வீரன்
விமர்சனம்
தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் - ஏஆர்கே சரவன்
இசை - ஆதி
நடிப்பு - ஆதி, அதிரா ராஜ், வினய் ராய், சசி
வெளியான தேதி - 2 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 3/5
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வருவது மிகவும் அபூர்வம். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் அப்படிப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. இந்த 'வீரன்' அப்படிப்பட்ட ஒரு படம்தான். குறிப்பாகக் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு படமாகவே தெரிகிறது. அவர்கள் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படமாக இப்படத்தை இயக்குனர் ஏஆர்கே சரவன் கொடுத்திருக்கிறார்.
வீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி, அதிரா ராஜ், சசி ஆகியோர் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் படித்த போது திடீரென இடி தாக்கியதில் ஆதி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. பின் அவர் சிங்கப்பூர் சென்றுவிடுகிறார். பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வருகிறார். அவருடைய ஊரில் ஏதோ ஒரு ஆபத்து நிகழப் போகிறது என்ற கனவு அவருக்கு அடிக்கடி வருகிறது. இடி தாக்கியதில் அவருக்குள் கைகளை சொடுக்கினால் மின்னலைப் போல வெளிப்படுத்தும் சக்தி, மற்றவர்கள் மூளையை சில நிமிடங்கள் கட்டுப்படுத்தும் சக்தி கிடைக்கிறது. அந்த கிராமத்தில் நீளமான குழாய்களை பதித்து ஒரு மோசமான திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் வினய் ராய் குழுவினரை அவர் எதிர்க்க ஆரம்பிக்கிறார். தனது கிராமத்தையும், மக்களையும் அவர் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிவியல் படமாகச் சொன்னால் அது சாதாரண ரசிகர்களுக்குச் சென்று சேராது என நினைத்து, வீரன் கோவில், மக்களின் நம்பிக்கை, பணத்தாசை என சில பல கமர்ஷியல் விஷயங்களை படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சரவன். ஒரு பக்கம் பக்தியையும் சொல்லி மற்றொரு பக்கம் அதையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என கொஞ்சம் குழப்பமாகவும் கொடுத்திருக்கிறார்.
கிராமத்து இளைஞர் குமரன் கதாபாத்திரத்தில் ஆதி. சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்று சொன்னாலும் 'வீரன்' ஆக மாறும் போது மட்டும் ஆக்ஷனில் அசத்துகிறார். மற்ற சமயங்களில் அந்த கிராமத்து இளைஞராக யதார்த்தமாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களில் அவருடைய நடிப்பில் கொஞ்சம் அலட்டல் இருக்கும். இந்தப் படத்தில் அதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஆதியுடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்களில் படத்தின் கதாநாயகி அதிரா ராஜ், ஆதியின் நண்பன் சசி ஆகியோரும் சினிமாத்தனமில்லாத தோற்றத்திலும், நடிப்பிலும் கவர்கிறார்கள். ஆதியை ஒருலையாகக் காதலித்தாலும் அந்தக் காதலை சொல்லாமலே மறைத்து தோழியாக இருக்கிறார் அதிரா. அவர்களுக்குள் காதல் காட்சிகள் வைக்காமல் அவர்கள் காதலையும் திரைக்கதையின் போக்கில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஆதியின் நண்பனாக யூடியூப் வீடியோக்களில் நடித்த சசி, எந்த இடத்திலும் நடிக்கிறோம் என்று தெரியாமல் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் இன்னும் ஜொலிப்பார்.
முக்கிய வில்லனாக வினய் ராய். ஆனால், சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தின் இயக்குனர் சரவன் இதற்கு முன்பு இயக்கிய 'மரகத நாணயம்' படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் நிறைய ரசிக்க வைத்தார்கள். இந்தப் படத்தில் அவர்கள் ஏமாற்றத்தைத் தந்துள்ளார்கள். அவர்களது கதாபாத்திரங்களில் நகைச்சுவை அவ்வளவாக எடுபடவில்லை.
ஆதியின் இசையில் அவருடைய வழக்கமான ஸ்டைலில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 'வீரன்' ஆக மாறி ஆதி சண்டையிடும் காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர் நன்றாக உழைத்திருக்கிறார்.
சில ரிபீட் காட்சிகள், நீளமான காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. விறுவிறுப்பாக இன்னும் பல காட்சிகளை யோசித்து சுவாரசியத்தைச் சேர்த்திருக்கலாம். அப்படி வாய்ப்புகள் இருந்தும் அதை யோசிக்கத் தவறிவிட்டார்கள். திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காமல் அடிக்கடி கொஞ்சம் தடம் மாறுவதும் படத்தின் மைனஸ்.
வீரன் - ஊர்க்காவலன்