இடியட்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ராம்பாலா
இசை - விக்ரம் செல்வா
நடிப்பு - மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி
வெளியான தேதி - 1 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2/5
பாழடைந்த பங்களா, பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள், அந்த வீட்டிற்குள் சிக்கும் அப்பாவிகள், பேயை விரட்ட வரும் மந்திரவாதி என காலம் காலமாய் தமிழ் சினிமாவில் வரும் அதே பேய்க் கதைதான் இந்த 'இடியட்'. அந்த பார்முலாவில் இருந்து எதையும் மாற்றி எடுத்துவிடக் கூடாது என பிடிவாதமாய் இருந்து எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.
'தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களை இயக்கிய ராம்பாலா தான் இந்தப் படத்தின் இயக்குனர். அவரா இப்படி ஒரு படத்தை இயக்கினார் என ஆச்சரியமாக உள்ளது. முந்தைய இரண்டு படங்களிலும் படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார். இந்தப் படத்தில் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.
ஒரு விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறார் மிர்ச்சி சிவா. அதே மருத்துவமனையில் இருக்கும் நிக்கி கல்ரானி மீது அவருக்குக் காதல். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூனியக்காரி அக்ஷரா கவுடா, நிக்கியைக் கடத்தி தனது காதலனுடன் ஒன்று சேர முயற்சிக்கிறார். இன்னொரு பக்கம் நிக்கியைக் கடத்தி அவரது அப்பாவிடம் பணம் பறிக்க முயல்கிறார் ரவிமரியா. இவர்களை அனைவரும் ஒரு பேய் பங்களாவுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை. அங்கு அடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக் கதை.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரான மிர்ச்சி சிவா. அவ்வப்போது அவர் அடிக்கும் 'ஒன்லைன்' காமெடிகள் தான் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு அவரும் திடீர் திடீரென காணாமல் போய்விடுகிறார். நாயகனான அவரைச் சுற்றிக் கதை நகராமல், நிக்கியைக் கடத்தும் ரவி மரியாவைச் சுற்றி நகர்கிறது.
மனநல மருத்துவராக நிக்கி கல்ரானி. அதே மனநல மருத்துவமனையில் இருக்கும் சூனியக்காரி அக்ஷரா கவுடா, சிகிச்சை பெறும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதை நகர்வதற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். பின்னர் அவர்களுடன் ரவி மரியா, மயில்சாமி ஆகியோரும் சேர்ந்து கொள்கிறார்கள். ஒருவரைச் சுற்றி மட்டும் திரைக்கதை நகராமல் அடுத்தடுத்து அனைவருக்குமே காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனந்த்ராஜ் ஆரம்பத்தில் நன்றாக சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக ஊர்வசி. இவர்களைச் சுற்றி கதையை நகர்த்தியிருந்தால் கூட சுவாரசியமாக இருந்திருக்கும்.
இடைவேளைக்குப் பின் பேய் பங்களாவுக்குள் தொடர்ந்து கதை சுற்றுகிறது. சிறு குழந்தைகள் ரசிக்கும் அளவிற்குத்தான் குழந்தைத்தனமான காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு பேய்ப் படத்தில் 'டெம்ப்ளேட்' ஆக என்ன காட்சிகள் இருக்குமோ அது அனைத்துமே படத்தில் இருக்கிறது.
எதையோ எடுத்து, என்னமோ செய்து, ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
இடியட் - யாரா இருக்கும் ?
இடியட் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
இடியட்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்