
உள்ளொழுக்கு (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : RSVP மற்றும் மேக் கபின் பிக்சர்ஸ்
இயக்கம் : கிறிஸ்டோ டோமி
இசை : சுஷின் ஷ்யாம்
நடிகர்கள் : பார்வதி, ஊர்வசி, பிரசாந்த் முரளி, அர்ஜூன் ராதாகிருஷ்ணன், அலான்சியர் ளே லோபஸ்
வெளியான தேதி : 21 ஜூன் 2024
நேரம் : 2 மணி 3 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
கல்லூரியில் தன்னுடன் படித்த அர்ஜூன் ராதா கிருஷ்ணனை காதலித்தாலும் சூழ்நிலை காரணமாக கிராமத்தில் வசிக்கும் ஊர்வசியின் மகன் பிரசாந்த் முரளியை திருமணம் செய்து கொள்கிறார் பார்வதி. இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தற்போதைய வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் நகரத்தில் வசிக்கும் தனது பழைய காதலனை தேடிச்சென்று நெருக்கம் காட்டுகிறார் பார்வதி. இதனால் எதிர்பாராதவிதமாக கர்ப்பம் ஆகிறார். இதை எப்படி கையாள்வது என அவர் தவிக்கும் வேளையில் ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பார்வதியின் கணவன் திடீரென மரணம் அடைகிறார்.
தனது மகன் மறைந்தாலும் பேரன் உருவில் மீண்டும் அவன் தன் வீட்டிற்கு வரப் போகிறான் என சந்தோஷப்படும் ஊர்வசிக்கு பார்வதியின் இன்னொரு வாழ்க்கை பற்றி தெரிய வருகிறது. பிறக்கப் போகும் குழந்தைக்கு உரிமையுடன் சொந்தம் கொண்டாட முடியாத சூழலில் பார்வதியை எப்படியாவது தன்னிடம் தக்க வைக்க முயற்சிக்கிறார். பார்வதியின் பெற்றோரும் ஊர்வசியின் முடிவுக்கு ஆதரவு தருகிறார்கள் இன்னொரு பக்கம் காதலன் தனது வேலையின்மை பிரச்னையை காரணம் காட்டி பார்வதியுடன் இணைந்து வாழ்வதை தாமதப்படுத்தி வருகிறார்.
பார்வதியின் பிடிவாதம் கண்டு, கடும் மழைக்காலம் என்பதால் மருத்துவமனையில் இருந்து மகனின் உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி காரியங்கள் முடிந்ததும், உன் முடிவுபடி நீ செல் என ஊர்வசி விரக்தியுடன் கூறுகிறார். இந்த நிலையில் தனது கணவர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மை ஒன்று பார்வதிக்கு தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது மீதிக்கதை.
விருப்பமில்லாத கல்யாணம், மறக்க முடியாத காதல் இரண்டையும் ஒன்றிணைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும் இதில் ஒரு மருமகளுக்கும் மாமியாருக்குமான உணர்ச்சிப் போராட்டத்தை மையப்படுத்தி கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள். பார்வதியும், ஊர்வசியும் காட்சிக்கு காட்சி ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு நடித்திருக்கிறார்கள். இடைவேளை வரை சென்டிமென்டாக செல்வதால் கொஞ்சம் சோர்வு தட்டினாலும் இடைவேளைக்கு பிறகு குறிப்பாக ஊர்வசிக்கு உண்மை தெரிந்த பிறகு இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு மென்மையான ஆடு புலி ஆட்டமாக களம் விறுவிறுப்பாக மாறுவதை மறுக்க முடியாது.
மகனுக்காக உருகுவதும் மருமகளை மகளாக பாவித்தாலும் அதிலும் கொஞ்சம் சுயநலம் மறைத்து செயல்படுவதும் என பரிதாபத்துடன் சில நேரங்களில் கொஞ்சம் கோபத்தையும் சம்பாதித்து கொள்கிறார் ஊர்வசி. அதே போலத்தான் பார்வதியும் விதி மீறிய உறவால் கோபத்தை ஏற்படுத்தினாலும் இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் அவர் மீது நம்மை பரிதாபம் செலுத்த வைத்து விடுகிறார். இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது. அதுதான் கடைசியில் நடக்கிறது. ஆனாலும் அது ஏதோ வலிந்து திணிக்கப்பட்டது போல தெரிகிறது.
பார்வதியின் காதலனாக நடித்துள்ள அர்ஜூன் ராதாகிருஷ்ணன் ஒரு சராசரி காதலனின் மனநிலையை அழகாக பிரதிபலித்துள்ளார். கணவனாக நடித்துள்ள பிரசாந்த் முரளி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஒரு நோயாளியாக, இறந்து போன ஒரு பிணமாக என நடிப்பில் அசாத்திய பொறுமை காட்டியுள்ளார். இவர்களை தவிர பார்வதியின் தந்தையாக நடித்து படம் முழுவதும் ஒரு சராசரி மனிதனுக்கே உரிய, பெண்ணைப்பெற்ற தகப்பனுக்கே உரிய கோப தாபங்களுடன் வலம் வரும் ஒரு இயல்பான மனிதராக நடித்துள்ள அலன்சியர் லே லோபஸ் காட்சிகளை எளிதாக நகர்த்துவதற்கு உதவி இருக்கிறார்.
படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம் பிடித்துள்ளது. அதிலும் பெரும்பாலான நேரம் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்திருக்க, வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்திருக்கும் ஒரு சூழலில் நாமும் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வை ஒளிப்பதிவாளர் ஷெநாத் ஜலால் ஏற்படுத்தி விடுகிறார். சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதை மறுக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் கிறிஸ்டோ டோமி. ஆனால் பெற்றோர்களின் தரப்பில் செய்யப்படும் தவறுகளால் தான் இது போன்று நிகழ்வுகள் நடக்கின்றன என்பதாக அவர் கூறியிருப்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு ஆணுக்கு ஏதேனும் உடல் நல குறைபாடு இருந்தால் அதை மறைக்காமல் பெண் வீட்டாரிடம் குறிப்பாக பெண்ணிடம் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம் என்கிற ஒரு விழிப்புணர்வு செய்தியையும் இந்தப்படம் சொல்லியிருக்கிறது
உள்ளொழுக்கு : எதுவும் தப்பில்லை... அவரவர் பார்வையில்...!
பட குழுவினர்
உள்ளொழுக்கு (மலையாளம்)
- நடிகை
- இயக்குனர்