Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தி கிரேட் பாதர் (மலையாளம்)

தி கிரேட் பாதர் (மலையாளம்),The Great Father
குழந்தைகளுக்கு நேரும் பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து ஹனீப் அதேனி இயக்கியுள்ள படம் இது.
04 ஏப், 2017 - 15:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி கிரேட் பாதர் (மலையாளம்)

நடிகர்கள் : மம்முட்டி, ஆர்யா, சினேகா, மியா ஜார்ஜ், கலாபவன் சாஜன், பேபி அனிகா, மாளவிகா மோகனன், சந்தோஷ் கீழத்தூர்

இசை : கோபி சுந்தர் & சுஷின் ஷியாம்

டைரக்சன் : ஹனீப் அதேனி

தயாரிப்பு : பிருத்விராஜ்-ஆர்யா (ஆகஸ்ட் சினிமாஸ்)

மிகப்பெரிய பில்டர் மம்முட்டி. அவரது மனைவி சினேகா டாக்டர், ஏழாம் வகுப்பு படிக்கும் அன்பான மகள் பேபி அனிகா. அனிகாவுக்கு தனது தந்தை மம்முட்டி எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோ தான். அதை நம்ப மறுக்கும் சக நண்பர்களுக்கு தந்தையின் ஒரிஜினல் துப்பாக்கியையே பள்ளிக்கு எடுத்துச்சென்று காண்பிக்கும் அளவு தந்தையை விட்டுக்கொடுக்காதவள்.

திடீரென ஒருநாள் இந்த சந்தோஷ குடும்பத்தில் புயல் அடிக்கிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள் அனிகா. நகரில் அதுபோல அவ்வப்போது நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரத்தில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டு தூக்கி வீசப்பட, பேபி அனிகா மட்டும் உயிர் தப்பியது ஒன்றே ஆறுதல்.

போலீசாரின் ஸ்பெஷல் ஆபீசரான ஆர்யா இந்த குற்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள அந்த சைக்கோ கிரிமினலுக்கு வலை வீசுகிறார். டாக்டர் மியா ஜார்ஜின் கவுன்சிலிங்கில் அனிகா கொஞ்சம் கொஞ்சமகா தேறி வந்தாலும், முன்பிருந்த கலகலப்பு அவளிடம் மிஸ்சாகிறது. மகளுக்கு நேர்ந்த துன்பம் கண்டு ஆரம்பத்தில் மனம் தளர்ந்த மம்முட்டி, மனைவி சினேகா தரும் ஊக்கத்தில் தானே சொந்தமாக அந்த கிரிமினலை தேடி கிளம்புகிறார்.

தனது மகளுக்கு நடந்த சம்பவத்தை வெளியுலகம் அறியாமல் பாதுகாக்க மம்முட்டி நினைக்க, ஆர்யாவோ குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் விசாரணை என்கிற பெயரில் அதை ஊரறிய வைக்க நினைக்கிறார். மேலும் மம்முட்டியின் இந்த தேடுதல் வேட்டை, போலீசான ஆர்யாவின் ஈகோவை காயப்படுத்த, இருவருக்கும் உரசல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் சைக்கோ கொலைகாரன் மம்முட்டியையும், ஆர்யாவையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு முடிந்தால் என்னை பிடித்துப்பார் என சவால் விடுகிறான். அவனுக்கு உதவியாக ஒரு பத்திரிக்கை நிருபர் பகடைக்காயாக செயல்படுவது மம்முட்டிக்கு தெரிய வருகிறது, கூடவே சைக்கோ கொலைகாரனை பற்றிய க்ளூவும் அவருக்கு கிடைக்கிறது.

இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியவர, தனது போலீஸ் பவரால் மம்முட்டியை தடுத்து நிறுத்தி தானே முதல் ஆளாக அவனை தேடி செல்கிறார். இதற்கு பதிலடியாக மம்முட்டி என்ன செய்தார்..? அந்த சைக்கோ கொலைகாரனை இவர்களால் நெருங்க முடிந்ததா..? நெருங்கியது யார்..? அவனுக்கு கொடுத்த தண்டனை என்ன என்பதெல்லாம் பரபரப்பான இறுதி நிமிடங்கள்.

இன்று சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வு பற்றிய படம் என்பதால் படம் துவங்கிய இருபது நிமிடத்திலேயே நம்மால் அந்தப்படத்துடனும் கதை மாந்தர்களுடனும் இயல்பாக பயணிக்க முடிகிறது..

மிகப்பெரிய பில்டர் டேவிட் நைனான் கேரக்டரில் நடித்துள்ள மம்முட்டிக்கு கெட்டப்பிலும் சரி.. கேரக்டரிலும் சரி புதிய பரிமாணம்.. புதிய பாடி லாங்குவேஜ் என நடிப்பில் மிடுக்கு காட்டுகிறார். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தந்தையாக சாதாரண மனிதனாக மனதுக்குள் குமுறுவதும், பின் இதற்கு காரணமான அந்த கயவனை தேடி கிளம்பியன் ஆக்சன் அவதாரத்தை அணிந்து கொள்வதும் அதை அதிகம் பில்டப் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளதும் சிறப்பான ஒன்று..

பாசமான குடும்பத்தலைவியாக, மகளுக்கு நேர்ந்த அவலம் கண்டு அதை ஜீரணிக்க சிரமப்படும் தாயாக, 'அவனை கொல்லுங்கள்' என கணவனை உசுப்பி விடும் மனைவியாக சினேகாவின் கேரக்டர் சீராக செதுக்கப்பட்டு இருக்கிறது.

இன்னொரு கதாநாயகன் என்று சொல்லும் விதமாக யூனிபார்ம் போடாத அதிரடி போலீஸ் அதிகாரியாக ஆர்யாவுக்கு அருமையான கம் பேக் என்று இந்தப்படத்தை சொல்லலாம். தமிழில் அவரை பார்ப்பதற்கும் மலையாளத்தில் அவரது நடிப்புக்கும் நிறையவே வித்தியாசம். மம்முட்டியுடன் ஈகோ யுத்தத்தில் ஈடுபடும்போதும் விசாரணை என்கிற பெயரில் அலட்சியமும் சற்றே குரூரமும் காட்டும்போது மட்டும் நமக்கு கோபத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைத்திருகிறது அவரது நடிப்புக்கு. அவருடன் எந்நேரமும் கூடவே இன்னொரு உதவி போலீஸ் அதிகாரியான மாளவிகா மோகனன் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கிறார்.

டாக்டராக இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நிறைவான நடிப்பு மியாவுடையது. பேபி அனிகா இந்தப்படத்தில் இன்னும் மெச்சூர்ட் ஆகியிருக்கிறார். தனது தந்தையை 'தி கிரேட் பாதர்' ஆக சித்தரித்து நண்பர்களிடம் இவர் கதை சொல்வது கொள்ளை அழகு.. தனக்கு நடந்த துயரத்தின் கோரத்தையும், அதன்பின் அதிலிருந்து தந்தையின் உதவியுடன் மீண்டு வருவதையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் அனிகா. தெனாவெட்டு பத்திரிக்கை நிருபராக கலாபவன் சாஜன் பண்ணும் அலம்பல்கள் சுவாரஸ்யம்..

கோபி சுந்தரின் இசையில் பாடல்களும் சரி, சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் சரி.. மொத்தப்படத்தையும் த்ரில்லிங்காகவே நகர்த்துகின்றன. குற்றவாளி யார் என்பதை கடைசிவரை நம்மால் யூகிக்க முடியாதபடி கொண்டு சென்றிருப்பதுடன், இதுபோன்ற சைக்கோ குற்றவாளிகள் நல்லவர்கள் போர்வையில் நம்முடனே தான் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலையும் கூறி எச்சரிக்கை மணி அடித்துள்ளார் ஹனீப் அதேனி. அதேசமயம் கடந்த வருடத்தில் வெளியான பிருத்விராஜ் நடித்த ஒரு படத்தின் மைய கருத்தும் இதே தான் என்பதும் கொசுறு தகவல்.

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் அதற்கு ஆயிரம் காரணம் வைத்திருக்கலாம்.. ஆனாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ள இயக்குனர் ஹனீப் அதேனியின் சமூக அக்கறையையும் அதை படமாக அவர் பதிவு செய்த நேர்த்தியையும் பாராட்டியே ஆக வேண்டும்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in