நடிகர்கள் : ஆசிப் அலி, பாவனா, லால், சீனிவாசன், லேனா மற்றும் பலர்
டைரக்சன் : ஜூனியர் லால்
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'ஹனி பீ' படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளைத்தான் இரண்டாம் பாகமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஜூனியர் லால் (வில்லன் நடிகர் லாலின் மகன்).
முரட்டு அண்ணன் தம்பிகளான லால் மற்றும் சகோதர்களின் செல்ல தங்கச்சி தான் பாவனா. முரடர்கள் தான் என்றாலும் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் முன்னர் பாவனாவுக்கு ஏதாவது காதல் விவகாரம் இருக்கிறதா என கேட்டு இல்லை என தெரிந்தபின் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யும் அளவுக்கு டீசண்டானவர்கள் தான். ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் தனது நண்பரான ஆசிப் அலியுடன் தான் காதலில் விழுந்ததை உணர்கிறார் பாவனா. அதனால் திருமணத்திற்கு முந்தைய இரவு ஆசிப் அலி மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் ஊரைவிட்டு ஓடுகிறார். இதனால் அவமானத்துக்கு ஆளான லால் சகோதரர்கள் ஆசிப் அலியை கொல்வதற்காக தேடுகிறார்கள். சில பல சச்சரவுகளுக்குப்பின் இருவரின் உண்மையான காதலை உணர்ந்து அவர்கள் காதலை ஏற்றுக்கொள்கிறார்கள். இதுதான் முதல் பாகத்தின் கதை.
இந்த இரண்டாம் பாகத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்கிறார் லால். அதுநாள்வரை தன்னை அநாதை என நினைத்துக்கொண்டிருந்தவர்களிடம், ஆசிப் அலி, தனது தந்தை சீனிவாசன் மிகப்பெரிய லாயர் என்றும், அவரது கட்டுப்பாடுகள் தாங்காமல் தான் வீட்டைவிட்டு ஓடிவந்ததாகவும் கூறுகிறார். இந்தநிலையில் ஒரு பெண்ணை காதலித்துள்ளதாக செய்தி அறிந்தால் அவர்கள் இன்னும் வேதனைப்படுவார்கள் என அஞ்சுகிறார் ஆசிப் அலி.
அதனால் இதற்கு மாற்று ஏற்பாடாக, தாங்களே ஆசிப் அலியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்ததாகவும், அதன்பின் தங்கள் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் பிளேட்டை மாற்றிவிடுகிறோம் என கூறி ஆசிப் அலியை சமாதானப்படுத்துகிறார் லால். அதன்படி பெங்களூரில் உள்ள சீனிவாசனின் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்க செல்லும் லால், சீனிவாசனும் அவரது மனைவி லேகாவும் தன்னுடைய கல்லூரி தோழர்கள் என்பதை அறிகிறார். சீனிவாசன் படிக்கும் காலங்களில் அவருக்கு பணம் தந்து உதவியதோடு, அவர்கள் இருவரின் காதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவரும் அவரே தான்.
ஆக வந்தவேளை ரொம்பவே எளிதாக சந்தோஷத்துடன் முடிகிறது. ஆனால் ஆசிப் அலியும் பாவனாவும் ஏற்கனவே காதலர்கள் என்கிற விஷயத்தை மட்டும் சீனிவாசன்-லேனா தம்பதியிடம் மறைத்து விடுகிறார்கள்.. திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடக்க, இவர்கள் எதிர்பாராத திசையில் இருந்து, குறிப்பாக மணமகன் ஆசிப் அலியிடம் இருந்தே இந்த திருமணத்திற்கு எதிரான பிரச்சனை ஆரம்பிக்கிறது.. திருமண தினத்தன்று அது ரொம்பவே முற்றி திருமணமே நின்றுபோகும் அளவுக்கு செல்கிறது...
ஆசிப் அலியின் இந்த திடீர் மாற்றத்துக்கும் நடவடிக்கைக்கும் காரணம் என்ன, இந்த இரண்டாம் பாகத்தில் திருமணம் நடந்ததா..? இல்லை, சிங்கம் சூர்யா-அனுஷ்கா போல மூன்றாம் பாகத்திற்கு திருமணத்தை தள்ளிப்போட்டு விட்டார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
ஹனி பீ-2 ; செலிபிரேஷன்ஸ் என டைட்டில் வைத்துவிட்டு படத்தில் கொண்டாட்டத்திற்கும் கலாட்டவுக்கும் பஞ்சம் வைக்க முடியுமா என்ன..? படம் முழுக்க ஒரே ஆட்டம் பாட்டம் அமர்க்களம் தான்.. படத்தில் 'சரக்கு' அடிக்காத காட்சிகள் எத்தனை என விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஆறாக ஓடுகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் நாயகி பாவனாவுக்கு மிகப்பெரிய அளவில் வேலை இல்லை என்பதே உண்மை.
நாயகன் ஆசிப் அலியை யதார்த்தமான கோபத்துக்கு சொந்தக்காரராக பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப்படத்தில் அவரது கோபமும் சீற்றமும் நியாயமற்றது என்பதை இடைவேளைக்குப்பின் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நமக்கு உணர்த்துகிறார். அதனால் 'இவனுக்கெல்லாம் எதுக்குய்யா லவ்வு கல்யாணம்..?” என அவரது கேரக்டர் மீது நமக்கே கோபம் வரும் அளவுக்கு பண்ணிவிடுகிறார் ஆசிப் அலி. அதற்குப்பின் அவர் சொல்லும் சால்ஜாப்புகள் நம்மிடம் பெரிதாக எடுபடாமல் போகிறது..
இந்த இரண்டாம் பாகத்தில் புதிய வரவாக சீனிவாசன் மற்றும் லேனா இருவரும் மிக ஆதர்சமான கணவன் மனைவியாக, நல்ல பொறுப்பான பெற்றோராக நிறைவாக செய்திருக்கிறார்கள். லால் பற்றி சொல்லவே வேண்டாம்.. பணியும் இடத்தில் பணிந்து, சீறும் இடத்தில் சீறி, ஒரு சராசரி குடும்பத்தலைவனின் ஆசாபாசங்களை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
ஆசிப் அலியின் நண்பர்களாக இந்த பாகத்திலும் பாபுராஜ், பாலு வர்கீஸ், ஸ்ரீநாத் பாஷி ஆகியோர் இருந்தாலும் முதல் பாகத்தில் இவர்கள் செய்த காமெடி இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங் ஆகி வெறும் வறட்டு கூச்சலாகவே போய்விடுகிறது.
இடைவேளை வரை கதையை சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்ற இயக்குனர் ஜூனியர் லாலுக்கு அதன்பின் திரைக்கதையை நகர்த்துவதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. குறிப்பாக ஆசிப் அலியிடம் திருமணம் குறித்த தடுமாற்றமும் தேவையில்லாத எரிச்சலும் ஏன் என்பது புரியாமல் விழிக்கும் பாவனா, சீனிவாசன்-லேனாவிடம் மட்டுமல்ல நம்மிடமுமே உண்மையை சொல்லாமல் ஜவ்வாக இழுப்பதும் கடைசியில் பெற்றோரை கூல் பண்ணுவதற்காக பாவனாவின் மீது அவ்வளோ பெரிய காதலெல்லாம் இல்லை என்று ஒதுக்கி பாவனாவின் காதலை கொச்சைப்படுத்தி இருப்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
ஏனென்றால் முதல் பாகத்தில் காதல் என தேடிவரும் பாவனாவை ஒதுக்குவதும், பின் பாவனாவின் திருமணத்தன்று அவரை காதலிப்பதாக சொல்லி இழுத்துக்கொண்டு ஓடுவதும் என ஆசிப் அலி செய்த முட்டாள் தனமான செயல்களுக்கு நாமும் சாட்சியாக இருந்தவர்கள் என்கிற காரணத்தால் தான்.. இந்த இடங்களை இயக்குனர் சரிவர கையாண்டு இருந்தால் முதல் பாகத்தைப்போல இதுவும் ஒரு வெற்றி கொண்டாட்டமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை.