ஜோரா கைய தட்டுங்க
விமர்சனம்
தயாரிப்பு : வாமா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : வினீஷ் மில்லினியம்
நடிகர்கள் : யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், அருவி பாலா, ஜாகிர் அலி
வெளியான தேதி : 16.05.2025
நேரம் : 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2/5
கதைக்களம்
தனது அப்பாவிடம் இருந்து அரைகுறையாக மேஜிக் கற்றுக் கொண்ட யோகி பாபு, ஊர் ஊராக சென்று மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். அப்படி ஒரு மேஜிக் ஷோ நடத்தும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீஸிடமிருந்து தர்ம அடி வாங்குகிறார்.
வீட்டிற்கு அருகே இருக்கும் அருவி பாலா உள்ளிட்ட இளைஞர்கள் எப்பொழுதும் யோகி பாபுவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய மேஜிக் ஷோவை ரசிக்கும் சாந்தி ராவ், யோகி பாபுவிடம் அன்பாக நடந்து கொள்கிறார். பின்பு அது காதலாக மாறுகிறது. அதற்குள் யோகி பாபுவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வருகிறது. அந்தப் பிரச்சினைகளில் இருந்து யோகி பாபு எப்படி மீண்டார்? அவருடைய மேஜிக் அவருக்கு கை கொடுத்ததா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
யோகி பாபுவை கதையின் நாயகனாக நடிக்க வைத்து, வித்தியாசமான கேரக்டர் கொடுத்து, ரசிகர்களை ஜோராக கை தட்ட வைப்பார் என நம்பி படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் மலையாள இயக்குனரான வினீஷ் மில்லினியம். படத்தில் பெரிதாக கதை இல்லாவிட்டாலும் திரைக்கதையாவது ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் துண்டு துண்டாக நிற்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு குறைவான இந்த படம் எப்போது முடியும் என்கிற சலிப்பை ரசிகர்களுக்கு தந்து விடுகிறார் இயக்குனர். மொத்தத்தில் இது நகைச்சுவை படமாகவும் இல்லை,மேஜிக் படமாகவும் இல்லை, ஹாரர் படமாகவும் இல்லாமல் தொங்கி நிற்கிறது.
மண்டேலா போன்ற சிறந்த படங்களில் கதை நாயகனாக நடித்த யோகி பாபு இந்த படத்தில் ஏன் நடித்தார் என்று கேட்கும் அளவிற்கு அவருடைய கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற படங்களை தவிர்ப்பது யோகி பாபுவின் சினிமா கேரியருக்கு நல்லது. வெறும் பத்து பதினைந்து நாட்கள் கால்ஷீட் வாங்கிக் கொண்டு படம் முழுவதும் யோகி பாபு ஹீரோ என ஒரு மாய பிம்பத்தை இயக்குனர் இதில் திணித்திருக்கிறார்.
கதாநாயகி சாந்தி ராவ் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. படத்தில் யாருடைய கேரக்டரும் மனதில் நிற்கவில்லை.
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மது அம்பட் ஒளிப்பதிவு உருப்படியாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசையும் சுமார் ரகம்.
பிளஸ் & மைனஸ்
படத்திற்கு பெரிய பலம் என்றால் யோகி பாபு மற்றும் அவருடைய பெர்பார்மன்ஸ், அதோடு கேரள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இடங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. இவ்வளவு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு ஒரு இரண்டு மணிநேரம் அழகான நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கலாம். அல்லது மேஜிக் நிபுணராக யோகி பாபுவை திரையில் முழுவதுமாக காட்டி மாயாஜாலம் செய்திருக்கலாம். அப்படி எதையுமே இயக்குனர் திரைக்கதையில் செய்யாமல் ஹாரர் திரில்லர் மோகத்தில் சிக்கி படத்தை சிதைத்து இருக்கிறார். யோகி பாபுவை தவிர, ஹீரோயின் உட்பட மற்ற நடிகர்கள் தேர்வு மிகப்பெரிய பலவீனம்.
ஜோரா கைய தட்டுங்க - முடியலங்க