நடிகர்கள் : சல்மான் கான், சோகைல் கான், ஓம் புரி...
இயக்கம் : கபீர்கான்
சல்மான்கான் - கபீர்கான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மூன்றாவது படம் "டியூப்லைட்". சல்மான் வெகுளித்தனமாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களை பிரகாசிக்க வைத்ததா? என்று பார்ப்போம்...!
கதைப்படி, லக்ஷ்மண் சிங் பிஷத் (சல்மான் கான்), பரத் சிங் பிஷத் (சோகைல் கான்) அண்ணன் - தம்பி. வட கிழக்கு மாநிலத்தில் ஜகதாபூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களில் மூத்தவரான சல்மான், சற்று மூளை வளர்ச்சி குறைவானவர் என்பதால் குழந்தை போல் செயல்படுவார். இதனால் இவரை ஊரில் இருப்பவர்கள் அனைவரும் டியூப்லைட் என்று கிண்டல் செய்கின்றனர். அண்ணன்-தம்பி இருவரும் ஒற்றுமையான சகோதரர்களாக வலம் வருகின்றனர். ஒருநாள், இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட போகிறது, ராணுவத்திற்கு ஆள் தேவை என அறிவிப்பு வருகிறது. சல்மான், சோகைலின் தந்தை பென்னி கான்(ஓம் புரி), சோகைலை ராணுவத்திற்கு அனுப்புகிறார். போரும் நடக்கிறது, ஆனால் போருக்கு சென்ற சோகைல் திரும்பவில்லை. தன் சகோதரன், சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சேதி அறிந்து அண்ணன் சல்மான், அவரை மீட்டு வர கிளம்புகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா....?, இல்லையா...? என்பது டியூப்லைட் படத்தின் மீதிக்கதை.
சல்மான் கான், இதுவரை தான் ஏற்று நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான அவரது நடிப்பு சில இடங்களில் அசலாகவும், பல இடங்களில் போலியாகவும் தெரிகிறது. சல்மான் பல பேட்டிகளில் சொன்னது போன்று இந்தப்படத்தில் அவர் அளவாக தான் நடித்திருக்கிறார்.
படத்தில் சோகைல் கானுக்கு நல்ல வேடம் தான், ஆனால் அதற்கான நடிப்பு அவரிடத்தில் இல்லை.
மறைந்த நடிகர் ஓம் புரி கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். இவரைப்போலவே சீன நடிகை ஜூ ஜூ, அந்த சின்ன பையனும் ரசிகர்களை கவருகின்றனர்.
ரேடியோ உள்ளிட்ட பீரிதம்மின் பாடல் ரசிகர்களை கவருகிறது. ஜூலியஸின் பின்னணியும் அதற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அஸீம் மிஸ்ராமின் ஒளிப்பதிவு ஓவியம், ரமேஷ்வரின் படத்தொகுப்பு அது பக்காவாக பொருந்தியிருக்கிறது.
நல்ல ஒரு உணர்வுப்பூர்மான கதை என்றாலும் அதை ரசிகர்களை ஈர்க்கும் விதமாக கொடுக்க தவறிவிட்டார் இயக்குநர் கபீர் கான். படத்தில் தேவையில்லாமல் நிறைய விஷயங்களை புகுத்தி சொல்ல வந்த விஷயத்தை கோட்டை விட்டிருக்கிறார். படத்தின் முதல்பாதி ஓ.கே., ஆனால் பின்பாதி மெதுவாக நவருவது ரசிகனை சலிப்படைய செய்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை. இப்படி படத்திற்கு பல குறைகள் உள்ளன. அதையும் தாண்டி படம் பார்க்க நினைப்பவர்கள் சல்மானின் அதிதீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் மட்டும் பார்க்கலாம், ரசிக்கலாம்.
மொத்தத்தில், "டியூப்லைட் - பியூஸ் போனது"
ரேட்டிங் : 2.5/5