2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பியூப்பிள் மீடியா பேக்டரி
இயக்கம் - கார்த்திக் யோகி
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சந்தானம், மேகா ஆகாஷ், மாறன்
வெளியான தேதி - 2 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கடவுள் இல்லை என்று சொல்லி, கோயில் ஒன்றை தனது இடத்தில் கட்டி, ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஒருவனைப் பற்றிய கதைதான் இந்த 'வடக்குப்பட்டி ராமசாமி'.

ஆங்காங்கே காமெடி காட்சிகளாலும், சில சுவாரசியமான கதாபாத்திரங்களாலும் இந்த இரண்டரை மணி நேரப் படத்தை ரசிக்க வைத்துவிடுகிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. படத்திற்கான நகைச்சுவை வசனங்கள், சில சீரியசான வசனங்கள்தான் இந்தப் படத்தின் பலம்.

வட தமிழகத்தில் வடக்குபட்டி என்ற ஊரில் 1974ல் நடக்கும் கதை. அந்த கிராமத்தைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத சந்தானம் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கோயில் ஒன்றை கட்டி, மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதிக்கிறார். அந்தப் பகுதிக்கு புதிதாக வரும் தாசில்தார் தமிழ், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை காண்டிராக்ட் விற்று சம்பாதிக்கலாம் என ஐடியா தருகிறார். அதற்காக அதிக கமிஷன் வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு சந்தானம் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ஊரில் ஒரு பிரச்சனை வர, அதைக் காரணமாக வைத்து கோயிலை மூடி சீல் வைக்கும் அளவிற்குக் கொண்டு செல்கிறார் தாசில்தார் தமிழ். அந்த சமயத்தில் 'மெட்ராஸ் ஐ' என்ற கண் நோய் சென்னையில் பரவுவதை அறிந்த சந்தானம், கோயில் பூசாரியை அழைத்துக் கொண்டு போய் அந்த நோயை பூசாரிக்கு வரவைக்கிறார். பின் ஊருக்கு வந்து அந்த பூசாரி மூலம் ஊர் மக்களுக்கும் பரப்புகிறார். 'மெட்ராஸ் ஐ' நோய் பற்றி தெரியாத அப்பாவி ஊர் மக்களிடம், அது 'கண்ணாத்தா' கண்ணைக் குத்தி தண்டனை தந்ததாக பிரச்சாரம் செய்கிறார். அதை வைத்து கோயிலைத் திறக்க முடிவு செய்கிறார். அவர் நினைத்தபடி கோயிலைத் திறந்தாரா, தாசில்தார் கோயிலைத் திறக்கவிட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

1985ல் வெளிவந்த 'உதயகீதம்' படத்தில் மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதிக்கும் போலி சாமியார் கவுண்டமணி கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றி, அதை வைத்து முழு படமாக இந்தப் படத்தில் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கோவில் நிர்வாகியாக சந்தானம். கடவுள் பெயரைச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவது, அவர்களது கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதிப்பது என ஏமாற்றுக்கார ராமசாமியாக நடித்திருக்கிறார் சந்தானம். ஊர் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுவது என்பதை திட்டம் மேல் திட்டம் போட்டு ஏமாற்றுகிறார். காமெடி மட்டுமே தனக்குக் கை கொடுக்கும் என்பதைப் புரிந்து ராமசாமி கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார்.

சந்தானத்தின் உதவியாளராக மாறன், கோயில் பூசாரியாக சேஷு இருவரும் சந்தானத்துடன் படம் முழுவதும் வருகிறார்கள். ஒரு பக்கம் சந்தானம் அவரது பங்கிற்கு சிரிக்க வைக்க, மாறன், சேஷு இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆளுக்கொரு பக்கம் வசனங்களாலும், சேஷ்டைகளாலும் சிரிக்க வைத்துள்ளார்கள்.

படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷுக்கு அதிக வேலையில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்திற்கு அட்வைஸ் செய்து அவரைத் திருத்துகிறார். சந்தானத்தை பழி வாங்கத் துடிக்கும் தாசில்தார் ஆக தமிழ். ஊரின் இரண்டு பெரிய மனிதர்களாக எதிரும் புதிருமாக இருக்கும் ஜான் விஜய், ரவி மரியா இருவரும் 'மொக்கை' ஜோக்குகளை அடிக்கடி கொடுத்து சோதிக்கிறார்கள். ஒரு மேஜர் கதாபாத்திரத்தை மனநிலை பாதித்தவர் என கேலிக்குள்ளாக்கி இருக்கிறார்கள். காமெடிக்காக இப்படி செய்வது கடும் கண்டனத்துக்குரியது. மேஜர் ஆக நிழல்கள் ரவி நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையில் ஒரு காமெடி படத்திற்கு உண்டான பாடல்கள், பின்னணி இசை அமைந்துள்ளது. வடக்குபட்டி ஊர், கோயில் என அந்தக் காலத்திய பதிவை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்.

கண் நோயை ஊர் மக்களுக்கு பரப்பி, அதை வைத்து அவர்களை பயமுறுத்துவது என்பதையெல்லாம் காமெடி என எப்படி எடுத்துக் கொள்வது?. அந்தக் காலத்தில் மக்கள் இப்படித்தான் இருந்தார்களா என்ற கேள்வியை எழுப்பும்படியாக சில பல காட்சிகள் அமைந்துள்ளன. ஒரு சில காட்சிகள் மிகவும் நீளமாகப் போய்க் கொண்டே இருக்கிறது.

வடக்குபட்டி ராமசாமி - வந்து பார்க்கலாம்…

 

வடக்குப்பட்டி ராமசாமி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வடக்குப்பட்டி ராமசாமி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓