3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கார்த்திக் யோகி
இசை - யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு - சந்தானம், யோகி பாபு, அனகா, ஷெரின் கான்ச்வாலா
வெளியான தேதி - 10 செப்டம்பர் 2021 (ஜீ 5 ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் படங்களே எப்போதோ ஒரு முறை தான் வருகின்றன. இது அந்த சயின்ஸ் பிக்ஷனில் வந்துள்ள ஒரு காமெடிப் படம். வித்தியாசமாக யோசித்த இயக்குனர் கார்த்திக் யோகிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்.

2027ம் ஆண்டில் முன்னாள் ஹாக்கி வீரரான சந்தானம் ஈ.பி.யில் லைன்மேனாக வேலை செய்யும் ஈ.பி. மணியாக இருக்கிறார். காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அனகாவின் டார்ச்சர் அவரது நிம்மதியைக் குலைக்கிறது. யதேச்சையாக டைம் மிஷின் வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரு கூட்டம் அவரது கண்ணில் சிக்குகிறது. அந்த டைம் மிஷின் மூலம் 2020ம் ஆண்டிற்குச் சென்று தனது திருமணத்தை நிறுத்தச் செல்கிறார் ஈ.பி. மணி. அங்கு மணமகனாக இருக்கும் மணியைச் சந்தித்து எதிர்காலத்தில் நடக்கும் பிரச்சினைகளைச் சொல்கிறார். அதை நம்பாத மணமகன் மணியிடம் 2027க்கு வேண்டுமானால் போய் பார்க்கச் சொல்கிறார். 2027க்குச் சென்று அதைப் பார்க்கும் மணமகன் மணி, மீண்டும் 2020க்கு வந்து அனகா உடனான திருமணத்தை நிறுத்துகிறார். மேலும், அனகாவின் தோழியான ஷெரின் கான்ச்சனவாலாவிடம் சென்று அவரைக் காதலிப்பதாகக் கூறி சேர்கிறார். ஷெரினுடன் திருமணம் நடப்பதால் 2027ல் ஷெரின் கணவராக இருக்கிறார். ஆனால், 2027ல் சந்தானம், ஷெரின் விவகாரத்திற்காக நீதிமன்ற வழக்கில் இருக்கிறார்கள். ஷெரினுடன் வாழ்வதை விட அனகாவே மேல் என மீண்டும் டைம் மிஷின் மூலம் 2020க்கு வந்து அனகாவைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஒரு சந்தானம், காதலிகளாக, மனைவிகளாக அனகா, ஷெரின். எது உண்மையான காதல், பாசம் என எப்படி கண்டுபிடித்து முடிவெடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

மேலே எழுதியதில் உங்களுக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்பதை படம் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். குழப்பமான கதையை குழப்பமில்லாமல் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு கதையை யோசித்ததற்கே தனி பாராட்டைத் தெரிவிக்கலாம்.

ஒரே சந்தானம் 2020, 2027ல் அனகா காதலியாக, கணவனாக, ஷெரின் காதலியாக, கணவனாக....புரிந்து கொண்டு பொருத்தமாக நடிப்பது கஷ்டம்தான். சந்தானம் அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது உடல் மிகவும் இளைத்துப் போயிருந்தாலும் அவரது காமெடியும், நடிப்பும் இளைக்கவில்லை. தனக்கு எந்த மாதிரியான கதைகள் பொருத்தமாக இருக்கும் என தேடித் தேடித் தேர்வு செய்கிறார் சந்தானம். இந்த டிக்கிலோனாவை சரியாகத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அனகா, ஷெரின் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. முதலில் காதலியாக, பின்னர் மனைவியாக, பின்னர் பிரிவால் வாடுபவர்களாக. இருந்தாலும் சந்தானத்தின் ஆக்கிரமிப்பிற்கு இடையில் இவர்களும் தெரிவது ஆச்சரியம்தான். அந்த அளவிற்கு அவர்களுக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனந்தராஜ், முனிஷ் காந்த், மாறன் மற்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் முக்கியமானவர்கள். கிளைமாக்ஸில் மட்டும் வரும் மாறன் முன்னிருவர்களை முந்திக் கொண்டு காமெடி நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார். சிறப்புத் தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். சந்தானம் படத்தில் எப்போதும் பேசப்படும் சித்ரா லட்சுமணன், கொஞ்சமாக வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு, டைம் மிஷின் விஞ்ஞானியாக வரும் அருண் அலெக்சாண்டர், டாக்டர் ஆக வரும் மொட்டை ராஜேந்திரன் அவரவர் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் வச்சாலும் வக்காம... ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இயக்குனருக்கு அடுத்து படத்தொகுப்பாளர் ஜோமின் தான் இந்தப் படத்தின் முக்கியப் புள்ளி. மிகவும் கவனமாக, குழப்பமில்லாமல் காட்சிகளைத் தொகுத்து ரசிகர்களுக்குப் புரியும்படி கொடுத்திருக்கிறார்.

டைம் மிஷின் என்றாலே லாஜிக் இல்லாத ஒன்று, அது காமெடி படத்திற்கும் தேவையில்லாதது. சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள படம், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

டிக்கிலோனா - காமெடி கார்

 

பட குழுவினர்

டிக்கிலோனா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓