நடிகர்கள் : ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், அக்ஷ்ய் கண்ணா
இயக்குநர் : ரோகித் தவான்
தயாரிப்பு : சஜித் நாடியாவாலா
ரோகித் தவான் இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், வருண் தவான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷ்ன் படம் தான் 'டிஷ்யும்'. சரி இனி இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று பார்ப்போம்...
கதைப்படி, கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றில் படம் துவங்குகிறது. இந்திய வீரராக இருக்கும் விராஜ் சர்மா(சாகிப் சலீம்), இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேற முக்கியமாக காரணமாக அமைகிறார். அதன்பின் இறுதிப்போட்டி தொடங்க சரியாக 36 மணிநேரம் இருக்கும் தருவாயில் விராஜ், சூதாட்ட மன்னன் வாகா எனும் அக்ஷ்ய் கண்ணாவால் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட விராஜ் கண்டுபிடிக்க கபீர் எனும் ஜான் ஆபிரஹாம் நியமிக்கப்படுகிறார். அவருக்கு துணையாக ஜூனைத் அன்சாரி எனும் வருண் தவான் களமிறங்குகிறார். இருவரும் விராஜ்ஜை கண்டுபிடிக்கும் சூழலில் இஷிகா எனும் ஜாக்குலின் பெர்ணான்டஸை சந்திக்கிறார்கள். ஜாக்குலினின் உதவியோடு கிரிக்கெட் வீரர் சுராஜை ஜானும், வருணும் மீட்டார்களா.? எதற்காக அக்ஷ்ய், சுராஜை கடத்தினார் என்பது டிஷ்யும் படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
ஜான், வழக்கம் போல தன் உடற்கட்டால் ரசிகர்களை கவருகிறார், ஆனால் நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. உடற்கட்டில் இருக்கும் பளபளப்பு நடிப்பில் இல்லை.
வருண் தான், நன்றாக நடிக்கிறார், காமெடி செய்கிறார், இருந்தாலும் ஆக்ஷ்ன் காட்சி அவருக்கு சுத்தமாக எடுபடவில்லை.
ஜாக்குலின் பெர்ணான்டஸ் நானும் இந்தப்படத்தில் இருக்கிறேன் என்ற அளவில் தான் உள்ளார்.
இவர்கள் மூவரையும் விட படம் முழுக்க அக்ஷ்ய் கண்ணா தான் அதிகம் தெரிகிறார். அந்த வாய்ப்பை அவர் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
கெஸ்ட் ரோலில் வரும் அக்ஷ்ய் குமார், நர்கீஸ் பக்ரி, பரிணிதி சோப்ரா ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ஈர்க்கின்றனர். அதிலும் 'கே'-ஆக வரும் அக்ஷ்ய் ரசிகர்களை வசீகரிக்கிறார்.
டெய்சி பாய்ஸ் படத்திற்கு பிறகு 'டிஷ்யும்' படத்தை இயக்கியிருக்கிறார் ரோகித். சந்தேகமே வேண்டாம், படம் முழுக்க முழுக்க ரசிகர்களை என்டர்டெயின் பண்ணுகிறது. இருந்தாலும் படத்தின் திரைக்கதை பலவீனமாக இருப்பது, அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ரசிகர்கள் யூகிக்க முடிவது இயக்குநரின் பலவீனத்தை காட்டுகிறது.
படத்தின் பலமே அயன்காவின் நச்-டச் ஔிப்பதிவும், நிதின், ரித்தேஷின் பக்காவான படத்தொகுப்பும் தான். இவர்களுக்கு பக்கபலமாக பிரிதாமின் பாடல்கள் இசையும், அபிஜித்தின் பின்னணி இசையும் அமைந்துள்ளது.
படத்திற்கு டிஷ்யும் என்று பெயர் வைத்திருந்தாலும் ஆக்ஷ்ன் காட்சி கொஞ்சம் கம்மி தான். ஆனாலும் ஜான்-வருண் இடையேயான அன்பு சோலே படத்தில் வரும் அமிதாப்-தர்மேந்திராவை நினைவூட்டுகிறது. படத்தில் இவர்கள் இணைந்து பண்ணும் சாகசங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது. என்ன தான் சில பல குறைகள் இருந்தாலும் டிஷ்யும் படம் ரசிகர்களை என்டர்டெயின்ட்மென்ட் பண்ணும் விதத்தில் அமைந்திருப்பதால் ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.
மொத்தத்தில், ''டிஷ்யும் - 'பன்ச்' கம்மி!''