சார்லி சாப்ளின் 2
விமர்சனம்
நடிப்பு - பிரபுதேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா, பிரபு மற்றும் பலர்.
தயாரிப்பு - அம்மா கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஷக்தி சிதம்பரம்
இசை - அம்ரிஷ்
வெளியான தேதி - 25 ஜனவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2/5
2002ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகமான 'சார்லி சாப்ளின்' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு சிறப்பான வெற்றியைப் பெற்றது. சில இந்திய மொழிகளில் ரீமேக் ஆனது.
17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு படத்தை மீண்டும் அதே பாணியில் எடுத்திருப்பதைப் போன்ற ஒரு உணர்வே இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்கும் போதும் ஏற்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் 'மேக்கிங்கில்' எவ்வளவோ மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அந்த மாற்றம் எதுவும் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை.
முதல் பாகத்தில் ஓரளவிற்காவது கதை என்பது இருந்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு முழு படத்தையும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
இடைவேளைக்குப் பின்னர்தான் படத்தில் கலகலப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. அதுவும் சுந்தர் சி படங்களின் சிலபல முந்தைய ஆள்மாறாட்ட நகைச்சுவைக் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது.
மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்தும் பிரபுதேவாவுக்கு நிக்கி கல்ரானி மீது காதல். அந்தக் காதல் கல்யாணத்தில் வந்து நிற்கும் போது, நண்பன் விவேக் பிரசன்னா மூலம் நிக்கி மீது ஒரு சந்தேகம் வருகிறது. அந்த வேகத்தில் நிக்கியை ஆவேசமாகத் திட்டி ஒரு வீடியோ எடுத்து அவருக்கு வாட்சப் அனுப்புகிறார். அந்த வீடியோவை நிக்கி பார்ப்பதற்குள் அதைத் தடுத்து நிறுத்த நண்பர்களுடன் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
இந்தக் காலத்திய டிரென்டான வீடியோ பதிவு, வாட்சப் என யோசித்ததில் மட்டும் புதுமை இருக்கிறது. ஆனால், காமெடி காட்சிகள் அனைத்துமே முன்னர் பார்த்ததாக இருந்தாலும், பிரபுதேவாவின் நடிப்பால் கொஞ்சம் மறந்து போக வைக்கிறது. இம்மாதிரியான நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் பிரபுதேவாவுக்கு கை வந்த கலை. தன்னுடைய நடனத்தைப் போலவே சர்வசாதாரணமாக செய்கிறார்.
கூடவே, வடிவேலு மாதிரியான ஒரு நண்பன் இருந்திருந்தால் நகைச்சுவை உச்சம் தொட்டிருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக வில்லன் தோற்றத்தில் இருக்கும் விவேக் பிரசன்னாவை காமெடி செய்ய விட்டிருக்கிறார்கள். அவரும் முடிந்தவரை சிரிப்பை வரவைக்க முயற்சிக்கிறார்.
பிரபுதேவா நடிப்பைக் கொஞ்சம் ரசிக்கலாம் என்று பார்த்தால் பக்கத்தில் அவருடைய தோழி என்று சொல்லிக் கொண்டு கிளாமராக வந்து அவர் பக்கம் பார்வையைத் திருப்புகிறார் சந்தனா. மற்றொரு நண்பரான அரவிந்த் ஆகாஷுக்கு அதிக வேலையில்லை.
சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவர் என்ற கதாபாத்திரத்தில் நிக்கி கல்ரானி. நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு பிரமாதமான காட்சிகள் இல்லை. பிரபுதேவாவைப் பார்த்து முதலில் பிடிக்காமல் போய் பிறகு பிடித்து கல்யாணம் செய்து கொள்ளும் காதலி கதாபாத்திரம். சிரிப்பது, கொஞ்சுவது என காட்சிகளைக் கடத்துகிறார். 'சின்ன மச்சான்' பாடலில் பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து ஆடுகிறார்.
அடா சர்மா, படத்தின் இரண்டாவது கதாநாயகி. இடைவேளைக்கு முன் ஒரே ஒரு காட்சியில் வருகிறார். அதோடு இடைவேளைக்குப் பின்தான் என்ட்ரி ஆகிறார். இரண்டாவது நாயகி என்பதால் பிரபுதேவாவுடன் ஒரு பாடலை வைத்துவிட்டார்கள்.
முதல் பாகத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒரு நாயகர் பிரபு. இந்தப் படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக பிரமோஷன். வழக்கம் போல் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்.
'சுறா' படத்தின் வில்லன் தேவ் கில் ஒரு வில்லன், 'ஐபிஎல்' நிகழ்ச்சி தொகுப்பாளர் சமீர் கோச்சார் மற்றொரு வில்லன். ஆரம்பத்தில் ஒரு காட்சியில் ஒருவரும், கிளைமாக்சில் மற்றொரு காட்சியில் இரண்டாமவரும் வருகிறார்கள். அவர்கள் வேலை அவ்வளவே.
இடைவேளைக்குப் பின் படம் முழுவதும் ஒரு ஹோட்டலிலேயே நகர்கிறது. வசன வழி, உடல் மொழி நகைச்சுவை என இல்லாமல் காட்சி வழி காமெடி காட்சிகளாகவே கிளைமாக்ஸ் வரை படம் நகர்கிறது. இந்த காமெடி காட்சிகள்தான் படத்தைக் கொஞ்சமே கொஞ்சம் காப்பாற்றவும் செய்கிறது.
அம்ரிஷ் இசையில், 'சின்ன மச்சான்' பாடல் எப்போது வரும் என்று காக்க வைக்கிறார்கள். அந்தக் காத்திருப்பு ரசிகர்களுக்கு இருக்கும் என்று தெரிந்துதான் கிளைமாக்சுக்கு முன்பாக அந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் சிரிப்பு குறைவுதான். ஆமாம், 17 வருடங்கள் கழித்து எதற்கு இந்த இரண்டாம் பாகம் ?.
சார்லி சாப்ளின் 2 - 'ஒன் சாங் வொன்டர்'
பட குழுவினர்
சார்லி சாப்ளின் 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்