தினமலர் விமர்சனம்
2007ம் ஆண்டு வெளிவந்த 'வெல்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக, லவ் கம் காமெடி படமாக வெளிவந்திருக்கும் படம் தான் ''வெல்கம் பேக்.'' இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்....
வெல்கம் படத்தின் கதை எங்கு முடிந்ததோ.... அங்கிருந்து தொடர்கிறது வெல்கம் பேக் படத்தின் கதை. உதய்(நானா பட்டேக்கர்) மற்றும் மஜ்னு(அனில் கபூர்) இருவரும் ஓய்வுபெற்ற ரவுடிகள். தற்போது துபாயில் பெரிய ஹோட்டல் உள்ளிட்ட தொழில்கள் செய்து வசதியாக இருக்கின்றனர். இருவரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள், ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தசூழலில் ஒருநாள் ராஜ்குமாரி (அங்கிதா ஸ்ரீவஸ்தவா) என்ற பெண் உதய் மற்றும் மஜ்னு வாழ்க்கையில் நுழைகிறார். அவருடன் சேர்ந்து மகாராணி(டிம்பிள் கபாடியா)யும் வருகிறார். இருவரும் உதய் மற்றும் மஜ்னுவிடம் பணம் பறிக்க பார்க்கிறார்கள்.
இதனிடையே உதய்யின் வளர்ப்பு சகோதரியான ரஞ்சனா எனும் ஸ்ருதிஹாசனுக்கு, நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்க எண்ணுகின்றனர் உதய் மற்றும் மஜ்னு. ஆனால் ரஞ்னாவோ, அஜ்ஜூ எனும் ஜான் ஆபிரஹாமை காதலிக்கிறார். ஒருநாள் எதிர்பாராத விதமாக அஜ்ஜூ - உதய்-மஜ்னு இடையே மோதல் வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க நஸ்ருதீன் ஷாவையும் அவரது மகன் ஹனி எனும் சைனி அகுஜாவையும் அழைத்து வருகிறார்கள். ஹனி யார் என்று பார்த்தால், ரஞ்சனாவை ஒருதலையாக காதலித்து ஏமாந்தவர். இப்படியொரு இடியாப்ப சிக்கலில், ஜான்-ஸ்ருதி காதல் நிறைவேறியதா.? அங்கிதா-டிம்பிள் இருவரும் நானா மற்றும் அனிலிடம் பணம் பறித்தார்களா...? உள்ளிட்ட பல வினாக்களுக்கு காமெடியாக பதில் சொல்கிறது ''வெல்கம் பேக்'' படத்தின் மீதிக்கதை.
அனில் கபூர், நானா பட்டேக்கர், பரேஷ் ராவல், ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், டிம்பிள் கபாடியா, நஸ்ருதீன் ஷா.... என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இவர்களில் அனில் கபூர், நானா பட்டேக்கரின் நடிப்பு தான் அனைவரையும் கவருகிறது. ஜானின் நடிப்பு ரசிகர்களை பெரிதாக கவரவில்லை, ஸ்ருதிக்கு நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. அங்கிதா-டிம்பிளின் நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை.
8 ஆண்டுகளுக்கு பிறகு அனீஸ் பாஸ்மி, ''வெல்கம் பேக்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகி இருக்கிறார். படத்தின் நீளம், காமெடி காட்சிகள் வலிய திணித்து இருப்பது போன்றவை ''வெல்கம் பேக்'' படத்தின் பலவீனமாக இருக்கிறது. போதா குறைக்கு இசையும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை, இதனால் வெல்கம் பேக் படம் ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. வெல்கம் படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை, ஆகையால் உங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
மொத்தத்தில், ''வெல்கம் பேக் - கோ பேக்!''
ரேட்டிங் - 2/5