தினமலர் விமர்சனம் » விழா
தினமலர் விமர்சனம்
"விழா, இதுவும் "மதயானைக்கூட்டம் மாதிரி இழவு வீட்டில் ஆரம்பமாகும் கதைதான்! ஆனால், இழவு வீட்டில் ஒப்பாரி பாடவந்த பெண்ணுக்கும், தப்பு அடிக்க வந்த பையனுக்குமிடையேயான காதல்! படம் முழுக்க, இழவு, இழவு... இழவு வீடு... ஒப்பாரி, தப்பாட்டம்... ஆனால் படத்திற்கு "விழா எனும் பெயர்காரணம் தான் புரியாத புதிர்!
பெரிய வீட்டு சாவுக்கு ஒப்பாரி பாடல் பாட பாட்டியுடன் வரும் நாயகி ராக்கம்மா எனும் மாளவிகா மேனன் மீது, அதே சாவுக்கு தப்படிக்க வரும் சுந்தரம் எனும் மகேந்திரனுக்கு காதல் ஏற்படுகிறது. ஒரே சாதி, சனம் என்றாலும் "ஒப்புக்கும், "தப்புக்கும் காதல் பூத்து, காய்த்து, கசிந்துருகி கனியாவதற்கு மேல்சாதியினர் தடையாக இருக்கின்றனர். எப்படி?, மேல்சாதி வீட்டு வாரிசின் தகுதி கம்மியான காதலுக்கு, ஹீரோ மகேந்திரன் உதவுவது, மகேந்திரனின் காதலுக்கு உபத்திரமாகிறது! அப்புறம்? அப்புறமென்ன.? தடை பல தாண்டி தன் நண்பனின் காதலையும் சேர்த்து வைத்து, தன் காதலிலும் ஹீரோ கரை சேர்வது தான் "விழா!
தாரைதப்பட்டை அடிப்பதில் வல்லனாக "தப்பு சுந்தரமாக மகேந்திரன். மாஜி மாஸ்டர் மகேந்திரனாக தமிழ் சினிமாவில் நடிப்பு பயின்றவர் என்பதால் பதட்டமே இல்லாமல் பட்டையை கிளப்பி இருக்கிறார். பலே!
ஒப்பாரியில் எல்லாம் ஒரு சேதி வைத்து பாடும் ராக்கமாவாக மாளவிகா மேனன், கண்களாலேயே காதல் பாடுகிறார். காளி, "காதல் தண்டபானி, பிள்ளையார் பட்டி ஜெயலட்சுமி, தேனி முருகன், யுகேந்திரன், "கல்லூரி வினோத், "கல்லூரி கோபால், ஸ்மைல் செல்வா எல்லோரும் எக்கச்சக்கமாய் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் யுகேந்திரன் மட்டுமே சபாஷ் வாங்குகிறார்.
ராஜா குருசாமியின் "நறுக்கு தெறிக்கும் வசனம், யு.கே.செந்தில்குமாரின் ஓவிய ஒளிப்பதிவு, ஜேம்ஸ் வசந்தனின் இனிய இசை எல்லாம் இருந்தும் பாரதி பாலகுமாரனின் இயக்கத்தில், நாயகன், நாயகி இடையேயான இழவு வீட்டு காதலைக்காட்டிலும், நாயகர் மகேந்திரனின் "தப்புக்குச்சி ப்ளாஸ்பேக் உருக்கம்!
ஜேம்ஸ் வசந்தனின் இனிய இசையில், "என்னாச்சோ ஏதாச்சோ..., "நெஞ்சடச்சி நின்னேனே..., "மதுரை என்னும்... உள்ளிட்ட பாடல்களுக்காகவும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காகவும் "விழாவை கொண்டாடலாம்!
ஆக மொதத்தத்தில் "விழா - பாடல்கள் விழா - படம் "சற்றே விறுவிறுப்பு இல்லா உலா!
--------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
இழவு வீட்டில் ஒப்பாரிப்பாட்டுப்பாடும் பெண், தப்பாட்டம் எனப்படும் ஒரு கிராமியக்கலைக்கான தப்புமேளம் கொட்டும் கலைஞன் இருவருக்கும் இடையே நிகழும் சந்திப்பில் முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல். அடுத்தடுத்த காதல் சந்திப்புக்கு அந்த ஊரில் ஏதாவது இழவு விழுந்தாத்தான் உண்டு. இப்படி சுவராஸ்யமாகப்போகும் காதல் கலாட்டாக்களுக்கு நடுவே நாயகனுக்கு தக்க சமயத்தில் உதவும் நபர்க்கு நாயகன் நன்றிக்கடன் பட்டாகவேண்டிய சூழல். அவருடன் நாயகிக்கு நிச்சயமாகி விடுகிறது.என்னநடக்குது என்பதே மிச்ச மீதிக்கதை.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஃபைனல் வரை வந்த உதிரி எனும் குறும்படம் தான் இந்த விழா எனும் சினிமா. காதலில் சொதப்புவது எப்படி குறும்படம், சினிமாவாக வந்து ஹிட் ஆன பின் 2வதாக சினிமா ஆகும் தமிழ் குறும்படம் இது. அடுத்த படம் பண்ணையாரும் பத்மினியும். மூன்றிலும் வேறுவேறு இயக்குநர். நல்ல முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஹீரோ மாஸ்டர் மகேந்திரன். இயல்பாக நடிக்கிறார்.கிராமியம் கலந்த முகம் என்பதால் பாத்திரத்துடன் கலந்து இயல்பாக தோன்றுகிறார். ஹீரோயின் புதுமுகம் மாளவிகா மேனன். இவன் வேற மாதிரியில் நாயகிக்கு தங்கையாக வந்தவர். ஒப்பனையே இல்லாத அல்லது ஒப்பனை இட்டதே தெரியாத எளிமையான அழகு. கண்ணியமான உடை. காட்சிகள் படத்துக்கு பக்க பலம்.
ஓப்பனிங்கில் ஜேம்ஸ் வசந்தனின் துள்ளாட்ட இசையில் இழவு வீட்டில் நடக்கும் ஒப்பாரிப்பாட்டு, கரகாட்ட கோஷ்டிப்பாட்டுடன் கும்மாளமான ஓப்பனிங் சாங் களை கட்டுகிறது. அதைத்தொடர்ந்து கிராமத்திலிருக்கும் எல்லா பாட்டிகளுக்கும் இடையே சண்டை வர ஹீரோ அண்ட் கோ காரண்மாகும் காட்சி ஆண்பாவம் ஆர் பாண்டியராஜன், எம்.சசிகுமார் டைப் காமெடி. குட்! எல்லாப் பாத்திரங்களும் திரைக்கு புதுசு என்பதால் நேட்டிவிட்டி இயல்பு கலந்த எதார்த்த நடிப்பு, சபாஷ் போட வைக்கிறது.
அடுத்த சந்திப்பு நடக்க ஊரில் யாராவது சாக வேண்டும் என அலைவது செம காமெடி. அந்த சிச்சுவேஷனில் வரும் ”முக்காக்கிழவர், முக்காக்கிழவி என் காதல் வாழ நீ கொஞ்சம் செத்துப்போ பாட்டு அதகளம் ... 60-ம் கல்யாணம் நடக்கும் வீட்டில் புகுந்து இழவு வீடாக நினைக்கும் காமெடியும் புதுசு. இப்படி படம் முழுக்க இழவு வீட்டு சம்பிராதயங்களுக்கு இடையேவே முழுக்கதையும் நகருவதால்கொஞ்சம் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. க்ளைமாக்ஸ் கடைசி 20 நிமிடங்கள் இழுவை.
சி.பி.கமெண்ட் - விழா - எளிமையான காதல் கதை மற்றும் இழவு வீடு. கவனம் ஈர்க்கத் "தவறி விட்டார்கள்"