அமிகோ காரேஜ்
விமர்சனம்
தயாரிப்பு - பியூப்புள் புரொடக்ஷன் ஹவுஸ்
இயக்கம் - பிரசாந்த் நாகராஜன்
இசை - பாலமுரளி பாலு
நடிப்பு - மாஸ்டர் மகேந்திரன், அதிரா ராஜ்
வெளியான தேதி - 15 மார்ச் 2024
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2.25./5
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாகவும் கொலைகாரனாகவும் மாறுவதுதான் படத்தின் கதை.
ரவுடியிசப் படங்களுக்கென சில இயக்குனர்கள் ஒரு 'பெஞ்ச் மார்க்'ஐ உருவாக்கி வைத்துவிட்டார்கள். அதோடு ஒப்பிடும் போது இந்தப் படம் முதல் படியில்தான் உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர், வீட்டுக்கு ஒரே மகன் மகேந்திரன். அவர்கள் பகுதியில் உள்ள ஜிஎம் சுந்தரின் காரேஜ் தான் அவரும், நண்பர்களும் கூடும் இடமாக இருக்கிறது. கஞ்சா கடத்தல், ரவுடியிசம் என இருப்பவர் ஜிஎம் சுந்தர். முக்கிய ரவுடியான முரளிதரன் சந்திரனின் தம்பி தாசரதியுடன் மகேந்திரனுக்கு ஒரு சண்டை வருகிறது. அதன் காரணமாகவே மகேந்திரனும் கத்தியைத் தூக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
'மாஸ்டர்' என்பது மகேந்திரனின் பெயரின் முன்னால் ஒரு அடையாளமாக இருப்பதால் அவரை அந்தக் காலத்து குழந்தை நட்சத்திரமாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஒரு ரவுடியாக அவரைப் பார்க்க முடியவில்லை. தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திக் கொள்ள மகேந்திரனும் முடிந்தவரை முயற்சிக்கிறார்.
மகேந்திரனின் காதலியாக அதிரா. ஹிப்ஹாப் தமிழா நடித்த 'வீரன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தப் படத்தில் அவருக்கான பங்களிப்பு குறைவுதான். இருந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் பாந்தமாய் நடித்திருக்கிறார்.
மகேந்திரனின் மானசீக குருவாக ஜிஎம் சுந்தர். அவரை ஒரு பெரிய ரவுடி போல காட்டுகிறார்கள். ஆனால், அதற்கான காட்சிகள் இல்லை. முக்கிய வில்லனாக தாசரதி நடித்திருக்கிறார். அவரது அண்ணனாக முரளிதரன் சந்திரன் தோற்றத்தில் மிரட்டுகிறார்.
பாலமுரளி பாலு பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து லைட்டிங்குகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
கேங்ஸ்டர் படம் என்றால் அதற்கான பரபரப்பான காட்சிகள் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அப்படியான திரைக்கதை மிஸ்ஸிங். கற்க வேண்டியதும், அனுபவமும் தேவைப்படுகிறது.
அமிகோ காரேஜ் - பட்டி, டிங்கரிங் தேவை…