
கிர்ர்ர் (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : ஷாஜி நடேசன் & ஆர்யா (நடிகர்)
இயக்கம் : ஜெய் கே
இசை : டான் வின்சென்ட்
நடிகர்கள் : குஞ்சாகோ போபன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், அனகா
வெளியான தேதி : 14 ஜூன் 2024
நேரம் : 2 மணி 1 நிமிடம்
ரேட்டிங் : 2/5
அரசியல்வாதியின் மகளான அனகாவை காதலிக்கிறார் குஞ்சாக்கோ போபன். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் பதிவு திருமணத்தன்று ஸ்ருதி நேரிலும் வராமல் போனையும் எடுக்காததால் விரக்தி அடைந்த குஞ்சாக்கோ போபன் நன்றாக குடித்துவிட்டு எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குள் சென்று விடுகிறார். சிங்கம் ஒன்று திறந்த வெளி குகையிலிருந்து வெளியே வரும் அபாயம் இருக்கும் நிலையில் ஊழியர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்கின்றனர்.
அதேசமயம் பணக்கார குடும்பத்தில் வீட்டு மாப்பிள்ளையாக சென்று தனது வேலையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மனைவியின் கோபத்திற்கு ஆளாகி, அன்றைய தினம் தான் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள மிருகக்காட்சி சாலை ஊழியர் சுராஜ் வெஞ்சாரமூடு, குஞ்சாக்கோ போபனை காப்பாற்றுவதற்காக தானும் உள்ளே செல்கிறார். போதையில் அலம்பல் செய்யும் குஞ்சாக்கோ போபனை வெளியே இழுத்து வர முடியாமல் ஒற்றை ஆளாக அவர் சிரமப்படுகிறார்.
மிருகங்களுக்கு மயக்க ஊசி செலுத்தும் டாக்டர் அழைத்து வரப்பட்டு துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தப்பட அது தவறுதலாக சுராஜ் மீது பாய்கிறது. இதனால் அவர் தனது சுயநினைவை இழந்து தடுமாறுகிறார். போதை தெளிந்த குஞ்சாக்கோ போபன் மிருகக்காட்சி சாலையில் தான் மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து சுராஜையும் காப்பாற்றி அழைத்துச் செல்லும் விதமாக நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகிறது. இருவரும் சிங்கத்திடம் இருந்து தப்பித்தார்களா ? குஞ்சாக்கோ போபனின் காதல் என்ன ஆனது என்பது மீதிக்கதை.
இரண்டு அற்புதமான நடிகர்களை வைத்துக்கொண்டு உப்புச்சப்பு இல்லாத ஒரு கதையை படமாக எடுக்க வேண்டும் என்றால் இந்த படத்தின் இயக்குனர் ஜெய்.கேவிடம் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். நகைச்சுவை படம் தான் என்றாலும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரண காரியம் வேண்டாமா ? அதிலும் குஞ்சாக்கோ போபன் தன்னைக் காப்பாற்ற சுராஜ் போராடுவதையும் மீறி சிங்கத்திடம் செல்ல முயற்சிப்பதாக அரை மணி நேரம் பண்ணும் அலும்புகள் ஐந்து நிமிடத்திற்கு மேல் எரிச்சலையை ஏற்படுத்துகின்றன. அதேபோல சுராஜ் உள்ளே இறங்கியதும் இருவரும் சேர்ந்து தப்பிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் மிருகக்காட்சி சாலைகுள்ளேயே உருண்டு புரள்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
காட்சிக்கு காட்சி நகைச்சுவையாக நடிக்கும் குஞ்சாக்கோ போபனையும் வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். இதுநாள் வரை கெத்தாக சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுராஜ் வெஞ்சாரமூடுவையும் மீண்டும் காமெடிக்கு அழைத்து வருகிறேன் என்கிற பெயரில் காயப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கச்சிதமான கதைகளை தேர்ந்தெடுக்கும் இந்த இருவருமே எப்படி கதை விஷயத்தில் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை.
ஜூவுக்குள் மாட்டிக்கொண்ட தங்களது நாயகர்களை பார்த்து பதறும் வேலை மட்டும்தான் இரண்டு கதாநாயகிகளுக்கும். பொறுப்பாக செய்திருக்கிறார்கள். நாயகி அனகா சில சாயல்களில் அனுஷ்காவை ஞாபகப்படுத்துகிறார்.
ஒன்று விறுவிறுப்பான படம் பார்த்த அனுபவம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் மிருகக்காட்சி சாலைக்குள் சுற்றிப் பார்த்த அனுபவமாவது கிடைக்க வேண்டும்.. இரண்டும் இல்லாமல் ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெய் கே.
கிர்ர்ர் : உறுமல் அல்ல குறட்டை
பட குழுவினர்
கிர்ர்ர் (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்