கடைசி உலகப் போர்
விமர்சனம்
தயாரிப்பு - ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட்
இயக்கம், இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனகா, நட்டி, நாசர்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
கடந்த காலக் கதைகள், நிகழ்காலக் கதைகள் என தமிழ் சினிமாவில் அதிகம் வந்ததுண்டு. ஆனால், எதிர்காலக் கதைகள் என்பது அபூர்வம்தான். இந்தப் படத்தில் எதிர்காலக் கதை, அதாவது 2028ல் நடப்பது போன்ற கதையை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
2028ம் ஆண்டில் தமிழகத்தில் முதல்வராக இருப்பவர் நாசர். ஆனால், அதிகார மையம் என்பது அவரது மச்சான் நட்டி-யிடம்தான் உள்ளது. மத்திய அரசு வரை தன்னுடைய அதிகாரத்தை வைத்திருக்கிறார். நாசருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரது வாரிசான அனகா-வை அடுத்த தலைமைப் பதவிக்குத் தயார்படுத்துகிறார் நட்டி. இதனிடையே, ஐ.நா சபைக்கு எதிராக 'ரிபப்ளிக்' என்ற அமைப்பை சில நாடுகள் உருவாக்குகின்றன. அவர்கள் அதிகாரத்தின் கீழ் இந்தியாவையும் கொண்டு வர தாக்குதலுக்கு வருகிறார்கள்.
ஆதியை சந்திக்கும் அனகா அவர் மீது காதல் கொள்கிறார். அனகாவிற்கு ஆதி தான் ஆலோசனை தருகிறார் என நினைக்கும் நட்டி, ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதியைக் கைது செய்ய வைக்கிறார். நடந்த வன்முறையில் சென்னையில் ஏற்பட்ட கலவரத்தால் இந்திய ராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறது. நட்டியும் கைது செய்யப்படுகிறார். ஊட்டிக்குக் கொண்டு செல்லப்படும் ஆதி, நட்டி அங்கு நடந்த தாக்குதலில் மாயமாகிறார்கள். அந்த சமயத்தில் ரிபப்ளிக் அமைப்பைச் சேர்ந்த படைகள் சென்னை மீது தாக்குதல் நடத்துகிறது. வெளி உலகத் தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. ரிபப்ளிக் அமைப்பால் தமிழகப் பகுதிகள் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டு நாசர் பிரதமர் ஆக அறிவிக்கப்படுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இசையமைப்பாளராக வந்து, நடிக்க ஆரம்பித்து, இயக்குனராகவும் மாறிய ஆதி, இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரே தயாரிப்பாளர் என்பதால்தான் ஒரு அறிவியல் பூர்வ எதிர்காலக் கதையை 'பட்ஜெட்' படமாக எடுத்திருப்பார் போலிருக்கிறது.
கல்லூரி மாணவர் தோற்றத்தில்தான் இருக்கிறார். வனப் பகுதியில் அலுவலராக இருக்கிறார். ஆனால், அவர் ஐநா சபையின் தீவிரவாத எதிர்ப்புப் படையில் பயிற்சி வழங்கியவர் என்று வசனங்களின் ஊடாக ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார்கள். முதலில் காதல் நாயகனாக இருப்பவர், இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். 'ரிபப்ளிக்' அமைப்பின் ராணுவத்தை சிலர் துணையுடன் தலைமையேற்று நடத்தி வெற்றி பெறத் துடிக்கிறார். தன் புகழ் பாட சில காட்சிகளையும், வசனங்களையும் சேர்த்துக் கொள்கிறார். தயாரிப்பாளராக முதலீடு செய்து அதைக் கூட வைத்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி ?.
ஆதியின் காதலியாக, முதல்வர் நாசரின் மகளாக அனகா. மாடர்ன் டிரஸ்ஸில் காதலியாகவும், புடவையில் முதல்வரின் மகளாகவும் மாறி மாறி வருகிறார். மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என சண்டை போடுகிறார்.
தான் ஒரு 'கிங் மேக்கர்' என்று சொல்லிக் கொண்டு தான் செய்வதை பேசிப் பேசியே புரிய வைக்கிறார் நட்டி. பின்னணிக் குரலில் ஒரு பக்கம் கதையின் போக்கை அவர் சொல்லிப் புரிய வைப்பது போதாது என்று, அவரது கதாபாத்திரம் மூலமாகவும் பேசித் தள்ளுகிறார்.
நாசர், முனிஷ்காந்த், ஹரிஷ் உத்தமன், கல்யாண், அழகம் பெருமாள், ஷாரா என மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு ஆங்காங்கே கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
ஆதியின் வழக்கமான பாடல்கள் ஆங்காங்கே வந்து போகிறது. ஒளிப்பதிவு ஓகே ரகம்தான். டிஐ சரியாகச் செய்யவில்லை போல. நாம் பார்த்த மல்டிபிளக்ஸ் தியேட்டரிலேயே பல காட்சிகள் டல்லடிக்கிறது. எடிட்டிருக்குத்தான் நிறைய வேலை.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை கதை, கதையாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஒன்றைப் புரிந்து கொண்டு அடுத்த கதைக்கு நுழைந்தால் அடுத்து ரெடியாக மற்றொரு கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இப்படி கிளைமாக்ஸ் வரை புதிது புதிதாக கிளைக் கதைகளாகப் போய் நாம் ரசித்து முடிவதற்குள் மூன்றாம் உலகப் போர் வந்தாலும் வந்துவிடும். விபரீதமாகக் கற்பனை செய்தததெல்லாம் சரிதான், ஆனால், அதைத் தெளிவாக, அழுத்தமாக, பிரம்மாண்டமாகச் சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம்.
கடைசி உலகப் போர் - அதீத கற்பனைப் 'போர்'
கடைசி உலகப் போர் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கடைசி உலகப் போர்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்