"வாட்ஸ் - அப்", "பேஸ்புக்" உள்ளிட்ட சமூக வலைதளங்களில்... அதிக லைக்குக்கும், அதிக ஷேருக்கும் ஆசைப்பட்டு, அடுத்தவர் குடும்பத்தை சின்னாபின்னமாக்கும் சில சுயநல கயவர்களுக்கு பாடம் புகட்டும் நோக்கில், சங்கர் & சுரேஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில், கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், சுகன்யா, ஈரோடு மகேஷ், ஜி.கெளஷிகா, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ்... ஆகியோர் நடிக்க, அனுகிரஹதா ஆர்ட் பிலிம்ஸ் வழங்கிட, உமாமகேஸ்வரி - ஆர்.சங்கரின் தயாரிப்பில் ஒரு மாதிரி போதனையாகவும் "சோதனை "முயற்சியாகவும்... வந்திருக்கும் படம் தான் "இணையதளம்".
தன் பைலட் புருஷன் ஓட்டிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அவரும் சக பயணிகளும் சாகக் காரணம், அவர் குடித்துவிட்டு விமானம் ஓட்டியது தான்... எனும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவலை "வாட்ஸ் - அப்", "பேஸ்புக்" உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அதிக லைக்குக்கும், அதிக ஷேருக்கும் ஆசைப்பட்ட சில சுய நலவாதிகளால், தன் மகனையும் இழந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, அந்த இணைய கயவர்களுக்கு., அந்த இணையத்தின் வாயிலாகவே தரும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கொடூர கொலை தண்டனைகள் தான் "இணையதளம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், கொஞ்சமே கொஞ்சம் ரசிகனைப் படுத்தல்... எல்லாம்.
இதில், சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தன் குடும்பம் கொடூரமாக சிதைய காரணமாக இருந்தவர்களுக்கு வித, வித கொலை தண்டனை தரும் அந்த நடுத்தர வயது பெண்மணிக்கு இறுதியில் என்ன நடக்கிறது? என்பதும், சட்டத்தைக்காக்க வேண்டியவர்களால் எது மாதிரி தண்டனை கிடைக்கிறது..? என்பதும் தான் "இணையதளம்" படத்தின் திடுக்கிடும் திருப்பங்கள்.
கதையின் நாயகராக கணேஷ் வெங்கட்ராம், கம்பீர போலீஸ் அதிகாரியாக ரொம்பவே மிடுக்கு காட்டியிருக்கிறார் என்பது படத்திற்கு பலமா? பலவீனமா..? என்பது அவருக்கே வெளிச்சம்.
கதாநாயகி ஹெலனாக மலையாள பிரபலம் ஸ்வேதா மேனன், சைபர் க்ரைம் பெண் போலீஸாக க்ளாமரைக் குறைத்து நடிப்பில் ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.
ஹை., நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை சுகன்யா, கணவனையும், ஒற்றை மகனையும் அடுத்தடுத்து இழந்த விட்டு, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் பெண்மணியாக, சமூக வலைதள சுயநலக்காரர்களுக்கு விதவிதமாக தண்டனைத் தரும் பெண்மணியாக, அசத்தியிருக்கிறார் அசத்தி. அதிலும், க்ளைமாக்ஸ் அந்த பரபர கார் ரேஸிங், சேஸிங் காட்சியில் சுகன்யா தூள்யா!.
இணைநாயகராக வரும் எக்கச்சக்கமாக ஈரோடு மகேஷ், நடித்திருக்கிறார். ஸ்வேதா தொடங்கி அவரது தங்கை உள்ளிட்ட எல்லோருக்கும் ரூட்டு கொடுக்கிறார். இறுதியில் பரிதாபமான முடிவை தேடிக் கொள்வது அய்யோ பாவம் என பதற வைக்கிறது. அதற்காக, இரண்டாம் நாயகிக்கு கை கொடுக்காத வீணையை ஈரோடு மகேஷ் லாவகமாக வாசிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். மகேஷின் ஜோடியாக வரும் புதுமுக நாயகி கெளஷிகாவும், வாய் திக்கிதிக்கி பேசியபடி ஈரோடு மகேஷோடு சேர்த்து ரசிகனின் மனமும் கவருகிறார்.
போலீஸ் கமிஷ்னராக ஒய்.ஜி.மகேந்திரன், சபல புத்தியால் சாகும் டெல்லி கணேஷ்... உள்ளிட்ட சீனியர் நட்சத்திர பட்டாளமும் தங்கள் பங்கை எப்போதும் போல் சிறப்பாக நடித்திருக்கிறது.
ராஜேஷின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பு. ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவில் பெரிய குறையுமில்லை... சொல்லிக் கொள்ளும்படியான நிறையுமில்லை.
அரோல் கரோலியின் இசையில், "திரிசங்கு சொர்க்கம் இதுவா...?", "வீணையடி நீ எனக்கு.....", "நீளம் பூத்த கண்ணில்..." உள்ளிட்ட பாடல்கள் பெரிதாக லயிப்பு ஏற்படுத்தவில்லை... என்றாலும், பின்னணி இசைகதைக்கேற்ற மிரட்டல் என்பது சற்றே ஆறுதல்.
சங்கர் & சுரேஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில், "இவனுங்களுக்கு வாட்ஸ்அப்ல பேர் கிடைக்கணும் பேஸ்புக்ல ஷேர் கிடைக்கணும்னு அடுத்தவர் நலன் பற்றி கவலைப்படாது அடுத்தவர் நல்லது, கெட்டதை நக்கலடித்து நையாண்டி செய்து பகிர்ந்து பதிவு செய்றவங்களுக்கு இதுதான் தண்டனை...", "மவுஸ் எடுத்தவனுக்கு மவுஸால தான் சாவு...", "சைபர் க்ரைம்னு வந்தேன் வேலை என்னவோ சைபர் தான்..." என்பது உள்ளிட்ட புது மாதிரி வசனங்களும், ஈரோடு மகேஷ் பாத்திரத்தின் மூலம் நிகழும், டாக்கிங் ஐஸ் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உள்ளிட்ட புதுமைகளும், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய வலைதள கொலைகளும், நிச்சயம் ரசிகர்களை கவரும்.
அதேநேரம், க்ளைமாக்ஸுக்கு முன் வரும் சீனில், ஈரோடு மகேஷ் அடைக்கப்பட்டிருக்கும், அந்த வீட்டைக் கண்டுபிடித்து, கதாநாயகர் கணேஷ் வெங்கட்ராம், வீட்டிற்குள் பாய்ந்து சென்று ஆக்ஷனில் குதித்து மகேஷை காப்பாற்ற முயற்சிக்காது, வீட்டின் முன் நின்று கொண்டு நாயகர் கணேஷ் வெங்கட்ராம், தனது போலீஸ் டீமைப் பார்த்து, "ஒகே டீம், நாம ஸ்பாட்டுக்கு வந்துட்டோம்..." என்பது உள்ளிட்ட நாடகத்தன்மை நிரம்பிய காட்சிகளையும், அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் கண்ணாடி அறை மாதிரியான செட்டிங்கில் தண்ணீரில் மூழ்கும் ஈரோடு மகேஷை காப்பாற்ற அந்த கண்ணாடி அறையை சுட்டு நீரை வெளியேற்ற முயற்சிக்காது, கணேஷ் வெங்கட் தாமதிக்கும் லாஜிக்கு குறைகளும் பெரும் பலவீனம்!
ஆக மொத்தத்தில், "ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், இணையதளம் படத்தில் ஏதோ ஒன்று குறையுது. அதனால், இணைய தளம் ரசிகனின் நெஞ்சோடு இணைய மறுக்கிறது. பாவம்!"