விமர்சனம்
----------------------------------------------------------------------
கல்கி சினி விமர்னம்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், பேயாக மாறிப் பழிவாங்கும் கதைகளுக்க நடுவில் இது கொஞ்சம் வித்தியாசமான படம். தம்மைக் கெடுத்த கயவனை உடனடியாகக் கொன்றுவிட்டதோடு, பெண்களுக்கு இன்னல் விளைவிக்கும் யாராக இருந்தாலும் தம் மாளிகைக்கு வரவழைத்துப் பட்டாக்கத்தியால் சதக் செய்யும் பரோபகாரப் பேய்தான் நாயகி.
இதற்கு உறுதுணையாக ஆட்களைப் பிடித்து அனுப்புவது பேயின் தந்தை. (இவரும் ஒரு பேய்தான்) ஆனால் டேப்லட்டில் கேண்டி கிரஷ் விளையாடும் நவீனப் பேய்.
அனுஷ்கா, நயன்தாரா மட்டும்தான் பேயாகித் திகில் கிளப்புவார்களா? நானும் சிறந்த பேயாகிப் பேர்வாங்குவேன் என்று சாதிக்கும் வெறியோடு த்ரிஷா களமாடியிருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான படம் என்கிறார்கள். ஆனால் ஜெயப்ரகாஷின் தார்ப்பாய்ச்சு வேட்டியும், பிரம்மானந்தத்தின் நமத்துப்போன காமெடியும், கதாநாயக வில்லனின் மிகை நடிப்பும் தெலுங்கு டப்பிங் என்ற உணர்வையே தருகின்றன.
படத்தில் த்ரிஷா அழகோவியமாகத் திகழ்கிறார். ஃப்ரஷ் என்றால் அப்படியொரு ஃப்ரஷ்!
பேயைக் கிண்டலடிக்கும் சத்யம் ராஜேஷ். அதன் உக்கிரம் தாளாமல் அக்கா என அழைத்து தாஜா செய்ய முயல்வது சிரிப்பலைகளை உருவாக்குகிறது.
எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான் என்பன போன்ற பேசித் தேய்ந்த வசனங்கள் அநேகம்!
அகால மரணம் அடைந்த நாயகி, பேயாகிப் பன்னுகிறார். சரிதான் அவரால் கொல்லப்பட்ட பலரும் பேய்களாக மாறுகின்றனர். அதுவும் ஓ.கே! நியாயப்படி த்ரிஷாவுக்கு எதிராகப் போர்க்கொடி அல்லவா உயர்த்தியிருக்க வேண்டும் அந்தப் பேய்க் கூட்டம்? அதுதான் இல்லை! நாயகிப் பேய்க்கு அடிமையாகி, துஷ்டர்களை கும்மாங்குத்துக் குத்துகின்றன.
சாதா கண்களுக்குத் தெரியாத பேய், கேமரா மூலம் பார்த்தால்தான் தெரியும். அதற்கான காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள். நடிக்கும் ஆசையில் செத்துப்போன பேய் அது; அதனால்தான் அப்படியாம். பேயின் நிறைவேறாத ஆசையை, அதை நடிக்க வைத்துத் தீர்த்து வைக்கிறார் கதாநாயக வில்லன்! அடேயப்பா!
நம்ம ஊர்ப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. லேசாகச் சிரிப்பும் வருகிறது. மாளிகைக் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன.
பேய்ப் படத்தில் அதிர்ச்சியும் கிலியும் இலலாத குறை, சடாரென்று குரலெடுத்த ஜெயப்ரகாஷ் பாடும்போதும், த்ரிஷா ஆடும்போதும் நீங்குகிறத.
மொத்தத்தில் பேய்ப் படத்துக்குண்டான தில்லும் இல்லை! திகிலும் இல்லை.
திரையரங்கில் ரசிகர் வேளச்சேரி சீனிவாசன் கருத்து: பேயைப் பார்த்தால் பயத்துக்குப் பதில் பாவமாக இருக்கிறது. வித்தியாசமான பேய்ப்படம். சுமார் ரகம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!