3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி மற்றும் பலர்
தயாரிப்பு - ஹேன்ட் மேட் பிலிம்ஸ்
இயக்கம் - ராம்பாலா
இசை - ஷபிர்
வெளியான தேதி - 7 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நகைச்சுவை தாக்கம் குறைந்து போய்விட்டது என்று நினைத்தவர்களுக்கு இந்த தில்லுக்கு துட்டு 2 சரியான நகைச்சுவை விருந்தைப் பரிமாறி இருக்கிறது.

நாயகனான பின் வேறு ரூட்டில் பயணித்த சந்தானம், மீண்டும் அவருக்கே உரிய ரூட்டிற்கு திரும்பியிருக்கிறார். தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகம் சந்தானத்திற்கு நாயகனாக ஒரு திருப்பு முனையைக் கொடுத்தது. இப்போது இந்த தில்லுக்கு துட்டு 2 மீண்டும் ஒரு திருப்புமுனையை அவருக்குக் கொடுக்கும்.

இயக்குனர் ராம்பாலா, சந்தானத்தின் நகைச்சுவை உணர்வை ஒரு காட்சியில் கூட வீணாக்காமல் படம் முழுவதும் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார். இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று இடைவேளையில் ரசிகர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது.

தான் வசிக்கும் ஏரியாவில் யாரையும் மதிக்காமல், மாமா ராஜேந்திரனுடன் எப்போது பார்த்தாலும் குடி, கலாட்டா என இரவில் கூட யாரையும் தூங்க விடாமல் தொந்தரவு செய்பவர் சந்தானம். அவரது கொட்டத்தை எப்படியாவது அடக்க வேண்டும் என்று ஏரியா வாசிகள் முடிவு செய்கிறார்கள். டாக்டரான கார்த்திக் அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் நர்ஸ் ஆக இருக்கும் ஷ்ரிதா-வை திட்டம் போட்டு காதலிக்க வைக்கிறார். ஷ்ரிதாவிடம் யார் வந்து காதல் சொன்னாலும் ஒரு பேய் அவர்களை அடித்துத் துவைத்துவிடும். அப்படி ஒரு முறை அடி வாங்கியவர்தான் டாக்டர் கார்த்திக். அவரது திட்டம் போலவே சந்தானமும், ஷ்ரிதாவும் பழக ஆரம்பிக்கிறார்கள். காதலில் விழுந்த சந்தானம், ஷ்ரிதாவிடம் காதலை சொல்லும் போது பேய் வந்து சந்தானத்தைப் புரட்டி எடுக்கிறது. ஷ்ரிதாவின் அப்பா ஒரு கேரள மந்திரவாதி. அவர்தான் மகளுக்குக் காவலாக அப்படி ஒரு பேயை உலவ விட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும், மந்திரவாதி மாமனாரை சந்திக்கப் போகிறார் சந்தானம். அதன்பின் நடக்கும் பிரச்சினையில் சந்தானம் ஜெயித்தாரா, அந்தப் பேய் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் சந்தானம் சொல்வதைப் போலவே, அரசியல்வாதி மகளைக் காதலித்தால் ஆள் வைத்து அடிப்பதும், போலீஸ் மகளைக் காதலித்தால் போலீசை விட்டு அடிப்பதும், மந்திரவாதி மகளைக் காதலித்தால் பேயை வைத்து அடிப்பதும் புதுமையாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி பேயை வைத்து காதலைப் பிரிப்பதைப் பார்த்திருக்க மாட்டோம். அதிலும் பேயை வைத்து பயமுறுத்தால் இரண்டாவது பாகத்தில் இரு மடங்கு சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சந்தானத்திற்குப் படத்தில் தேவையற்ற ஹீரோ பில்ட்-அப் இல்லாமல் யதார்த்தமான ஏரியா இளைஞராக இருக்கிறார். இடைவேளை வரை ஒரு லுங்கி, சட்டை, டிரிம் செய்யப்பட்ட தாடி, எப்போது பார்த்தாலும் குடி இதுதான் சந்தானத்தின் விஜி கதாபாத்திரம். தன்னை தேவையில்லாமல் போலீசிடம் சிக்க வைத்த ஏரியா வாசிகளைப் பழி வாங்க, ஆட்டோ சைலன்சரைக் கழட்டிவிட்டு, இரவு முழுவதும் ஏரியாவில் சுற்றி சுற்றி ரவுண்ட் அடித்து அவர்களைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் பார்ட்டி இவர். அப்படிப்பட்டவர் வழக்கம் போல நாயகியைப் பார்த்து காதலில் விழுந்து பேயிடம் சிக்கி சின்னாபின்னமானாலும், நாயகியின் அப்பா மந்திரவாதியைத் தேடிப் போய் அவரையே ஓட்டு, ஓட்டென்று ஓட்டுகிறார். இதெல்லாம் சந்தானத்தைத் தவிர வேறு யார் செய்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் முடியாது. மாமா ராஜேந்திரனுடம் சொல்லு சொல்லு நீ என்ன டயலாக் சொன்னாலும் கவுன்ட்டர் ரெடியா இருக்கு என அவரை மட்டுமல்ல, அனைவருக்கும் கவுன்ட்டர் கொடுத்து நம்மை கலகலவென சிரிக்க வைக்கிறார். “இந்த ரூட்டை விட்றாதீங்க சந்தானம்...அப்புறம் கிளைமாக்சுல நீங்க சொல்ற மாதிரி, யார் அமுக்க நினைச்சாலும், ஏறி மிதிச்சிடலாம்“.

ஒரு படம் முழுவதும் நான் கடவுள் ராஜேந்திரனைப் பார்ப்பதும், தனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து அவரும் சந்தானத்திற்கு ஈடு கொடுத்து காமெடியில் அசத்துவதும் அருமை. சந்தானம் - ராஜேந்திரன் காம்பினேஷன் வரும் காட்சிகள் அனைத்துமே சிரிப்புக்கு உத்தரவாதம். அதிலும், அந்தப் பேய் வீட்டிற்குள் ராஜேந்திரனும், மந்திராவதியும் கதவைத் திறந்து, திறந்து போயாட்டம் ஆடும் காட்சியில் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை.

படத்தின் நாயகியாக கேரள அறிமுகம் ஷ்ரிதா சிவதாஸ். படத்தில் அவர் டாக்டரா, நர்சா என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. நர்சாக இருந்திருந்தால் சீருடை அணிந்திருப்பார். ஆனால், சீருடையே இல்லாமல் வலம் வருகிறார். நாமாகவே நர்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சிரித்த முகத்துடன் பாந்தமாக இருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அவரிடம் காதலைச் சொல்லும் ஒருவர் பேயால் அடி வாங்குவதிலேயே ஒரு சஸ்பென்சை ஆரம்பித்து வைக்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் உடையும் போது காமெடியும் உண்டு கலவரமும் உண்டு.

இடைவேளைக்குப் பின் பெண் மந்திரவாதியாக ஊர்வசி. நாயகியின் அப்பா மந்திரவாதியாக பிபின் இருவருமே அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பு. சிவசங்கர், கார்த்திக், குஞ்சு குட்டன் ஆக நடித்திருக்கும் பிரசாந்த் ராஜ் மற்ற கதாபாத்திர நடிகர்களில் கவனிக்கப்படுவார்கள்.

ஷபிர் இசையில் ஒரே ஒரு டூயட் பாடல் மட்டும்தான் இருக்கிறது. பாடல் வரும் என்று எதிர்பார்க்கும் காட்சிகளில் பாடல் வந்து தொந்தரவு செய்யாதது பெரிய ஆறுதல். பின்னணி இசையிலும் காட்சியின் தன்மை உணர்ந்து இசையமைத்திருக்கிறார்.

இடைவேளை வரை சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் குடி குடியைக் கெடுக்கும் வாசகம் வருகிறது. குடிக்காமலேயே அந்தக் காட்சிகளை அமைத்திருக்கலாம். இடைவேளைக்குப் பின் கதையின் திருப்புமுனை வரும் சமயம் நகைச்சுவை கொஞ்சம் குறைந்து பின் டேக்ஆப் ஆகிறது. இரண்டு மணி நேரத்தில் படத்தை முடித்துவிட்டார்கள். இன்னும் அரை மணி நேரம் கூட காட்சிகளை வைத்து நம்மை சிரிக்க வைத்திருக்கலாம்.

தில்லுக்கு துட்டு 2 - சந்தானத்தின் வெற்றி ரூட்டு

 

பட குழுவினர்

தில்லுக்கு துட்டு 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓