
தி டோர்
விமர்சனம்
தயாரிப்பு : ஜுன் டிரீம்ஸ் ஸ்டிடுயோஸ்
இயக்கம் : ஜெய்தேவ்
நடிகர்கள் : பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயப்பிரகாஷ், சிவரஞ்சனி, நந்தகுமார், ஜானி,கிரிஷ், பாண்டிரவி, சங்கீதா,ரமேஷ் ஆறுமுகம்
இசை : வருண் உன்னி
வெளியான தேதி : 28.03.2025
நேரம் : 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5
கதைக்களம்
கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக அங்கிருந்த பழமையான கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. தன்னை பின் தொடரும் அமானுஷ்யம் குறித்து தனது நண்பர்களின் உதவியுடன் பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து விடுகின்றனர். அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன தொடர்பு? அவரை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை குறைத்துவிட்டு, கிரைம் நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் ஜெய்தேவ்.
பாவனா தேடும் ராம் யார் என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மர்ம மரணங்கள், அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற பதைபதைப்பும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துள்ளது. திகில் மற்றும் கிரைம் திரில்லர் இரண்டையும் ஒரே படத்தில் கொடுத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்தேவ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும் பாவனாவின் பயணத்தில் திகில் குறைவாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வழக்கமான வேலை தான். இவர்களோடு ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, பைரி வினு ஆகியோர் தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். கவுதம்.ஜி ஒளிப்பதிவில் கொடைக்கானல் ரம்மியமாக தெரிகிறது, பாவனாவை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்தாலும், பல இடங்களில் அதிகப்படியான சத்தத்தினால் காது கிழிகிறது.
பிளஸ் & மைனஸ்
நீண்ட நாட்களுக்கு பிறகு பாவனாவை திரையில் ரசிக்கும்படியாக காட்டி இருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கி, அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள். படம் முழுவதுமே பளிச்சென்று இருப்பது படத்தின் தரத்தை வெளிக்காட்டினாலும், திகில் காட்சிகளில் எந்தவித பயத்தையும் ரசிகர்களிடத்தில் கடத்தாதது குறையாக இருக்கிறது. படத்தின் தலைப்பு தி டோர் என வைத்திருந்தாலும் கதையில் தலைப்புக்கான விளக்கம் எதுவும் சொல்லப்படவில்லை.
தி டோர்- திறந்திடு சிசே