4

விமர்சனம்

Advertisement

இயக்கம் - கபீர்கான்
இசை - ஜுலியஸ் பாக்கியம், ப்ரீத்தம்
நடிப்பு - ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா
வெளியான தேதி - 24 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 41 நிமிடம்
ரேட்டிங் - 4/5

இந்தியத் திரையுலக வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு உண்மை நிகழ்வு படமாக்கப்பட்டதில்லை என்று தான் சொல்ல வேண்டும். 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பையைக் கைப்பற்றியதை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அப்போது சிறுவர்களாக, இளைஞர்களாக இருந்தவர்கள் மீண்டும் அந்தக் கால ஞாபகத்தை அசை போட்டு பார்க்கலாம். அப்போது பிறக்காதவர்கள், அந்த வரலாற்று நிகழ்வு எப்படி நடந்தது என்பதை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை நம் கண்முன் அப்படியே கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. அப்போது கலந்து கொண்ட கிரிக்கெட் அணிகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், அப்போது மைதானத்தில் பார்த்த ரசிகர்கள், அந்தக் காலகட்டம் என அனைத்தையும் அப்படியே யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கபீர் கான்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கபில்தேவ் தான் இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங், அப்படியே கபில்தேவாகவே மாறிவிட்டாரோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

கபில்தேவுக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேச வராது. மேல் உதட்டைக் கடித்துக் கொண்டது போல பேசுவார். அவருடைய ஹேர்ஸ்டைல், மீசை எல்லாம் அந்தக் காலத்தில் அவ்வளவு பிரபலம். அவருடைய பவுலிங் ஆக்ஷன் அசத்தலாய் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் முதன் முதலாக சாதனை புரிந்த வேகப்பந்து வீச்சாளர். அப்படிப்பட்ட சாதனையாளர் கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் கூட ரன்வீர் சிங் என்ற நடிகர் தெரியவேயில்லை, கபில்தேவ் மட்டுமே தெரிந்தார்.

கபில்தேவ் மனைவி ரோமியாக இடைவேளைக்குப் பின்னர் தான் தீபிகா படுகோனே வருகிறார். கொஞ்சமாக வந்தாலும் கபில்தேவுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லி உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருக்கிறார்.

அணி மேலாளர் மான்சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் த்ரிபாதி. இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டு, அந்தக் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்துள்ளது என்பதை இவரது கதாபாத்திரம் உணர்த்துகிறது.

உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த்திற்கு இப்படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா பொருத்தமாக நடித்திருக்கிறார். அவருக்குப் பிறகு கவாஸ்கர், பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோர் இடம் பெறுகிறார்கள். மற்ற வீரர்களுக்கு கிரிக்கெட் மைதானங்களில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

யஷ்பால் சர்மா, ரோஜர் பின்னி, மதன்லால், சந்தீப் பாட்டில், மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மைதானங்களில்தான் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வீரருக்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவ் முதன் முதலில் உலக சாதனை புரிந்த 175 ரன்கள் அடித்தது பிபிசி ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ததால் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை. அந்த அற்புத சாதனை நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் மட்டுமே நினைவு கூற முடியும். அந்த சாதனையைத் திரும்பப் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தை இந்தப் படத்தில் நிறைவு செய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டிகளை படமாக்கிய விதம், குறிப்பாக லைவ்வில் இடம் பெறும் எழுத்துக்கள் உட்பட பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

சிறு வயது சச்சின் டிவி முன்னால் மேட்ச் பார்ப்பது, அப்போது நடந்த முஸ்லிம், இந்து மக்கள் கலவரம் ஆகியவை படத்தில் இடைச்செருகலாய் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகள், அதற்கு பின்னால் நடந்த சில சுவாரசிய நிகழ்வுகள் ஆகியவற்றுடன் மட்டும் படத்திற்கான திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். வேறு எந்த சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கபில்தேவ் தலைமையில், 1983 உலகக் கோப்பை நிகழ்வுகளை '83' என்ற படமாகப் பார்த்த திருப்தியில், இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற '2011' ம் ஆண்டு நிகழ்வுகளை '11' என திரைப்படமாக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

83 - மறக்க முடியாத சாதனை

 

83 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

83

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓