விமர்சனம்
கதைப்படி, அமெரிக்கா - நியூஜெர்சி புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ்குடும்பம் பிரசன்னா- சினேகாவினுடையது. தங்களது செல்லமகள் அக்ஷயாதினேஷுடன் வசிக்கும் அவர்கள் வீட்டிற்குள் பெயிண்டர் ரூபத்தில் அடியெடுத்து வைக்கிறான் குழந்தை பாலியல் கொடூரம் புரியும் அமெரிக்கன்- வில்லன் ஜான்ஷே! அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா? அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா? என்பது மீதிக்கதை!
மேக்கப்பும், மீசையும் இல்லாமல் பிரசன்னா அமெரிக்காவாழ் தமிழராகவே அசத்தியிருக்கிறார். குழந்தை மீதான பாசத்திலும் சரி, மனைவி சினேகா மீதான காதலிலும் சரி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். வில்லனுடன் மோதி குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில் கூட பிரசன்னா புதிய பரிமாணம் காட்டி பிரமிப்பூட்டுகிறார். கீப் இட் அப்!
சினேகாவும் பிரமாதம்! பில்லியார்ட்ஸ் போர்டு மீது கணவன் பிரசன்னாவுடன் காதல் களியாட்டம் புரியும் காட்சி தவிர பிற காட்சிகள் அனைத்திலும் அக்ஷயாதினேஷின் அழகான அம்மாவாக அமைதியாக நடித்து சபாஷ் வாங்கி விடுகிறார்.
பிரசன்னா - சினேகா இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அமெரிக்க வில்லன் ஜான்ஷே என்றால் மிகையல்ல. குழந்தைகள் மீது அப்படி ஒரு விரகதாபம் கொள்வதாக நடிக்க ஜான் ஷாவால் மட்டுமே முடியும்! என சொல்ல வைத்து விடுகிறார் இந்த ஹாலிவுட் நடிகர். குழந்தை நட்சத்திரம் அக்ஷயாதினேஷûம் பிறற அமெரிக்கா வாழ் இந்தியர்களும்கூட பேஷ் பேஷ் சொல்ல வைத்து விடுகின்றனர்.
கிரிஸ் ப்ரெய்லிச்சின் "ரெட் ஒன்' காமிரா ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம் என்றாலும் முழுக்க முழுக்க அமெரிக்க பின்னணி சற்றே பலவீனம். அதுவும் இந்தியாவில் குழந்தை பாலியல் கொடூரங்கள், குற்றங்கள் ஜாஸ்தி எனக் க்ளைமாக்ஸில் கூற முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படம் எடுத்திருப்பது "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை அந்நியப் படுத்துகிறதென்றால் மிகையல்ல!
அருண் வைத்யநாதனின் எழுத்தும் இயக்கமும் ஒரு "ஏ' கிளாஸ் பிரச்னையை பி.சி. சென்டருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளன என்றால் மிகையல்ல! ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம்! பல இடங்களில் பலவீனம்!!
மொத்தத்தில் "அச்சமுண்டு அச்சமுண்டு' உலகத்தில் மனிதர்கள் "இப்படியும் உண்டு! என குழந்தை பாலியல் கொடூரர்களை அடையாளப்படுத்தி அறை கூவல் விடுத்துள்ளது!
"அச்சமுண்டு அச்சமுண்டு' அதில் "நியாமுண்டு!'
------------------
குமுதம் விமர்சனம்
கார்த்திக்ராஜாவை குறிப்பிடாமல் "அச்சமுண்டு அச்சமுண்டு'' என ஆரம்பிப்பதே கஷ்டம். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். பின்னணி இசையில் இளையராஜாவின் உயரத்தைத் தொட்டிருப்பது, புலிக்குப் பிறந்ததன் அடையாளம். படத்தின் ஜீவனும் அதுதான்.
அடுத்தது, அறிமுக இயக்குனர் அருண் வைத்யநாதன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என தொழில் நுட்பங்கள் எல்லாம் எப்படி இயல்பாக, சீராக இருக்க வேண்டும் என்ற பால பாடத்தை பக்காவாகச் செய்திருக்கிறார்.
இதமானது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை முகம் சுளிக்க வைக்காமல் படு டீஸன்ட்டாக பேசியிருக்கும் விதம். இவை எல்லாவற்றிற்காகவும் அருண் வைத்யநாதனை தாராளமாக தட்டிக் கொடுக்கலாம் க்ளைமாக்ஸில் தன் கற்பனை வறட்சியை கொஞ்சம் கவனித்து சரி செய்திருந்தால்...!
அமெரிக்காவில் செட்டிலான ஒரு தமிழ் தம்பதி நாலு சுவர்களுக்கு நடுவே நடத்துகிற திகில் போராட்டம்தான் கதை. வித்தியாசமான கெட்டப்புக்கு ரொம்ப மெனக்கெடாமல், சிம்பிளாக மழு மழு முகத்துடன் வருகிற பிரசன்னா என்.ஆர்.ஐ. கேரக்டரில் கனகச்சிதம். சிஸ்டத்துக்கு ஏற்ற கீ போர்டு மாதிரி சினேகாவும் செம பொருத்தம். சின்னச் சிரிப்பிலும், முறைப்பிலும் "ஜஸ்ட் லைக் தட்'' ஸ்கோர் பண்ணுகிறார். முகத்தில் மெல்லிய சோர்வும், பாசமுமாக யார் அந்த சிறுமி? ஏதோ நம் வீட்டு குழந்தைபோல வந்து போகிறாள்.
ஒரு சின்சியர் பெயிண்டராக பிரசன்னா குடும்பத்துக்கு அறிமுகமாகிற வில்லன் ஜான்ஷே, குழந்தையிடம் ஃப்ரெண்ட்ஷிப் பிடிப்பதற்காக செய்கிற விரல் விளையாட்டு. பெரும் விபரீதத்திற்கு நாசூக்கான ட்ரெய்லர். கட்டுமஸ்தான ஜான் ஷே, பிரசன்னாவுக்கு ரொம்பக் கஷ்டம் கொடுக்காமல் செத்துப் போகிற க்ளைமாக்ஸ், கால்வாயில் விழுந்து காத்தாடி. த்ரிலருக்குள் ஒரு சமூகப் பிரச்னையை திணிக்க முயன்றிருக்கும் இயக்குனர், அந்தக் கொடுமைகள் எல்லாம் யதார்த்த சூழலில் இயல்பான மனிதர்களால் நடைபெறுகிறது என்கிற உண்மையை உணர்த்தத் தவறியது விருந்து வைத்து விட்டு வெற்றிலை பாக்கை மறந்த கதையாகி விட்டது.
அச்சமுண்டு அச்சமுண்டு : அசத்தினாலும் மிரட்டவில்லை.
குமுதம் ரேட்டிங் : ஓ.கே.
-----------
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!