விமர்சனம்
தன் தாயை கொன்ற கொலைகார அப்பா காட்டும் பாசத்தை ஏற்க மறுக்கும் மகன், கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையை ஒதுக்கி வைக்கும் பெண்மணியின் வாரிசு, பெற்றோர் யார்? என்பதே தெரியாமல் பிறந்த 3 மணி நேரத்தில் காப்பகத்தில் வீசப்பட்டு வளர்ந்து ஆளாகும் மாணவி... இப்படி பல்வேறு குழந்தைகள் படிக்கும் கிறிஸ்துவ பள்ளியின் தாளாளராகவும், அதே பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தின் மனநல மருத்துவராகவும் இரட்டை பொறுப்புகளில் வந்து நடிப்பில் பாராட்டை பெறுகிறார் நதியா. அடிக்காமல் குறும்புக்கார மாணவர்களை அணுகவும், அடக்கவும் வேண்டும் என்ற அவரது பாலிஸியை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடித்தால் நல்லது. நதியாவின் நடிப்பில் இன்னமும் நல்ல இளமை துடிப்பு இருக்கிறது.
எட்டும் எட்டு விதம் என்பதற்கேற்ப மாணவர்களாக வரும் புதுமுகங்கள் 8 பேரும் எட்டு விதமாக நடித்து நம்மை கவர்ந்திழுக்கின்றனர். இவர்கள் 8 பேரையும் விட குட்டி நாயகியாகவும், படத்தின் சுட்டி நாயகியாகவும் வரும் மாணவி கிருபா, கள்ளமில்லா சிரிப்பும், காதல் பார்வையுமாக பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகி விடுகிறார். இவர் சில இடங்களில் நடிப்பில் நதியாவையும் ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால் பாருங்களேன்!
மாணவர்களை அடித்து , துன்புறுத்தி, அதன் மூலம் டிஸ்மிஸ் ஆகி, பின் நதியாவையும் தன் பேச்சால் துன்புறுத்தும் பாலகிருஷ்ணன் வாத்தியார், நம் பள்ளி பருவத்து சில வாத்தியார்களை ஞாபகப்படுத்துகிறார்.
ஆரம்ப காட்சிகளில் அலுப்பு தட்டினாலும், போக போக நம்மையும் பள்ளிப்பருவ காலத்திற்கு அழைத்து செல்வதின் மூலம் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா வெற்றி பெற்றிருக்கிறார். ஜாஸி ஷிப்டின் இசையும், இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் பட்டாளம் படத்திற்கு பலம். பாடலாசிரியர் நெல்லை பாரதியின் இஸ்கபராரா.. தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்பும் நம் காதை விட்டு அகல மறுக்கிறது. சபாஷ்!
பட்டாளம் - தேவலாம்!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!