பான்டோம் படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், படம் தற்போது வெளியாகியுள்ளது. சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள படம், ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்துள்ளது என்பதை இனி காண்போம்...
ஹூசைன் ஜெய்தி எழுதிய மும்பை அவெஞ்சர்ஸ் நாவலை அடிப்படையாகக்கொண்டு, பான்டோம் படம் உருவாகியுள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது தான் இந்த படத்தின் மூலக்கதை. தக்க பதிலடிக்காக, உளவுத்துறை அதிகாரி, முன்னாள் ராணுவ அதிகாரிகளான தனியால் கான் (சயீப் அலி கான்) மற்றும் நவாஜ் மிஸ்திரி (காத்ரீனா கைப்) நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆபரேசனில், அவர்கள் வெற்றி பெற்றனரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
பஜ்ரங்கி பைஜான் படத்தை தொடர்ந்து, கபீர் கான் இயக்கியுள்ள படம். இப்படத்தில், கபீர் கான் சிறப்பாக தன் பணியை செய்துள்ளார். படம் முடியும்வரை, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. ஆப்கன் ஜலேபி பாடல், கதையில் படம் பார்ப்பவர்கள் ஒன்றுதலுக்கு உதவுகிறது.
சயீப் அலி கான், காத்ரீனா கைப் தங்கள் பாத்திரமறிந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் ராணுவ அதிகாரியாகவே காத்ரீனா கைப் வாழ்ந்திருக்கிறார்...
பான்டோம் - இந்தியர்களால், இந்தியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள படம். இந்தியர்களாக உள்ள அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்
ரேட்டிங் : 3/5