3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்
தயாரிப்பு - மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - தனா
இசை - சித் ஸ்ரீராம்
வெளியான தேதி - 7 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 3.25.5

தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான குடும்பக் கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்த வானம் கொட்டட்டும் போக்கியிருக்கிறது. படத்தில் நிறைய நடிகர்கள், நடிகைகள். இருந்தாலும் அனைவருக்குமே குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் கொடுத்து இதமான காதல், சென்டிமென்ட், வில்லத்தனம் என சுவாரசியமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனா.

கிராமத்தில் ஆரம்பமாகும் கதை, சென்னைக்கு நகர்ந்தாலும் கிராமிய மணம், அதன் பாசம் ஆகியவை மாறாத அளவில் படத்தின் திரைக்கதையில் அதை உயிரோட்டமாய் இணைத்திருக்கிறார்.

தன் அண்ணனைக் கொல்ல முயற்சித்தவர்களைக் கொலை செய்து சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். அவரின் மனைவி ராதிகா, தன் குழந்தைகளை சென்னைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். ஒரு அச்சகத்தில் வேலை செய்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். மகன் விக்ரம் பிரபு கால் டாக்சி ஓட்டி பின் கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை வியாபாரம் ஆரம்பிக்கிறார். மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் வக்கீலுக்குப் படித்து வருகிறார். 16 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி தன் குடும்பத்தினரிடம் வருகிறார் சரத்குமார். ஆனால், மகனும், மகளும் அவரிடம் சரியாகக் கூடப் பேசாமல் தவிர்க்கிறார்கள். இதனிடையே, சிறையிலிருந்து வந்த சரத்குமாரைப் பழி வாங்க, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்துக் கொண்டிருக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களை விட இந்தப் படத்தில் கூடுதலான கவனத்துடன் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றபடியான இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது.

விக்ரம் பிரபு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறமையை நன்றாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. அம்மா, அண்ணனுடன் பாசமாகவும், நண்பன் சாந்தனுவுடன் காதலை மறைத்துக் கொண்டும், மற்றவர்களைக் காட்டிலும் நடிப்பில் முதலிடத்தில் நிற்கிறார்.

சரத்குமாரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. தான் பெற்ற மகனும், மகளும் தன்னை வெறுப்பாகப் பார்த்து அவமானப்படுத்திய பின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்னர் மனைவி ராதிகாவிடம், அவர்களே தன்னைத் தேடி வந்து அழைக்கும் வரை வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லும் போது நெகிழ வைக்கிறார்.

ஒரு அம்மா கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் ராதிகா சரத்குமார் போன்றவர்களிடம் கொடுத்தால் அதன்பின் இயக்குனர் எதையுமே சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அவர்களாகவே அந்தக் கதாபாத்திரத்தைத சிறப்பாகச் செய்துவிடுவார்கள். நடுத்தரக் குடும்பத்து அம்மாவை நம் கண் முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்துகிறார் ராதிகா.

சிறு வயதிலிருந்தே ஐஸ்வர்யாவுடன் நட்பாகப் பழகும் கதாபாத்திரத்தில் சாந்தனு. அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் ஒரு அன்பான நண்பனாக வலம் வருகிறார். கடைசியில் அவருக்கும் ஒரு முக்கியத்துவத்தை சேர்த்துவிட்டார்கள்.

மடோனா செபாஸ்டியனுக்கு அதிக வேலையில்லை, இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் அவருக்கான இடத்தை காட்சிகள் மூலமும், வசனம் மூலமும் உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர்.

இரு வேடங்களில் நந்தா. ஒருவர் இயல்பானவர், மற்றொருவர் அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிப்பவர். சில படங்களில் வில்லனாகவே பார்த்த மதுசூதன ராவை இந்தப் படத்தில் நல்லவராகக் காட்டியிருப்பது ஆச்சரியம்தான்.

தமிழ் சினிமாவிற்கு அந்தக்கால எஸ்.வி.ரங்கா ராவ் போன்ற ஒரு நடிகர் வளர்ந்து வருகிறார், அவர்தான் இயக்குனர் பாலாஜி சக்திவேல். சரத்குமார் அண்ணனாக அப்படி ஒரு பண்பட்ட நடிப்பு அவரிடம்.

சித்ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால், பின்னணி இசை ஒலிக்க வேண்டிய இடங்களில் கூட பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள். குறிப்பாக கிளைமாக்சில் எதற்கு அந்த சோகமான பாடல் எனத் தெரியவில்லை.

சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதைப் போல ஒரு உணர்வு இருக்கிறது, அது மட்டும் தான் சிறு குறை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒரு நிறைவான குடும்பக் கதையை ரசித்துவிட்டு வரலாம்.

வானம் கொட்டட்டும் - நனையலாம்!

 

பட குழுவினர்

வானம் கொட்டட்டும்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓