விமர்சனம்
தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - அசோக் வீரப்பன்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - வைபவ், அனகா
வெளியான தேதி - 23 செப்டம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழர் கலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு கலையாக கூத்துக் கலை இருக்கிறது. முன்பெல்லாம் கிராமங்களில் எந்த ஒரு திருவிழா என்றாலும் கூத்து கண்டிப்பாக இருக்கும். இப்போதெல்லாம் அவற்றை அதிகம் பார்க்க முடிவதில்லை. கூத்துக் கலை மீதான ஆர்வம் அந்தக் கலைஞர்களுக்கே குறைந்து வருவதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.
பாரம்பரியமான கூத்துக் கலைஞர் குடும்பத்தில் வந்தவர் வைபவ். கூத்தில் பபூன் வேடம் தரித்து பாடி ஆடுபவர். அவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. அதற்குத் தேவையான பணத்தைச் சேர்க்க லாரி டிரைவர் வேலைக்குச் சேர்கிறார். நண்பன் இளையராஜாவுன் அப்படி ஒரு வேலைக்குச் சென்ற போது அவர் ஓட்டிய லாரியில் போதைப் பொருள் கடத்தியதாக அவரும், நண்பரும் கைது செய்யப்படுகின்றனர். போலீஸ் ஜீப்பில் செல்லும் போது இருவரும் தப்பித்து ஓடுகின்றனர். ஆனால், போதைப் பொருள் தடுப்பு எஸ்பி ஆன தமிழரசன் அவர்களைத் தீவிரமாகத் தேட ஆரம்பிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
'பபூன்' என தலைப்பை வைத்துவிட்டு படத்தில் பல சீரியசான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அசோக் வீரப்பன். போதைப் பொருள் கடத்தல், இலங்கைப் பிரச்சினை, உள்ளூர் அரசியல், தேசிய அரசியல், போலீஸ் அரசியல் என பல விஷயங்களைச் சேர்த்துள்ளார் இயக்குனர். முதல்வர் முதல் கவுன்சிலர் வரை படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இப்படி பல இடம் பெற்றுள்ளது, மையக் கருத்தை விட்டு திரைக்கதை நகர காரணமாக அமைந்துவிட்டது. ஒரே படத்தில் இவ்வளவு விஷயங்களைச் சேர்த்துள்ளதை தவிர்த்திருக்க வேண்டும்.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பெரிய ஈடுபாட்டுடன் வைபவ் நடிப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது. இந்தப் படத்திலும் இயக்குனர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. வெங்கட் பிரபு படத்தில் நடிப்பது போலவே நடித்துள்ளார். இது வேறு மாதிரியான படம், கதாபாத்திரம் என்று புரிந்தது போலத் தெரியவில்லை.
இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக அனகா. தங்கள் அகதி வாழ்க்கை எப்படிப்பட்ட நிலையில் உள்ளது என்று நறுக்குத் தெறித்தாற் போலப் பேசுகிறார். அவர் கண்களிலேயே அந்த சோகம் இயல்பாக வெளிப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு எஸ்பி ஆக தமிழரசன். 'டாணாக்காரன்' படத்தை இயக்கியவர், இதற்கு முன்பு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம். பல காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் ஷார்ப் ஆக உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் முடிந்த பின் அவர் பேசும் வசனம். வைபவ்வின் நெருங்கிய நண்பனாக ஆந்தகுடி இளையராஜா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இந்தப் படத்தில் கிராமியக் கலைஞனாக ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
போதைப் பொருள் கடத்தும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன். 'தனபாலன்' என ஒரு கதாபாத்திரப் பெயரை அனைவரும் சொல்லிக் கொண்டே பில்டப் கொடுக்கிறார்கள். அந்த பில்டப்பிற்கு கிளைமாக்சில் ஒரு அதகளம் பண்ணியிருக்க வேண்டும், விட்டுவிட்டார்கள்.
சந்தோஷ் நாராயணன் இப்படித்தான் பாடல்களைப் போட வேண்டும் என முடிவு செய்துவிட்டார் போலும். பின்னணி இசையில் சமாளித்திருக்கிறார். கடற்கரையோரப் பகுதிகளை நேரடியாகப் பார்ப்பது போல படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.
ஒரு மாறுபட்ட கடத்தல் ஆக்ஷன் படமாக வந்திருக்க வேண்டிய படம். எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என கொஞ்சம் ஓவராகச் சொல்லிவிட்டார்கள். கிளைக் கதைகளாகப் பல விஷயங்கள் சென்றதே மெயின் கதைக்கு வில்லனாக அமைந்துவிட்டது.
பபூன் - சிரிக்க அல்ல…