3.5

விமர்சனம்

Advertisement

"மன்னர் காலத்து விலை மதிக்க முடியாத மரகத நாணயம் ஒன்றை தொட்டவன் கெட்டான்... செத்தான்" எனும் கருவுடன் அக்ஸஸ் பிலிம்பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில், மிருகம், ஈரம் பட நாயகர் ஆதியுடன், நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த் - ராமதாஸ், டேனி, அருண்ராஜா காமராஜ், கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம், சங்கிலி முருகன் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, ஏஆர்கே.சரவன் இயக்கத்தில் வந்திருக்கிறது "மரகத நாணயம்"

கதைப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆண்ட இரும்புறை அரசன், தன் சிறந்த ஆட்சியின் நல் சாட்சியாக ஒரு விலை மதிக்க முடியாத மரகத நாணயத்தை தயார் செய்து தன் ராஜ்ஜியத்தில் பத்திரமாக பாதுகாத்து வந்தார். தான் இறக்கும் தருவாயில் தன் கல்லறையில் தன்னுடன் சேர்த்து அந்த மரகத நாணயத்தையும் புதைக்க செய்து மடிந்து போன இரும்புறை அரசன், பல தலைமுறை தாண்டி அந்த மரகத நாணயத்தை தன் கல்லறையில் இருந்து திருடி தங்கள் வசம் வைத்துக் கொள்ள நினைத்து, மரகத நாணயத்தை தொட்ட பலரையும் ஆவி உருவில் வந்து பலி வாங்கி வருகிறார்.

இப்படி இரும்புறை அரசனது ஆவி அது வரை 132 பேரை பலி வாங்கியது தெரிந்தும், சின்ன அளவில் அதிர்ஷ்ட கல், கடத்தும் முனிஷ்காந்த் கும்பலில் இருக்கும் ஹீரோ ஆதியும், அவரது காமெடி நண்பரும், தன் மாமாவை இதே மரகத நாணய தேடல் மேட்டரில் காவு கொடுத்தவருமான டேனியும் சேர்த்து, பெரிய கடத்தல் பார்ட்டி மைம் கோபி வாயிலாக, சைனாக்காரன் ஒருவரது பத்து கோடி பணவாக்குறுதிக்கு செவி சாய்த்து, மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ்வின் உதவியுடன் மரகத நாணயத்தை கடத்தி வந்து தர களம் இறங்குகின்றனர்.

அதில் முதல் பலியாக அவர்களது பாஸ் முனிஷ்காந்த் - ராமதாஸ் மூர்ச்சையாகிப் போக, அவரது பூத உடம்புக்குள் புகும் காமெடி டேனியின் மரகத நாணய மேட்டர் தெரிந்த மாமா, இதே மேட்டரால் அந்த மரகத நாணய மேட்டரை நன்கு அறிந்து, தெரிந்து, இறந்து போன தன், சகாக்கள் இன்னும் மூவரையும் தன் ஆவி சக்தியால் தட்டி எழுப்பி, புதிய பூத உடல்கள் மூன்றில் இறக்கி, ஹீரோ ஆதிக்கும் அவரது, நண்பர் டேனிக்கும் உதவி புரிகின்றார்.

அதில் ஒரு பூத உடல், கணவனது டார்ச்சர் தாங்காது இறந்த ஆதியின் மாஜிக் காதலி நிக்கி கல் ராணியின் உடல் என்பது, ஆதிக்கு இந்த மரகத நாணய கடத்தல் விஷயத்தில் கூடுதல் உத்வேகத்தை தருகிறது. அப்புறம்? அப்புறமென்ன..? ஆதியும், டேனியும் முனிஷ், நிக்கி உள்ளிட்ட அந்த நான்கைந்து ஆவிகள் சுமந்த உடல்களின் உதவியுடன் மரகத நாணயத்தை கைப்பற்றி கோடிக்கணக்கில் காசு பார்த்தனரா? அல்லது அதேமரகத நாணயத்தை தேடி அலையும் பெரும் தாதா ஆனந்தராஜிடமும் அவரது ஆட்களிடமும் சிக்கினரா? அல்லது ஆதி, ஆனந்தராஜ் உள்ளிட்ட அனைவரும், இரும்புறை அரசனின் விசித்திர டிரக்கில் சிக்கி அந்த 132 பேர் மாதிரியே செத்து மடிந்தனரா? என்பதற்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும், செம தமாஷாகவும் பதில் சொல்கிறது "மரகத நாணயம்" படத்தின் மீதிக் கதையும், களமும், காட்சிப்படுத்தல்களும்.

இந்தக் கதையையும், காட்சிப்படுத்தல்களையும் எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும், திகிலாகவும், திகட்டாத வகையிலும் ரசிகனுக்கு தர முடியுமோ? அத்தனைக்கு அத்தனை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் மொத்தப் படத்திலும் தந்திருக்கின்றனர் ஒட்டு மொத்த "மரகத நாணயம்" படக்குழுவினரும், அதற்காக அவர்கள் அனைவருக்கும் ஒரு "ஹேட்ஸ் ஆப்" சொல்லி பாராட்டியே தீர வேண்டும்.

கடத்தலுக்கு புதியவராக, கதாநாயகராக ஆதி, செங்குட்டுவன் எனும் பாத்திரத்தில் தன்னை மட்டும் நம்பாமல் கதையை நம்பியிருப்பதால் இடையில் ஏற்பட்ட சறுக்கல்களை சரி கட்டிக் கொள்ளும் வகையில் ஜெயித்திருக்கிறார்.

"ஏய்கிழிஞ்ச வேஷ்டி... யாரைப் பார்த்து பொண்ங்கற..." என மிரட்டலாக கேட்டபடி சாணக்யா எனும் பாத்திரத்தில் நிக்கி கல்ராணி செம மப்பும் மந்தாரம். மேல் வாய்ஸில் அதுவும் கட்டைக் குரலில் முக்காலும் முழுப்படத்திலும் வந்தாலும் ஆதியைக் கட்டிலும் அதிகம் ரசிகனை வசீகரிக்கிறார் அம்மணி.வாவ்!

ஒரு மைக்கும், ஸ்பீக்கர் செட்டுமாக நான்கைந்து அடியாட்கள் சில சித்ரவதையாளர்களுடன் ஆனந்தராஜ் செய்யும் அடாவடித்தனம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுவித வில்லத்தனம் என்பது ஹாசம்.

முனிஸ்காந்த் - ராமதாஸ், ராமதாஸாக முதலில் ஒரு முரட்டு வாய்ஸிலும் அதன்பின் ஆவியாக தன் ஒரிஜினல் வாய்ஸிலும் கலக்கியிருக்கிறார். இவர்களை மாதிரியே இளங்கோவாக ஹீரோ ஆதியின் நண்பராக டேனி, நேசமணியாக அருண்ராஜா காமராஜ், மாந்திரீகர் - கோட்டா சீனிவாசராவ், பைலட் - பிரம்மானந்தம், பாண்டுரங்கன் - எம்.எஸ்.பாஸ்கர், ஜான் - மைம் கோபி, அடியாளாக வரும் முருகானந்தம், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் தமிழ் அய்யாவாக வந்து ஆவி தமிழ் பேசும் சங்கிலி முருகன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

பிரசன்னா ஜி.கே.வின் படத்தொகுப்பில் படம் பக்கா என்றால், பிவி.ஷங்கர் ஒளிப்பதிவில், "மரகத நாணயம்" மேலும் மிளிர்ந்திருக்கிறது, ஒளிர்ந்திருக்கிறது.

திபுநைனன் தாமஸ் இனசயில், பாடல்களும் பின்னணியும் பிரமாதம்.

ஏஆர்கே.சரவன் எழுத்து, இயக்கத்தில், ஆவி, பேய்களை ஒட்டப் பயன்படும் எலுமிச்சை பழங்களை ஆவிகளே கையாள்வது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், க்ளைமாக்ஸில் தாங்கள் அது நாள் வரை புகுந்திருந்த பூத உடல்களை விட்டுப் போகும் ஆவிகளில், சங்கிலி முருகனின் உடம்பில் புகுந்திருந்த தமிழய்யா ஆவி, "நான் போகலாம் என் இனிய தமிழ், இன்ப தமிழ் என்றும் இறந்து போகாது..." என சவக்குழியில் விழுவதும் உள்ளிட்ட உருக்கமான காட்சிகளும், அஷ்டமி அது ரொம்ப ரொம்ப நல்ல நாள், ஆனா அதை நாம கெட்ட நாளா ஒதுக்கி வைக்கிறோம்... என்பது உள்ளிட்ட தெரியாத விஷயங்களை தெரியபடுத்தியிருக்கும் விதமும், "அவன் மேட் இன் சைனா, ஐயம் மேட் இன் இந்தியா அவன் எப்பவாவது வெடிப்பான் நான் எப்பொழுதும் வெடிப்பேன்..." என்பது உள்ளிட்ட பன்ச்"களும், "மரகத நாணயம்" படத்திற்கு மகுடம் வைத்திருக்கிறது!

மொத்தத்தில், "மரகத நாணயம் - மரகதம் ரசிகன் கொடுத்த காசுக்கு நிச்சயம், நியாயம்!"

 

மரகத நாணயம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மரகத நாணயம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓