ஹர்ஷவர்தன் ஏசிபி-யாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் மனிதர், ஆனால் வனமும், நடிப்பும் தான் சுமார் என்ற அளவில் இருக்கிறது.
‛அகிரா படத்தை போல் ‛போர்ஸ்-2 படத்திலும் பரபர ஆக்ஷ்னில் நடித்திருக்கிறார் சோனாக்ஷி, ஆனால் நடிப்பு சுத்தமாக வரவில்லை.
ஜான், சோனாக்ஷியை விட வில்லனாக நடித்துள்ள தகிர் ராஜ் பாசின் மிரட்டியிருக்கிறார் மிரட்டி.
முழுக்க முழுக்க ஆக்ஷ்னை மையமாக வைத்தே படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அபிநய் தியோ. கதை ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதமும், புதாபெஸ்ட்டில் நகரும் கதைக்களமும் ரசிகர்களுக்கு புது விருந்து. படத்தின் முதல்பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர், ஆனால் பின்பாதி கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் ஓகே என்ற அளவில் உள்ளது.
படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஜானின் தீவிர ரசிகர்களும், ஆக்ஷ்ன் பிரியர்களும் ‛போர்ஸ்-2 படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். மற்றவர்கள்....?