ஜாலியோ ஜிம்கானா
விமர்சனம்
தயாரிப்பு - டிரான்ஸ் இந்தியா
இயக்கம் - ஷக்தி சிதம்பரம்
இசை - அஷ்வின் விநாயகமூர்த்தி
நடிப்பு - பிரபுதேவா, அபிராமி, மடோனா செபாஸ்டியன்
வெளியான தேதி - 22 நவம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
சென்னையில் வட பழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் வீதிகளில் எத்தனையோ உதவி இயக்குனர்கள், விஸ்காம் படித்து முடித்தவர்கள், யு டியுபில் விதவிதமான காமெடிகளைப் பதிவிட்டு இயக்குனராக முயற்சிப்பவர்கள் என ஒரு பெரும் கூட்டமே சினிமா வாய்ப்புக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். யு டியூப் சேனல்களில் கூட இப்போதெல்லாம் பல புதியவர்கள் விதவிதமான காமெடிகளைப் போட்டு மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளி வருகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வாய்ப்பு சீனியர் இயக்குனரான ஷக்தி சிதம்பரத்திற்குக் கிடைத்திருக்கிறது. அவரை நம்பி பத்து கோடி ரூபாய்க்கு முதலீடு போட்ட தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படத்தைக் கொடுத்து, அதை நம்மையும் பார்க்க வைத்து சோதனைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். படத்திற்கு மட்டும் 'ஜாலியோ' எனப் பெயர் வைத்துவிட்டால் போதுமா, படத்தில் இருக்க வேண்டாமா ?. திறமையுள்ள புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் தயாரிப்பாளர்களே.
ஹோட்டல் தொழில் நடத்தி வருபவர் ஒய்ஜி மகந்திரன். அவருடைய மகள் அபிராமி, பேத்திகள் மடோனா செபாஸ்டியன், அபிராமி பார்கவன், மரியா. ஒய்ஜி நடத்தி வந்த ஹோட்டலில் பெரிய ஆர்டர் கொடுத்து பணம் தராமல் ஏமாற்றுகிறார் எம்எல்ஏ மதுசூதனன். அதனால் உதவிக்காக வக்கீல் பிரபுதேவாவிடம் போகிறார்கள். ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் அவரைப் பார்க்கப் போனால் அங்கு அவர் இறந்து கிடக்கிறார். எங்கே கொலைப்பழி நம் மீது விழுந்துவிடுமோ என்ற பயத்தில் பிரபுதேவாவை உயிருள்ளவர் போல காட்டி வெளியே கொண்டு போகிறார்கள். இதன்பின் பிரபுதேவா வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபாய் இருப்பது தெரிய வர அதை, அபிராமியும் மகள்களும் அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை திரைக்கதை இலக்கில்லாமல் எங்கெங்கோ சுற்றிக் கொண்டே இருக்கிறது. இடையிடையே யார், யாரோ வந்து போகிறார்கள். அவர்கள் பிரச்சனை எல்லாம் பிரபுதேவாவை மையப்படுத்தியே இருக்கிறது. சர்ச்சில் பாதர் ஆக இருக்கும் யோகிபாபுவிடம் வந்து தங்கள் கதையைச் சொல்லி 'கவுன்சிலிங்' பெற மொத்த கதையையும் மடோனா சொல்வது போலத்தான் படம் ஆரம்பமாகிறது. தான் என்ன எடுத்தாலும் ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என 'ஓவர் கான்பிடன்ஸ்' ஆக இருந்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
சில காட்சிகள், பாடலைத் தவிர படம் முழுவதும் பிணமாக நடித்திருக்கிறார் பிரபுதேவா. ஓடியாடி, நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த பிரபுதேவாவை இப்படி 'நடைப்பிணமாக' நடிக்க வைக்க எப்படி மனம் வந்ததோ இயக்குனருக்கு. அதையும் வித்தியாசம் என நினைத்து படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தாரோ பிரபுதேவா.
அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிராமியையும், அவரது மூத்த மகளாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டினையும் படத்தின் கதாநாயகிகள் என்று சொல்லலாம். இவர்களிருவரும்தான் படத்தில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஏதோ ஒரு சில காட்சிகளில் நடிக்கிறார்கள். மடோனாவின் தங்கைகள் அபிராமி, மரியா மனதில் பதியும் அளவிற்கு அவர்களுக்கு வசனங்கள் இல்லை. பிரபுதேவாவைத் தேடி வரும் ஒரு பெண்ணாக புஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார்.
படத்தில் கமிஷனராக எம்எஸ் பாஸ்கர், இன்ஸ்பெக்டராக ஜான் விஜய், எம்எல்ஏவாக மதுசூதனன், அவரது அடியாட்களாக தீனா, ரோபோ சங்கர் ஆகியோர் நகைச்சுவை என்ற பெயரில் நம்மை படுத்தி எடுக்கிறார்கள்.
படத்தில் திடீரென பாடல்கள் வந்து போகிறது. இரட்டை அர்த்தப் பாடலாக 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' பாடல் வந்து போகிறது. அதில் கூட பிரபுதேவா கொஞ்சமாகத்தான் நடனமாடுகிறார். அஷ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் உருட்டல்கள்தான் அதிகமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவுக்கு கேமராவைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுதான் அதிக வேலை. திரைக்கதை அப்படி பயணித்துக் கொண்டே இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் லாஜிக் பார்க்காதீர்கள் என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சொல்லிவிட்டார். இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவ்வளவு நம்பிக்கையில் இருந்திருக்கிறார்.
ஜாலியோ ஜிம்கானா - ஐயோ… ஐயகோ…
ஜாலியோ ஜிம்கானா தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஜாலியோ ஜிம்கானா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்