புழு (மலையாளம்),Puzhu (Malayalam)
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : எஸ்.ஜார்ஜ்
இயக்கம் : ரதீனா
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிகர்கள் : மம்முட்டி, பார்வதி, அப்புன்னி சசி, ரமேஷ் கோட்டயம், நெடுமுடி வேணு மற்றும் பலர்
வெளியான தேதி : 13.05.2022
நேரம் : 1 மணி 55 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நண்பர்களுடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருபவர் மம்முட்டி. மனைவி இறந்தபின் பள்ளி செல்லும் ஒரே மகனை கண்டிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வளர்க்கிறார். இதனாலேயே தனது தந்தை மீது பயம் கலந்த வெறுப்பை காட்டுகிறான் மகன். இன்னொரு பக்கம் தனது தங்கை பார்வதி வேற்று சாதி நபரை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அவரிடம் பாராமுகம் காட்டுகிறார்.

ஒரு கட்டத்தில் தனது அண்ணன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கே கணவனுடன் குடி வருகிறார் பார்வதி. தங்கை குடும்பத்துடன் ஒட்டவும் முடியாமல் மகன் தனது தங்கை வீட்டிற்கு சென்று வருவதை தடுக்கவும் முடியாமல் தவிக்கிறார் மம்முட்டி. இந்த நிலையில் ஆஸ்துமா பிரச்சனை உள்ள மம்முட்டியை செயற்கையான மூச்சுத்திணறல் மூலம் கொள்வதற்கு இரண்டு மூன்று முறை முயற்சி நடக்கிறது. ஒரு கட்டத்தில் தன் மகன் மீதும் அவனுடைய சீனியர் நண்பன் மீதும் சந்தேகப்படுகிறார் மம்முட்டி.

இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊரில் இருக்கும் அம்மா மற்றும் இன்னொரு தங்கை ஆகிய உறவுகளுடன் சென்று வாசிக்கலாம் என முடிவு செய்கிறார். அங்கே கிளம்புவதற்கு முன் தங்கையின் வீட்டிற்கு இந்த விஷயத்தை சொல்வதற்காக செல்கிறார். சென்ற இடத்தில் விதி மம்முட்டியின் வாழ்வில் மட்டுமல்ல தங்கை பார்வதியின் வாழ்க்கையிலும் விளையாடுகிறது. அதன்பின் சொந்த ஊருக்கு செல்லும் மம்முட்டிக்கு அவர் முன்னொரு காலத்தில் கடமையைச் செய்ததற்கான கர்மவினை அதன் பலனை தருவதற்கு காத்திருக்கிறது. இறுதியில் என்ன நடந்தது..?

படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லப்பட்டது போல நிச்சயமாக இதுநாள்வரை மம்முட்டி ஏற்று நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் தான். எதிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என மகனிடம் எதிர்பார்க்கும் தந்தையாக, தங்கை வேற்று ஜாதிக்காரனை காதலித்து வீட்டை விட்டு சென்றது ஒரு பக்கம் இருக்க, அந்த சம்பவத்தால் தனது தாய் படுத்த படுக்கையாக மாறியதை கடைசிவரை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒரு சகோதரனாக நான் பொதுவாழ்வில் பார்ப்பதற்கு ரொம்பவே அரிதான ஒரு கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியுள்ளார் மம்முட்டி.. பேச்சு அதிகம் இன்றி முக பாவனைகளிலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிகச்சிறப்பு. டீசன்டான நாகரிகமாக மனிதர்களுக்குள்ளும் ஜாதி வெறி எப்படி புதைந்து கிடக்கிறது என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம்

மம்முட்டியின் தங்கையாக பார்வதி.. காதலுக்காக தான் செய்த விஷயம் சரியானதுதான் என்பதிலும், அதேசமயம் அண்ணனின் பாசத்திற்காக ஏங்குவதிலும் என சமநிலை நடிப்பை வழங்கியுள்ளார் ரொம்பவே பக்குவப்பட்ட இந்த கதாபாத்திரத்தில் பார்வதி ஆச்சரியம் தருகிறார்.


பார்வதியின் கணவராக நாடக நடிகராக வரும் அப்புன்னி சசி தனது நாடக கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, தனது கதாபாத்திரத்திற்கும் தன் நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். மச்சான் மம்முட்டியுடன் இணைந்து ராசியாக செல்ல முற்படும் அவருக்கு ஏற்படும் முடிவு எதிர்பாராத அதிர்ச்சி.

மம்முட்டியின் மகனாக பள்ளி மாணவனாக நடித்துள்ள வாசுதேவ் சஜீஷ் தந்தையின் டார்ச்சரை தாங்கிக்கொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கும் அந்த டீனேஜ் கதாபாத்திரத்தை உள்வாங்கி படு யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறான். ஒரு கட்டத்தில் மம்முட்டியை போல அந்த பையன் மீது நமக்கே சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மம்முட்டி வரும் காட்சிகளில் எல்லாம் அடுத்து என்ன நடக்குமோ என திகிலூட்டுகிறது. அறிமுக இயக்குனர் ரதீனா வழக்கமான கமர்ஷியல் அல்லது சென்டிமென்ட் பார்முலாவுக்குள் இறங்காமல் மாற்று சினிமாவுக்கான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். மம்முட்டியின் இந்த மனச்சிக்கலுக்கான பின்னணி காரணம் என எதையும் சொல்லாததால் அவரது இயல்பே இதுதானோ என நாமாகவே யூகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. மொத்தப்படத்தையும் மம்முட்டி தனது நடிப்பால் தாங்கிப்பிடித்தாலும் .கூட சராசரி ரசிகனின் பொறுமையை இந்தப்படம் சோதிக்கவே செய்யும்.

புழு : வன்மம்

 

பட குழுவினர்

புழு (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓