விமர்சனம்
ஜிப்பா, பைஜாமா, தாடி, கூந்தல் என மிதுன் வயலினிஸ்ட்டாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் அபர்ணா தன் முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் அழகான அம்சமாக தெரிகிறார். அறிமுக இயக்குனர் லேணா மூவேந்தர், தான் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் அபர்ணா மூலம் பேச வைத்திருப்பதை தவிர்த்திருந்தால் அபர்ணா... சூப்பர்ணா என பாராட்டுப் பத்திரம் பெற்றிருப்பார். மற்றொரு நாயகி அனு புதுமுகம் என்றாலும் சில காட்சிகளில் அபர்ணாவை எல்லாம் ஓரங்கட்டி விடுகிறார். ஓவர் டேக் செய்கிறார். அனு உடம்பை குறைத்தால் ஒரு வல்லிய ரவுண்டு வரலாம் தமிழ் சினிமாவில்! செய்வாரா?
மிதுன், அபர்ணா, அனு மாதிரியே யுகேந்திரன், சரத்பாபு, சண்முகராஜன், மிதுன் - அபர்ணா ஜோடியின் குழந்தை, பள்ளிப்பருவ யுகேந்திரன் - மிதுனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்கள் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு!
சிங்கமுத்து, முத்துக்காளை, கிரேன் மனோகரின் பஸ் பயண திமிங்கல காமெடி மெதுவாக செல்லும் படத்தையும், பஸ் பிரயாணத்தையும் விறுவிறுப்பாக்குவதுடன் சிரிப்பையும் வரவழைப்பது சிறப்பு!
சில பல காட்சிகளில் அபர்ணா நிறுத்தாமல் தொண தொணப்பதும், அதற்கு பதிலே பேசாமல் மிதுன் மவுன சாமியாராக வயலினும், கையுமாக திரிவதும், பெண்டாட்டி, பிள்ளையை விட்டு விட்டு மிதுன் பெட்டி, படுக்கையுடன் கிளம்புவதும் புரியாத புதிராக தொக்கி நிற்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். இப்படி ஒருசில பலவீனங்கள் இருந்தாலும், படம் பார்ப்பவர்களின் பள்ளிப்பருவ நினைவுகளைத் தூண்டும் நாயகரின் சிறுவயது காட்சிகள், அதற்கு பக்கபலமாக இசை மீட்டும் இசைஞானி இளையராஜா, ப்ளாஷ்பேக் காதல், அந்த காதலை மறுத்து ஓடியதற்கு மிதுன் சொல்லும் க்ளைமாக்ஸ் உருக்கமான காரணம் உள்ளிட்ட எண்ணற்ற பலங்கள் படத்தை காப்பாற்றுகிறது.
படம் முடிந்து வெளியே வந்து வெகு நேரமாகிய பின்பும், இளையராஜாவின் இசை காதுக்குள்ளேயும், நாக சரவணனில் குமரி கடல் பகுதி ஒளிப்பதிவு, கண்ணுக்குள்ளேயும், லேனா மூவேந்தரின் காட்சி அமைப்பும், கதை சொன்ன விதமும் மனசுக்குள்ளேயும் நீங்கா இடம் பிடித்து ரீங்காரமிடுகின்றன!
கண்ணுக்குள்ளே: நெஞ்சுக்குள்ளே...!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!