இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள ரொமான்ட்டிக் படம் தான் ஜப் ஹாரி மெட் சாஜல். இப்படம் ரசிகர்களை எந்தளவு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, யூரோப்பில் டூரிஸ்ட் கைடாக இருக்கிறார் ஹாரி எனும் ஷாரூக்கான். அங்கு குடும்பத்துடன் சுற்றலா வருகிறார் சாஜல் எனும் அனுஷ்கா சர்மா. வந்த இடத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் மோதிரத்தை தொலைத்து விடுகிறார். தொலை மோதிரத்தை தேடி ஷாரூக்கும், அனுஷ்காவும் தாங்கள் சுற்றி பார்த்த இடங்களில் எல்லாம் தேடுகின்றனர். இந்த தேடுதலில் ஷாரூக்-அனுஷ்கா இடையே காதல் மலருகிறது, கூடவே தொலைந்து போன மோதிரமும் கிடைக்கிறது. ஷாரூக்கின் காதலை அனுஷ்கா ஏற்றாரா.... இல்லை ஏற்கனவே நிச்சயமானவரையே கரம் பிடித்தாரா....? என்பது ஜப் ஹாரி மெட் சாஜல் படத்தின் ரொமான்ட்டிக் கலந்த மீதிக்கதை.
ஷாரூக்கான், ஹாரி எனும் டூரிஸ்ட் கைடாக ஆங்காங்கே காமெடியிலும், அனுஷ்காவுடனான ரொமான்ட்டிக்கிலும் ஈர்த்தாலும், ரசிகர்களை இன்னும் பெரிதாய் கவரவில்லை என்பதே உண்மை. அமீர்கான், பிகே., தங்கல் மாதிரியான படங்களை கொடுத்து வரும் நிலையில் ஷாரூக்கான் இன்னும் இதுபோன்ற ரொமான்ட்டிக் கதைகளில் நடிப்பது ஏனோ...?
அனுஷ்கா, சாஜல் எனும் கதாபாத்திரத்தில் ஷாரூக்கானை விட அருமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரை மாதிரியே படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கே.யு.மோகனின் ஒளிப்பதிவில் ஐரோப்பிய நகரங்கள் மிளர்கின்றன.
ஷாரூக்கான் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்தபடத்தில் அது மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும்.
இம்தியாஸ் அலி இப்படத்தின் இயக்குநர். முதன்முறையாக ஷாரூக்கான் உடன் இணைந்துள்ளார். படத்தின் பெரிய பிளஸே ஷாரூக்கான் - அனுஷ்கா இடையேயான காதல் கெமஸ்ட்டிரி தான். படத்தின் முதற்பாதி ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கிறது, ஆனால் பிற்பாதி ரசிகனை சலிப்படையவே செய்கிறது. அதற்கு காரணம் படத்தின் நீளமும், மெதுவாக நகரும் கதையும், அடுத்தது என்ன நடக்க போகிறது என்று முன்கூட்டியே கணிக்கப்படும் பலவீனமான திரைக்கதையுமே காரணம்.
என்னதான் கெமிஸ்ட்டிரி ஒர்க்-அவுட்டானாலும் மற்ற சயின்ஸூம் ஒர்க்-அவுட் ஆகணுமே, அவ்வாறு இல்லாதது பலவீனமே...!
மொத்தத்தில், ஜப் ஹாரி மெட் சாஜல் - ஷாரூக்கானின் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்... மற்றவர்களுக்கு...?