தினமலர் விமர்சனம்
விழா படத்திற்கு அப்புறம் மிஸ்டர் ஆன மாஸ்டர் மகேந்திரன் நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். ஒரே லொகேஷன் என்பதால் சற்றே போரடித்தாலும் முழுக்க, முழுக்க ஒரு போலீஸ் ஸ்டேசன் செட்டிற்குள்ளேயே படமாகி இருக்கும் படம் என்பதால், விந்தை கொஞ்சம் வித்தியாசமான படம் தான். அது விறுவிறுப்பான படமா? பார்ப்போம்...
கதைப்படி., கார்த்திக் எனும் மகேந்திரனும், காவ்யா எனும் மனிஷாஜித்தும் திருட்டுத்தனமாக லாரியில் ஏறி ஊரில் இருந்து சென்னைக்கு ஓடிவருகின்றனர். வந்த இடத்தில் போலீசில் சிக்கும் இருவரும் சென்னையில் உள்ள ஒரு காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு, விவரமாக விசாரிக்கப்படாமலேயே ஒரு ஓரமாக உட்கார வைக்கப்படுகின்றனர். இருவரது வீட்டிற்கும் திருட்டு காதல்ஜோடி சிக்கியிருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டு வீட்டிலிருந்து, ஊரில் இருந்து அவர்களது பெற்றோரும், உற்றாரும் வருவதற்குள் அந்த காவல்நிலையத்திற்குள் மற்றவர்களால் நடக்கும் காமெடி கலாட்டாக்களும், சப் இன்ஸ் ஆதேஷ், கதாநாயகி மனிஷாவிடம் நடத்தும் காமநெடி கலாட்டாவும் தான் "விந்தை" மொத்தப்படமும்! அது பல இடங்களில் காமெடியாக இல்லாமல், பெரும் கடியாய் இருப்பதுதான் சற்றே கொடுமை!
ஆனாலும், க்ளைமாக்ஸில் நாயகர், நாயகி இருவரும் காதலர்கள் அல்ல, மகேந்திரன் அப்பாவின் அடக்குமுறை பிடிக்காமல் மிலிட்டரி வேலைக்கு போக பிடிக்காது ஓடிவந்தவர் என்பதும், மனிஷா, மணமேடையில் இருந்து கல்யாணம் பிடிக்காமல் மேலே படிக்க வேண்டும் என ஓடிவந்தவர்... என்பதும் செம டுவிஸ்ட்! ஆனாலும், அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டுமே? என்பதுதான் நம் கேள்வி! கார்த்திக்காக மகேந்திரன், காவ்யாவாக மனிஷாஜித், எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், ஆதேஷ், நெல்லைசிவா, முத்துக்காளை, சுப்புராஜ், காதல் சரவணன், சிசர் மனோகர், டி.ரவி. செந்தி, தவசி உள்ளிட்ட எல்லோரும் மீட்டருக்கு மேல் நடித்திருக்கின்றனர். சப் இன்ஸ் ஆதேஷ், நாயகி மனிஷாவுக்கு அச்சுறுத்தல் என்றாலும் ரசிகனுக்கு ஆறுதல்!.
ரத்தீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு, வில்லியம்ஸின் இசை, லாராவின் எழுத்து, இயககம் எல்லாம் இருந்தும் ஓவர்- ஆக்டிங் காமெடிகளால் விந்தை ரசிகனை - நொந்தாய்.... என்று அலற விட்டுவிடுகிறது....பாவம்!