ஸ்கூல்,School
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : குவாண்டம் பிலிம் பேக்டரி
இயக்கம் : ஆர்.கே.வித்யாதரன்
நடிகர்கள் : யோகி பாபு, பூமிகா, கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் சாம்ஸ், நிழல்கள் ரவி, ஆர் கே வித்யாதரன்
வெளியான தேதி :23.05.2025
நேரம் : 2 மணி நேரம், 10 நிமிடம்
ரேட்டிங் : 2.25/5

கதைக்களம்
2-ம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப் படுத்துவதற்காக 'மைண்ட் செட் ஆப் சக்சஸ்' என்ற புத்தகம் எழுதுகிறார். இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளவதோடு வெற்றி மட்டுமே வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கிடையே, அந்த பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர் என சிலர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுப்பதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார்.

ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதை கண்டுபிடிக்க சாமியார் ஆர்.கே.வித்யாதரன் பள்ளிக்கு வருகிறார். அந்த அமானுஷ்ய சக்திகளை ஏவி விடுவது நிழல்கள் ரவி என தெரிகிறது. எதற்காக அவர் இப்படி செய்கிறார் என்ற குழப்பமான சூழ்நிலையில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான யோகி பாபு மற்றும் பூமிகா இருவரும் அந்த பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகிறது. அவர்கள் யார்? அந்த அமானுஷ்யம் என்ன? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள்? நிழல்கள் ரவியை யார் இயக்குவது? அந்தப் பள்ளியின் முடிவு என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

வெற்றி, தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பயணிக்காமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டு பயணித்தால், படிக்கவில்லை என்றாலும் சாதிக்க முடியும், என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன். அறிவு போதிக்கும் பள்ளியில் அமானுஷ்யம் என்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதையை சொல்லியிருந்தாலும், அதன் பின்னணியில் மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியிருக்கிறார். வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கூறும் விதமாக இந்த 'ஸ்கூல்' படத்தை கொடுத்துள்ளார்.

ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை அளவாக கையாண்டிருந்தாலும், குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார். மற்றொரு ஆசிரியராக வரும் பூமிகா, வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையை அழுத்தமாக பதிவு செய்வதற்கு அவர் துணையாக நின்றிருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, உலகநாத சுவாமியாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் ஆகியோர் ஓரளவிற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

படத்திற்கு இளையராஜா தான் இசை என்பதே தெரியாத அளவிற்கு பாடல்களும் பின்னணி இசையும் சுமாராக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ், பள்ளி வளாகத்திலேயே முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு காட்சி கூட வகுப்பறையை காட்டாமல் விட்டது ஏனோ!.

பிளஸ் & மைனஸ்
தற்போது உள்ள பள்ளிகள் வெற்றி எனும் குதிரை பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது மாணவர்களுக்கு கல்வியை விட நல்ல ஒழுக்கமே முதலில் புகுத்த வேண்டும் என்ற அறிவுரையை சொல்லும் படமாக இந்த ஸ்கூல் படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். இருப்பினும் படத்தின் நீளம், பக்கம் பக்கமாக டயலாக் பேசுவது மற்றும் அறிவுரை சொல்வது ஆகியவை படத்திற்கு பெரிய மைனஸ். அட்வைஸ் அனைத்தும் ஒரு ஸ்டேட்மெண்ட்டாக இயக்குனர் பேசி இருப்பது ரசிப்பதற்கு பதில் எரிச்சல் வருகிறது.

ஸ்கூல் - அட்வைஸ் மழை

 

ஸ்கூல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஸ்கூல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓