தங்கலான்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பா ரஞ்சித்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
'கேஜிஎப்' என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் 'கோலார் தங்க வயல்' தமிழர்கள் மற்றம் தெலுங்கு மக்களின் உழைப்பால் உருவான ஒரு தங்கச்சுரங்கம். ஆனால், அந்த தங்கச் சுரங்கத்தை 5ம் நூற்றாண்டு காலத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்கள் தான் பாதுகாத்து வருகின்றனர். அதனால், அந்த சுரங்கத்தில் உள்ள தங்கம் அவர்களுக்கே சொந்தம் என புனைவு கலந்த படமாகச் சொல்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.
மெட்ராஸ், மலேசியா, மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுடன் கலந்த கமர்ஷியல் கதையை சொன்னவர் ரஞ்சித். இந்த படத்தில் 5ம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டு என அவருடைய கற்பனையில் ஒரு சரித்திரத்தைப் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார். வாழ்வியலை பதிவு செய்ய முயற்சித்து எத்தனையோ முன் ஜென்மத்து ஞாபகக் கதை, முப்பாட்டன்கள் கதை, சூனியக்காரி என 'பேன்டஸி'க்குள் நுழைந்து என்னென்னமோ சொல்கிறார்.
1850ம் ஆண்டில் படத்தின் கதை ஆரம்பமாகிறது. அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் வேப்பூர் என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பலரும் மிராசுதாரருடைய பண்ணையில் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த 'தங்கலான்' விக்ரம் மட்டும் அவருடைய நிலத்தில் சொந்தமாக பயிர் செய்கிறார். அதனால், ஆத்திரமடையும் மிராசுதாரர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரே நிலத்தை எடுத்துக் கொள்கிறார். அந்த சமயத்தில் தங்கத்தைத் தோண்டி கண்டுபிடிக்க கூலி ஆட்களைத் தேடி வருகிறார் ஆங்கிலேயேர் டேனியல் கால்டகிரோன். அவர் தரும் கூலிக்கு ஆசைப்பட்டு விக்ரம், பசுபதி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் செல்கிறார்கள். இன்னும் அதிக ஆட்கள் தேவைப்பட ஊருக்குத் திரும்பும் விக்ரம், தன்னிடம் இருந்த கூலிப் பணத்தைக் கொடுத்து அவருடைய நிலத்தை மீட்கிறார். அதை ஆசையாகக் காட்டி ஊர் மக்கள் பலரையும் அழைத்துக் கொண்டு தங்கத்தைத் தோண்டும் இடத்திற்குச் செல்கிறார். ஆனால், அங்கு தங்கத்தை எடுக்க விடாமல் அதைக் காப்பாற்றும் சூனியக்காரி மாளவிகா மோகனன், மாயஜாலத்துடன் அதிரடி காட்டுகிறார். ஆங்கிலேயர் டேனியலும் விக்ரம் கூட்டத்தினரை அடிமையாக நடத்த ஆரம்பிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தை ரசிப்பதற்கு முதன்மைக் காரணமாய் இருப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் படத்தின் நாயகன் விக்ரம், மற்றொருவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். அப்படி ஒரு மேக்கப், இடுப்பில் மட்டுமே சுற்றப்பட்ட ஒரு துணி என வெயில், காடு, மேடு, புழுதி என அனைத்தையும் சமாளித்து 'தங்கலான்' கதாபாத்திரத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார் விக்ரம். எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்கான ஒரு உடல் மொழி, பேசும் விதம் என தன்னை மாற்றிக் கொள்வார். 'பிதாமகன்' படத்திற்குப் பிறகு விக்ரமின் திறமையை வெளிப்படுத்தியுள்ள படம் இது. இவருக்குப் போட்டியாக இந்த வருடத்திய தேசிய விருதுக்காக வேறு யார் வருகிறார்கள் என்று பார்ப்போம்.
விக்ரம் மனைவியாக நான்கைந்து குழந்தைகளின் தாயாக பார்வதி திருவோத்து. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இங்குள்ள வேறு எந்த ஒரு முன்னணி நடிகையும் நடித்திருக்க மாட்டார்கள். மலையாள நடிகை ஒருவர் அந்தக் கால கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு 'லைவ் சவுண்ட்' ஒலிப்பதில் அதற்கேற்ற மொழியைப் பேசி நடிப்பது சாதாரண விஷயமல்ல. தங்க மலைப் பகுதியைக் காப்பாற்றும் சூனியக்காரியாக மாளவிகா மோகனன். அவர் பேசியதை விட கத்தியதுதான் அதிகமாக இருக்கும். சில சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களில் பெருமாள் பக்தராக பசுபதி, ஆங்கிலேயராக டேனியல், விக்ரம் சக ஊர்க்காரராக ஹரிகிருஷ்ணன், துபாஷ் ஆக ஆனந்த்சாமி குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
தனது திறமையை வெளிப்படுத்தக் கூடி படங்கள் அமைந்தால் அவற்றில் ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்திற்கு தகுந்த பலமாக இருக்கும். இப்படத்தின் பின்னணி இசை 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குப் பிறகான சரித்திரப் படங்களில் ஜிவியின் குறிப்பிடும்படியான ஒரு இசை. பாடல்களிலும் அவரது ஆர்வம் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் வறண்ட வெளியில் சூரிய ஒளியின் தாக்கத்தில் படமாக்கியிருப்பது சவாலான ஒன்று. கலை இயக்குனர் மூர்த்தி, ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டன்னர் சாம், மேக்கப் கலைஞர்களின் ஈடுபாடும் குறிப்பிட வேண்டியவை.
படத்தின் உருவாக்கத்திற்காக நிறைய யோசித்தவர்கள், கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் இன்னும் யோசித்திருக்கலாம். இடைவேளை வரையிலான கதை கூட ஓகேதான். அதற்குப் பிறகு 5ம் நூற்றாண்டு பிளாஷ்பேக் என்றெல்லாம் பயணிப்பது எப்படி திரைக்கதையைக் கொண்டு போவது என்ற குழப்பத்தால் வந்ததென்பது தெரிகிறது. படத்தில் திணிக்கப்பட்ட பல காட்சிகள், கருத்துக்கள் இருப்பது போலவே கிளைமாக்சையும் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள்.
1850ல் தங்கத்தைத் தோண்டுவதற்காக ஒரு கிராமத்திலிருந்து சென்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கதை என்ற ஒரு வரியைச் சுற்றி அதற்கான இயல்பான ஒரு வாழ்வியலை மட்டும் பதிவு செய்திருந்தால் தங்கலான் தரமாக இருந்திருக்கும்.
தங்கலான் - விக்ரமுக்காக மட்டும் காணலாம்..
தங்கலான் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தங்கலான்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
விக்ரம்
நடிகர் விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி. 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ரசிகர்கள் அவரை சீயான் என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். ராவணன் படத்தின் மூலம் இந்தியிலும் நடிக்கத் தொட்ங்கிய விக்ரம், தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்.