விமர்சனம்
தயாரிப்பு : 7ஜி பிலிம்ஸ்
இயக்கம் : அறிவழகன்
நடிகர்கள் : ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா.
வெளியான தேதி : 28.02.2025
நேரம் : 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5
கதை சுருக்கம்
மூணாறு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் மர்மமான முறையில் இரண்டு பயிற்சி மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை கண்டுபிடிப்பதற்காக மும்பையில் பேய் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆதியை வரவழைக்கின்றனர் கல்லூரி நிர்வாகத்தினர். ஒருவித சிறப்பு கருவி மூலம் ஆவிகளின் சப்தத்தை வைத்து கண்டுபிடிக்கும் வேலையை தொடங்குகிறார் ஆதி. அப்போது அங்கு பயிற்சி மருத்துவராக பணிபுரியும் லட்சுமி மேனனுக்கும், இந்த தற்கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ஆதி. இந்த நிலையில் 3-வதாக மற்றொரு மருத்துவ மாணவியும் தற்கொலை செய்து கொள்கிறார். அப்போதும் லட்சுமி மேனன் கிரைம் சீனில் இருக்கிறார். அதன்பிறகு நடந்தது என்ன? இந்த தற்கொலைகளுக்கெல்லாம் காரணம் யார்? எதற்காக இது நடக்கிறது? என்பது படத்தின் மீதி கதை.
ஈரம் படத்தில் தண்ணீர் மூலம் வித்தியாசமாக பேயை காட்டி இருந்த இயக்குனர் அறிவழகன் இந்த படத்தில் சப்தம் மூலமாக பேய் வருவதை காட்டியுள்ளார். ஆனால் இது ஈரம் படத்தின் 2-ஆம் பாகம் இல்லை. ஒரு ஹாரர் படம் என்றால் டெம்ப்ளேட்டான சில விஷயங்கள் இருக்கும். அது அனைத்தும் இந்த படத்தில் இருந்தாலும் அதைத் தாண்டி சப்தம் என்கிற ஒரு வித்தியாசமான கான்செப்ட்டை இயக்குனர் கொடுத்துள்ளார். வழக்கமான பேய் படம் என்று இல்லாமல், ஒரு கான்செப்ட்டை கையில் எடுத்து அதற்கு தேவையான ஜஸ்டிபிகேஷனை தன்னுடைய ஆராய்ச்சி மூலம் திரைக்கதையில் ஆதாரத்துடன் சொல்லி உள்ளார் இயக்குனர்.
ஹாரர் படம் என்றால் கூப்பிடுங்க ஆதியை.. என்று சொல்லும் அளவுக்கு பேய் படத்துக்கு ஏற்ற முக பாவங்களுடன் கச்சிதமாக அந்த கேரக்டரில் பொருந்துகிறார். அதேபோல் கதாநாயகிக்குள் பேய் புகுந்துவிடும் என்று இயக்குனர் சொன்னால் அதற்கு ஏற்ற உடல் மொழியை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அந்த வேலையை லட்சுமி மேனன் இதில் சிறப்பாக செய்துள்ளார். அதோடு படத்தில் எதிர்பார்க்காத முக்கியமான கேரக்டரில் சிம்ரனும், லைலாவும் கலக்கியுள்ளனர். ரெடின் கிங்ஸ்லியின் காமெடி கதைக்கு பெரிதாக உதவவில்லை. எம்எஸ் பாஸ்கர், ராஜூ மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.
பேய் படம் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதிலும் இந்த படத்தில் சப்தம் தான் பேய் என்பதால் இசையமைப்பாளர் தமன் பெரிய மெனக்கடலை கொடுத்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சி தியேட்டரில் பார்க்கும் போது ரசிக்க முடிகிறது. ஒரு காட்சி முழுவதும் வெள்ளை திரையில் பின்னணி இசை (ஒலி) மூலமாகவே ரசிக்க வைத்துள்ளார். அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. ஹாரர் படத்திற்கு தேவையான போட்டோகிராபியை அழகாக கொடுத்துள்ளார்.
பிளஸ் & மைனஸ்
பேய் படம் என்றாலே பார்த்து பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சப்தம் மூலமாக பேயை காண்பித்துள்ளது பிளஸ். அதேநேரம் பேய் படம் என்றால் லாஜிக் தேவையில்லை என்பதற்காக பல காட்சிகள் மேஜிக்காகவே இருப்பது மைனஸ். அதேபோல் என்னதான் இயக்குனர் ஆராய்ச்சி செய்து சப்தம் மூலமாக பேய் வரும் என்றாலும், வழக்கமாக பழிவாங்கும் பேயை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு கொஞ்சம் கனெக்ட் ஆகவில்லை என்றே தோன்றுகிறது.
சப்தம் - மிரட்டல்