2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், இன்ப நிலா
இயக்கம் - தங்கர்பச்சான்
இசை - பரத்வாஜ்
தயாரிப்பு - ஐங்கரன் இன்டர்நேஷனல்

ஒரு திரைப்படத்தின் வெளியீடு என்பது அந்தப் படத்திற்கு மிக முக்கியமானது. சில வருட இடைவெளிகளில் மக்களின் ரசனைகளும் மாறிவிடுகின்றன. அதற்கான பல விஷயங்கள் இயல்பாகவே நடந்து விடுகின்றன. மிகவும் கால தாமதமாக வெளிவரும் படங்கள் அந்த ரசனை மாற்ற சிக்கல்களில் சிக்கிவிடுகின்றன.

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், பூமிகா நடித்துள்ள இந்தப் படம் சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. இயக்குனர் தங்கர் பச்சான் அழகி போன்ற கதைகளை இன்னும் எத்தனை வைத்திருப்பாரோ தெரியவில்லை. காதல் தோல்வியும், பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்தித்தால் என்ன ஆகும் என்பதுதான் இந்த அழகிய பொழுதுகள், இல்லை, களவாடிய பொழுதுகள் படத்தின் கதை.

கல்லூரியில் படித்த போது சீனியராக இருக்கும் பிரபுதேவாவை காதலிக்கிறார் ஜுனியர் மாணவியான பூமிகா. பிரபுதேவா சராசரியான குடும்பத்தைச் சேர்ந்தவர், பூமிகா பணக்காரவீட்டுப் பெண். வழக்கம் போல அந்தஸ்து விவகாரத்தால் காதலர்கள் பிரிந்து போகிறார்கள். பிரபுதேவா, இன்பநிலா-வைக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் அப்பா ஆகிறார். பூமிகா, பெரிய பிசினஸ்மேன் பிரகாஷ்ராஜைத் திருமணம் செய்து கொள்கிறார். சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு விதி, பிரபுதேவாவையும், பூமிகாவையும் சந்திக்க வைக்கிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

திட்டமிட்டபடி 2010ம் ஆண்டிலேயே இந்தப் படம் வெளிவந்திருந்தால் அப்போதைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் காதல் என்பதன் அர்த்தம் எப்படி, எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது.

பிரபுதேவா, ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். கார் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு, நச்சரிக்கும் மனைவியுடனும், அன்பான குழந்தையுடனும் ஒரு சராசரி குடும்பத் தலைவனின் நிலைமையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். முன்னாள் காதலி பூமிகாவைச் சந்தித்தபின் அவர் ஒதுங்கிப் போவதும், பிரகாஷ்ராஜ் பல முறை அழைத்தும் அவரைச் சந்திக்காமல் கௌரவம் பார்த்து ஒதுங்கிக் கொள்வதிலும் அசத்தலான நடிப்பு.

தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகை பூமிகா. “ரோஜாக் கூட்டம், பத்ரி” என இரண்டு படங்களில் அந்தக் காலத்தில் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தப் படத்தில் நம்மையும் களவாடுகிறார். ஒரு பக்கம் அன்பான கணவர் பிரகாஷ்ராஜ், மற்றொரு பக்கம் முன்னாள் காதலன் பிரபுதேவா என இரண்டு பக்கமும் தவிக்கிறார். கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் தடம் மாறியிருக்கும் நடிப்பில் அழகாக சமன் செய்திருக்கிறார்.

வில்லனாக நடிக்காத படங்களில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக இருக்கும். அவருடைய மொத்த நடிப்புக்கும், சாட்சி சொல்ல, அந்த கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.

பிரபுதேவாவின் மனைவியாக இன்பநிலா. நன்றாக வசதியாக வாழத் துடிக்கும் கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் உணர்வை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பரத்வாஜின் இசையில் தேடித் தேடிப் பார்க்குறேன்... வித்தியாசமான உணர்வைத் தருகிறது.

உண்மையான காதலர்களுக்கும், காதல் தோல்வியடைந்தவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்புள்ளது.

களவாடிய பொழுதுகள் - பொழுது போகும்...!

 

பட குழுவினர்

களவாடிய பொழுதுகள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓