நடிகர்கள் : மம்முட்டி, ராய் லட்சுமி, அனன்யா, பூர்ணா, அனு சித்தாரா, லாலு அலெக்ஸ், சன்னி வெய்ன், ஜேக்கப் கிரிகேரி
இயக்கம் : சேது
பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய மலையாள கதாசிரியர் சேது, முதன்முறையாக இயக்கம் செய்திருக்கும் படம் இது. அதனாலேயே அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு குட்டநாடன் பிளாக் படம்.. அந்த எதிர்பார்ப்பை சேது பூர்த்தி செய்துள்ளாரா ..?
வெளிநாட்டில் பிசினஸ் செய்யும் மம்முட்டி அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வார்.. அவர் வருகிறார் என்றாலே அங்குள்ள இளைஞர் பட்டாளத்துக்கு கொண்டாட்டம் தான். குறிப்பாக இளைஞர்களின் காதல் பிரச்னை, இன்னும் சிலருக்கு பணப்பிரச்சனை ஆகியவற்றை தீர்த்து வைக்கிறார். இதனால் பஞ்சாயத்து தலைவர் லாலு அலெக்ஸ் உள்ளிட்ட சிலருக்கு மம்முட்டி மீது பொறாமை கலந்த கோபம்.
மனைவியை இழந்த மம்முட்டி, பல வருடங்கள் கழித்து ஊருக்கு திரும்பும் தனது பள்ளித்தோழியான ராய் லட்சுமியை சந்திக்கிறார். அவரும் விவாகரத்து பெற்றவர் என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை துவங்க நினைக்கிறார். இந்நிலையில், மம்முட்டிக்கு மிகவும் வேண்டிய ஆசிரியர் வீட்டு பெண்ணான அனு சித்தாரா தற்கொலைக்கு முயல்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் மம்முட்டி தான் என கூறும் அனு சித்தாராவின் அம்மா, அதன்பின் மம்முட்டியை சந்தித்து பேசவிடாமல் அனுவை வேறு ஊரில் தங்க வைக்கிறார்.
மம்முட்டியை பழிவாங்க சமயம் பார்த்திருந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சகாக்கள் அவர் அனு சித்தாராவை திருமணம் செய்யவேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர்.. மம்முட்டி மீது புகார் கொடுத்தால் அவரை கைது செய்ய தயாராக காத்திருக்கிறார் போலீஸ் அதிகாரியான பூர்ணா. ஆனால் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ராய் லட்சுமி தன்னை நம்புவதால், அவருடன் பதிவுத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் மம்முட்டி.
திருமண தினத்தன்று ராய் லட்சுமி திடீரென மாயமாகிறார். அந்த அவமானத்துடன், ராய் லட்சுமியால் ஊர் மக்களிடம் புதிய சிக்கல் ஒன்றிலும் மம்முட்டி சிக்குகிறார். ராய் லட்சுமி மாயமானது ஏன், அந்த புதிய சிக்கல் என்ன, அனு சித்தாராவின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்கிற உண்மையை மம்முட்டியால் கண்டுபிடிக்க முடிந்ததா என மீதிக்கதை நீள்கிறது.
குட்டநாடன் பிளாக் என்கிற வலைத்தளம் வழியாக கிருஷ்ணபுரம் என்கிற ஊரில் நிகழும் நிகழ்வுகளை தினசரி பதிவேற்றுவதாகவும் அதன்மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் கூடதங்கள் ஊர் நிலவரத்தை தெரிந்துகொள்வதாகவும் கதையை ஆரம்பிப்பது சுவாரஸ்யம் தான். முதல் பாதி முழுதும் மம்முட்டிக்கான பில்டப், இளைஞர்களுடன் சேர்ந்துகொண்டு ஜாலி, கேலி என மம்முட்டி ஊர் சுற்றுவது, ராய் லட்சுமியுடன் காதலை புதுப்பிப்பது எனபெரிய திருப்பங்களோ சுவாரஸ்யமா இல்லாமல் கதை பயணிக்கிறது.
மம்முட்டிக்கு பெரும்பாலும் காரில் வருவது, பைக்கில் வருவது, ஆங்காங்கே இளைஞர்களுடன் சேர்ந்து டீ குடிப்பது, சரக்கடிப்பது என 30 வயது இளைஞனின் வேலையை மட்டுமே செய்கிறார். அதேசமயம் இளைஞர்களின் காதலை இவர் சேர்த்து வைக்கும் டெக்னிக் பலே பலே.. ஒவ்வொரு முறையும் நம்பிக்கை வைத்தவர்கள் அவரை ஏமாற்றும்போதும் நமக்கே அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. க்ளைமாக்ஸில் நகை பிரச்னையை அவர் தீர்க்கும் விதம் செம டிவிஸ்ட். இடைவேளைக்குப்பின் மம்முட்டியை சுற்றி சிக்கல்கள் அடுத்தடுத்து பின்னப்படுவதால் படம் ஓரளவு வேகம் எடுக்கிறது.
மம்முட்டிக்கு இதுநாள் அவரை சரியான ஜோடி என சொல்லப்படும் லட்சுமிராய் இந்தப்படத்திலும் அதை தக்க வைத்துள்ளார். க்யூட் அனு சித்தாரா வழக்கம்போல. அவரது கேரக்டரில் வைக்கப்பட்டுள்ள டிவிஸ்ட் அரதப்பழசு. பாய்கட் ஹேர்ஸ்டைலுடன் போலீஸ் அதிகாரியாக வரும் பூர்ணாவுக்கு கூலிங் கிளாஸை கழட்டி மாட்டுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அவருக்கு பில்டப் கொடுத்த அளவு கேரக்டரிலே சுவாரஸ்யம் கூட்டாமல் விட்டுவிட்டார்கள்.
வெளிநாட்டில் ஒரு அறையில் உட்கார்ந்தபடி குட்டநாடன் பிளாக் மூலமாக நடக்கும் நிகழ்வுகளை அலசுவதுடன் சன்னி வெய்ன் - அனன்யா ஜோடியின் பணி முடிந்து விடுகிறது. பஞ்சாயத்து தலைவராக லாலு அலெக்ஸ், மம்முட்டியின் தந்தையாக நெடுமுடி வேணு என ஒரு கூட்டமே சுவாரஸ்யமான கிராமத்து மனிதர்களாக மாறியிருக்கின்றனர். துல்கரின் நண்பராக நடித்துவந்த ஜேக்கப் கிரிகேரி அவரது தந்தை மம்முட்டிக்கும் நண்பராக அசத்தியிருப்பது ஆச்சர்யம் தான்.
படத்தின் மிக குறைவான வேகம் தான் மிகப்பெரிய மைனஸ். பொதுவாக மலையாள படங்களில் படம் துவங்கிய ஐந்தாவது நிமிடமே கதைக்குள் சென்று விடுவார்கள்.. ஆனால் இதில் இடைவேளை வரை கதாபாத்திர விவரிப்புகளிலேயே நேரத்தை கடத்திருப்பது அலுப்பையே தருகிறது.
கதாசிரியராக வெற்றிகள் பல கண்ட சேது, ஒரு இயக்குநராக மாறும்போது நிறையவே தடுமாறியிருக்கிறார்.