2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டி சீரிஸ், ரெட்ரோபைல்ஸ்
இயக்கம் - ஓம் ராவத்
பின்னணி இசை - சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா
நடிப்பு - பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான்
வெளியான தேதி - 16 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

நம் நாட்டின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டையும் தெருக்கூத்துக்களாக, நாடகங்களாக, திரைப்படங்களாக, டிவி தொடர்களாக, அனிமேஷன் தொடர்களாக எத்தனையோ வடிவில் பார்த்து ரசித்திருக்கிறோம். அந்த இரண்டு காவியங்களைப் பற்றிய கதாபாத்திரங்களும், அவர்களது உருவ அமைப்புகள் இப்படித்தான் இருக்கும் என்று நம் மனதளவில் ஒரு கற்பனை இருக்கும். அப்படி நம் கற்பனைக்கு ஏற்றபடி அமையும் திரைப்படங்கள்தான் நம்மை அதிகம் ஈர்த்து ரசிக்க வைக்கும். ஆனால், இந்த 'ஆதி புருஷ்' படத்தில் ஏதோ ஒரு தோற்றத்தை, களத்தை 'மோஷன் கேப்சரிங்' முறையில் படமாக்கி வேறு ஒரு பிம்பத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத்.

ராமாயணக் கதாபாத்திரங்களின் பெயர்களாக ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், ராவணன் என்பதுதான் நாம் படித்து அறிந்த ஒன்று. ஆனால், இந்தப் படத்தில் ராமரை ராகவா எனவும், லட்சுமணரை சேஷு என்றும், சீதாவை ஜானகி என்றும், அனுமனை பஜ்ரங் என்று அழைப்பதும் நமக்கு அந்நியப்பட்டு தெரிகிறது. தமிழில் டப்பிங் செய்தவற்களாவது தமிழ் ரசிகர்களுக்கு அதிக பரிச்சயம் ஆன பெயர்களை வைத்து டப் செய்திருக்கலாம்.

ராமர், சீதா, லட்சுமணர் 14 வருடங்கள் வனவாசம் இருக்கும் போது கதை நடக்கிறது. தங்கை சூர்ப்பனை சொல்வதைக் கேட்டு சீதாவைக் கடத்திக் கொண்டு போகிறார் ராவணன். எந்த படை பலமும் இல்லாத ராமர் வானரப் படையின் தலைவன் சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோருடனும் ஏராளமான வானரங்களுடன் இலங்கைக்குச் செல்லும் வழியில் ராமர் பாலத்தையும் கட்டி முடித்து, அதன் வழியே சென்று ராவணனை எதிர்த்துப் போரிட்டு, தனது மனைவி சீதாவை மீட்பதுதான் இப்படத்தின் கதை.

ராமாயணத்தின் நாயகனான ராமபிரான் சாந்தமே வடிவானவராக, அமைதியின் திருவுருவமாக ஈரேழு லோகத்திலும் உள்ளவர்களும் அவரது அழகைப் பார்த்து வியக்கும் ஒருவராகத்தான் பார்த்திருக்கிறோம். மீசையில்லாத அவரது தோற்றம்தான் நமது மனதில் ஆழப் பதிந்த ஒன்று. ஆனால், இந்தப் படத்தில் பிரபாஸை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவரை மீசையுடன் நடிக்க வைத்திருப்பது பொருத்தமற்றதாக உள்ளது. ராமபிரான் கதாபாத்திரத்தில் நடிக்க மீசையைக் கூடவா தியாகம் செய்ய மாட்டார் பிரபாஸ். 'பாகுபலி' பட ஆக்ஷன் நாயகனை ராமன் ஆக முழுமையாக ஏற்க முடியவில்லை. எந்த ஒரு எமோஷனலும் இல்லாமல் ஏதோ ஒரு கடமைக்கு நடித்தது போலவே படம் முழுவதும் நடித்திருக்கிறார் பிரபாஸ்.

சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகையான கிரித்தி சனோன் பொருத்தமாக இருக்கிறார். ஆனாலும், அவருக்கான காட்சிகள் அதிகமில்லை. ராவணனை எதிர்த்துப் பேசும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவருக்கான வாய்ப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான். ஹாலிவுட் படங்களில் வரும் அனைத்து சக்திகளையும் பெற்ற மாயாஜால வில்லன் போல ராவணன் கதாபாத்திரத் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். அது மட்டுமல்ல ராவணன் அரண்மனை, வழிபடும் சிவன் கோவில், அவருடைய படை வீரர்கள் என அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே ஏதோ ஹாலிவுட் ஏலியன் படத்தில் வருவது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை என்று சொல்லிவிட்டு ராவணன் இருக்கும் இடத்தை மட்டுமே காட்டுகிறார்கள். ராவணன் கதாபாத்திரத்தை ஒரு ரோபோ போலவே மாற்றிவிட்டார்கள். நடப்பதும், சண்டையிடுவதும் அப்படித்தான் இருக்கிறது.

லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங், அனுமன் கதாபாத்திரத்தில் தேவதத்த நாகே அவர்களுக்கான காட்சிகளில் படத்தின் மற்ற முக்கிய நடிகர்களைக் காட்டிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களான மண்டோதரி, இந்திரஜித், விபூஷணன், சூர்ப்பனகை கதாபாத்திரங்கள் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். இந்திரஜித் கதாபாத்திரத்திற்கு மட்டும் ஒரு மாயாஜால சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பல்லாயிரம் வருடப் பாரம்பரியமான ராமாணயத்தை இப்படி மாற்றி கொடுக்கலாமா என ஒரு பக்கம் கேள்விகள் வரலாம். இந்தக் காலத்து குழந்தைகளும் ரசிக்கும் விதமாக அவர்களும் ராமாணயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக காலத்திற்கேற்றபடி மாற்றி எடுப்பதில் தவறில்லை என்றும் சிலர் சொல்லலாம்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட இசையமைப்பாளர்கள் சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா ஆகியோர் தங்களது முழு ஈடுபாட்டை கொடுத்திருக்கிறார்கள்.

ராமாயணம் என்றாலே ஒரு தெய்வீகம் தானாக வந்துவிடும். படத்தைப் பார்க்கும் போது அந்த 'டிவைன் வீலிங்', உணர்வு குறைவாகவே வருகிறது. அந்த தெய்வீகத்தை திரையிலும் உணர்த்தும் விதத்தில் சில பல காட்சிகளை இயக்குனர் அமைத்திருக்க வேண்டும். ஒரு திரைப்படத்திற்கான கதாபாத்திரங்கள், அதற்கான காட்சிகள் என்ற அளவில் மட்டுமே படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் முழுவதும் இருட்டிலேயே நடக்கிறது. போர்க்களக் காட்சிகளைக் கூட இருட்டில் நடப்பது போலவே காட்டுகிறார்கள். விஎப்எக்ஸ் காட்சிகளின் தரம் தெரிந்துவிடக் கூடாது என்பதும் காரணமாக இருக்கலாம். 3 டியில் படத்தைப் பார்க்கும் போது பல காட்சிகள் தெளிவாக இல்லை. அவுட் ஆப் போகஸ் போல் பல காட்சிகள் தெரிகிறது. சாதாரண அனிமேஷன் படங்களைக் கூட இதை விட சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

சில பல ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்கள், 'கிங்காங், அவெஞ்சர்ஸ், பிளானட் ஆப் த ஏப்ஸ்' உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் பல காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. அனிமேஷன், கார்ட்டூன் படங்களைப் பார்த்து ரசிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. டெக்னிக்கல் குறைபாடுகள், தரமான விஎக்ஸ் என இருந்திருந்தால் இந்தப் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும்.

ஆதிபுருஷ் - ராமாயணம் 2023

 

ஆதி புருஷ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆதி புருஷ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓